மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

சட்டமன்றத் தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் கமிஷனர் இன்று வருகை!

சட்டமன்றத் தேர்தல் எப்போது?  தலைமை தேர்தல் கமிஷனர் இன்று வருகை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து தேர்தல் எப்போது என்பதை முடிவு செய்ய இந்தியத் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா இன்று (பிப்ரவரி 10) சென்னை வருகிறார். அவர் இரண்டு நாட்கள் முகாமிட்டு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 15ஆவது சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல் கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் சட்டசபையின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி10) முதல் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இந்தியத் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர்.

இந்தக் குழுவில், தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா, துணை தேர்தல் கமிஷனர் சந்திரபுஷன் குமார், கூடுதல் இயக்குநர் ஜெனரல் சேபாலி சரண், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, செயலாளர் மலே மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று 12.15 முதல் மதியம் 2 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசுகிறார். இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தேமுதிக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 10 கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

கூட்டத்தில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் இரண்டு நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்போது, இந்தியத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவிடம் தங்கள் கட்சியின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாகக் கொடுக்கலாம். மேலும், தலைமை தேர்தல் அதிகாரிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மதியம் 3.30 மணிக்கு தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இந்தியத் தேர்தல் கமிஷனர், மாலை 4 மணிக்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை (பிப்ரவரி 11) காலை 10 மணிக்கு தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறை நிறுவனங்களுடன் இந்தியத் தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர், மதியம் 1 மணிக்கு இந்தியத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கின்றனர்.

நாளை மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை, அரசியல் கட்சி பிரதிநிதிகளை இந்திய தேர்தல் கமிஷனர் சந்தித்து பேசுகிறார். இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்தல் தொடர்பான ஏஜென்ஸி நிர்வாகிகளுடனும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இந்திய தேர்தல் கமிஷனர் சந்தித்து பேசுகிறார்.

மதியம் 1 மணிக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்திய தேர்தல் கமிஷனர் பேட்டியளிக்கிறார். மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரும் இந்தக் குழுவினர், பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகின்றனர்.

13 மற்றும் 14ஆம் தேதிகளில், கேரள மாநிலத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகள், உள்ளாட்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளோடு இந்திய தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். இதேபோல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுகிறார்.

வழக்கமாக, தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழு, தேர்தல் நடத்தவேண்டிய மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்புதான் செல்லும். எனவே, இந்த குழுவினர் டெல்லி சென்றதுடன் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகளை அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியல் களம் தலைவர்களின் பிரச்சாரத்தால் சூடுபிடித்து உள்ள நிலையில் தோ்தல் அதிகாரிகளின் வருகை காரணமாக பிரச்சாரம் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 10 பிப் 2021