மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

நீட் முறைகேடு - வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?

நீட் முறைகேடு - வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?

நீட் தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாளில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கைச் சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் , நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் சீட் விடைத்தாள்கள் வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அக்டோபர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து ஓஎம்ஆர் சீட் வெளியிடப்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கூகுள் கணக்கிலிருந்து மீட்டெடுத்த தரவுகள் மற்றும் 594 மதிப்பெண்கள் என காட்டியதற்கான ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களும் மாணவர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் தரப்பில், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணைத் திரிக்க முடியும் என வாதத்திற்காகக் கூறினால் எண்ணற்ற மாணவர்கள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர்கள் பலிகடா ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு சிறிய உதாரணம் என்றும் தவறை ஒப்புக் கொள்வதற்கு மாறாக தேர்வு முகமையின் கௌரவத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முயல்வதாகவும், இது மாணவர்கள் மற்றும் அவர்களது மருத்துவ கனவு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் சைபர் குற்றங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு பிரிவை அமைக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அதற்கு அவசியமில்லை என்று தெரிவித்தார். தேசிய தகவல் மையம் இந்த விவகாரங்களில் கை தேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும். இது சுதந்திரமான அமைப்பு என்பதால் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது. மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் அனுமானத்தின் அடிப்படையிலேயே உள்ளது என்றும் வாதிட்டார்.

தேசிய தேர்வு முகமை சார்பில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜராகி, அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றும், இவ்வழக்கில் அப்படி எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் தாள்களைத் திருத்தம் செய்யவும் ஏற்கனவே எழுதியவற்றை அழிக்கவும் முடியாது என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும் கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 9 பிப் 2021