மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

சச்சின் ட்வீட்டும் ஒற்றைப் பரிமாண அணுகுமுறையும்!

சச்சின் ட்வீட்டும் ஒற்றைப் பரிமாண அணுகுமுறையும்!

தினேஷ் அகிரா

விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டார் என சமூக ஊடகவாசிகள் சச்சின் டெண்டுல்கரைக் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள் வம்படியாகச் சில வார்த்தைகளை உதிர்த்தால் அவர்களை நொந்துகொள்ளாமல் கடந்து போய்விடுவதில்லையா, அதுபோல இதுபோன்ற கருத்துகளையும் இனி கடந்துபோகப் பழகிக்கொள்ள வேண்டும். அதுபோன்ற ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் புனிதங்களை உடைத்து தங்களை, தங்களின் நடவடிக்கைகளைப் புனிதப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. நடப்பு நிகழ்வுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து சச்சினை எடைபோடுவது என்பது ஒரு சரியான மதிப்பீட்டு முறையாக இருக்க வாய்ப்பில்லை. சச்சினேகூடத் தன்மீதான எதிர்பார்ப்புகளைக் கண்டு ஒருகணம் திகைத்து நின்றிருப்பார். ஓய்வுபெற்று 8 ஆண்டுகள் கடந்த பின்பும் தன்னுடைய ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் உற்று நோக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவருக்கு இதுவொரு வாய்ப்பு.

நடுத்தர வர்க்கத்தின் அடையாளம்

தார்மீக ரீதியாக இந்தியாவில் எத்தனை சதவிகிதம் நடுத்தர மக்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க முடியாதது. உலகமயம் இந்தியாவில் கடைபரப்பிய காலகட்டத்தில் சமூகத்தின் மறுக்க முடியாத தேவையாக உருவானதுதான் சச்சினின் நாயக பிம்ப அந்தஸ்து. அவர் இல்லையென்றால் வேறொருவர் அவருக்கு இணையான - கிரிக்கெட் திறன் அடிப்படையில் அல்ல - வேறொரு தளத்தில் உருவாக்கப்பட்டிருப்பார். இதுதான் நிதர்சனம். நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியின் அடையாளமாக உருவான / உருவாக்கப்பட்ட ஒரு நாயகர் அவர்களுடைய உணர்வுகளைத்தான் பொதுவெளியில் பிரதிபலிப்பார். கடந்த முப்பது ஆண்டுக்கால நடுத்தர வர்க்கத்தின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீட்டு பிரதிநிதித்துவம்தான் சச்சின். தற்போது விவசாயிகள் பிரச்சினையிலும் அதுவே நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சச்சின் என்னும் புனிதப்பசு

பாப் இசைக் கலைஞர் ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டத்தைத் குறித்து கருத்துப் பதிவிட்டது ஆரோக்கியமான விஷயம். உண்மையில் கலை, விளையாட்டுச் செயல்பாட்டின் உண்மையான நோக்கமே அபிமானங்களைக் கடந்ததாகத்தான் இருக்கக்கூடும். பேட்ஸ்மேன், பந்து வீச்சாளருக்கு இடையிலான உறவு என்பது வீசப்படும் பந்தைக் கடந்து இருவேறு சமூகங்களுக்கு இடையிலான உரையாடல் என்கிறார் சி.எல்.ஆர்.ஜேம்ஸ். விவியன் ரிச்சர்ட்ஸ் தன்னுடைய ஆக்ரோஷத்தின் மூலமாகக் கறுப்பின மக்களுக்கு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த அநீதிகளுக்கு உலகத்தின் முன்னால் நியாயம் கேட்டார். இந்திய விளையாட்டுக் களத்தில் குறிப்பாக கிரிக்கெட்டில் இதுபோன்ற முன்னுதாரணங்கள் கிடையாது. சச்சினுக்கு விவியன் ரிச்சர்ட்ஸுக்கு அமைந்ததுபோன்ற வரலாற்று நிமித்தம் வாய்க்கவில்லை. சச்சின் ஆரம்பகாலம் தொட்டே யாரையும் பகைத்துக்கொண்டுவிடக் கூடாதென நினைக்கிற ஒரு புனிதப்பசு. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலத்திலிருந்து எந்தவொரு முக்கியமான பிரச்சினைகளுக்கும் அவர் தன் தரப்பை வெளிப்படுத்தியதில்லை.

90களில் முக்கியப் பேசுபொருளான அயோத்தி விவகாரத்தில் அவர் நிலைப்பாடு என்ன? இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் யாருடைய தரப்பு அவர்? அனைத்துத் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏக இந்தியப் பிரச்சினைகளுக்கு மட்டுமே சச்சினின் குரல் ஒலிக்கும். 2008 சென்னை டெஸ்டின் வெற்றிக்குப் பிறகு தனது சதத்தை மும்பை குண்டுவெடிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு சமர்ப்பித்தது ஓர் உதாரணம்.

பொது விவகாரங்களை விட்டுவிடுவோம். 90களின் இறுதியில் கிரிக்கெட் உலகத்தை ஆக்கிரமித்த தூஸ்ரா சர்ச்சை, ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளில் எழுந்த பிரதிநிதித்துவ மற்றும் சம்பளப் பிரச்சினைகள் முதலியன குறித்தெல்லாம் அவர் பொதுவெளியில் பேசியதாகவே நினைவில்லை. 2000இல் சூதாட்டப் புயலில் இந்திய கிரிக்கெட் சிக்கியபோது சச்சின் அதுகுறித்து பொதுவெளியில் ஒரு வார்த்தை பேசியவர் அல்லர். ஆரம்ப காலத்தில் அவர் கொடுத்த சில பேட்டிகள் ஊடகங்களில் சர்ச்சையாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும்.

சர்ச்சைகளை விரும்பாத சர்வதேசியர்

இந்த யுக்தி தன்னுடைய கவனத்தை எதிலும் சிதறவிடாமல் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த அவருக்கு உதவியிருக்கக்கூடும். உண்மையில் சச்சினுக்கு இதுபோன்ற விவகாரங்களில் கருத்து என்ற ஒன்றே இல்லாமல்கூட இருந்திருக்கலாம்.

இதில் இன்னொரு தரப்பிற்கும் வாய்ப்புண்டு. பொதுவாக நவீன கிரிக்கெட்டின் நேர நெருக்கடிகள் ஒரு வீரரை முக்கிய விவகாரங்கள் மீது தன் பார்வையைக் கூர்மைப்படுத்திக்கொள்ள அனுமதிப்பதில்லை. இந்தியச் சமூகத்தின் பெரும்பான்மையினர் போலவே தனிமனிதப் பார்வையில் இருந்து சமூகத்தின் சுக துக்கங்களை எடைபோடுபவர் அவர். சச்சினுக்குத் தன் தந்தையின் மரணமும் மும்பை தீவிரவாதத் தாக்குதலும் ஒன்றுதான். தன்னை ஏதோவொரு விதத்தில் பாதிக்காத எதுவொன்றைப் பற்றியும் அவர் கருத்து உதிர்ப்பதில்லை அல்லது கருத்து என்ற ஒன்றே அவருக்கு இருப்பதில்லை.

சச்சின் ஒரு புனிதப்பசுவாக மாறியதற்கு அவருடைய தற்காப்பு யுக்தியைத் தாண்டி பொது சமூகமான நமக்கும் கூட அதில் ஒரு பங்கிருக்கிறது. மராட்டியர், பிராமணர், இந்து, இந்தியர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடக்கிவிட முடியாது. இந்தியர்களின் செல்லப் புதல்வனாகக் கொண்டாடப்படுவதற்குத் தேவையான எல்லாத் தகுதிகளும் சச்சினுக்கு வாய்த்திருந்தன. மிக முக்கியமாக அதிர்ந்து பேசாத அவருடைய சுபாவத்தையும் தன்னுடைய வெற்றிகளைக் குறித்து டம்பம் அடித்துக்கொள்ளாத அடக்கத்தையும் கூறலாம்.

சர்வதேச அளவிலும் அதிகம் கொண்டாடப்பட்டவர்களில் சர்ச்சைகளில் சிக்காதவர் சச்சினாகத்தான் இருக்க முடியும். ஷேன் வார்ன், பிரையன் லாரா, டைகர் வூட்ஸ், டேவிட் பெக்காம், ரஜினிகாந்த், ஷாருக்கான், அம்பானி போன்றவர்கள் கூட ஏதோவொரு விதத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் வருகிறார்கள்.

ஆக, நியோ லிபரல் உலகின் பிரபலமான சர்வதேசியர் என சச்சினைக் குறிக்கலாம். எல்லாத் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேநேரம் எல்லாவற்றிலுமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர் அவர்.

சச்சினும் தோனியும் வேறுபடும் புள்ளி

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாட்டுத் தரப்பிற்கு பங்கில்லை எனத் தற்போது திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம் சர்வதேசியர் என்ற உயரத்திலிருந்து நிறுவப்பட்ட அடையாளம் ஒன்றுக்கு அவர் கீழிறங்கி வந்துள்ளார். இதே கருத்தை தோனி முன்வைத்திருந்தால் அது இந்தளவுக்கு சர்ச்சை ஆகியிருக்காது. காரணம் தோனி ஒரு சர்வதேசியர் அல்லர்; இந்தியர்.

அரசியல்மயமற்ற சச்சின் விவசாயிகள் போராட்டம் போன்ற ஓர் உணர்ச்சிகரமான விவகாரத்தில் எப்படிக் கருத்து உதிர்த்தார் என்பதுதான் இங்கு சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். பொதுவாக சச்சின் போன்ற பிரபலங்கள் அதீத ஊடக கண்காணிப்பினால் தங்களுடைய சுதந்திரத்தை இழந்துவிட்டதால் தங்களது பிரபல்யத்தை உள்ளூர வெறுப்பவர்கள். ஒருவிதமான தலைமறைவு வாழ்க்கையால் சமூகத்தின் உண்மையான நாடித்துடிப்பு குறித்த நேரடியான பரிச்சயம் அவர்களுக்கு இல்லாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. ஆனால் தானும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தான் என்கிற குறுகுறுப்பு வேறு ஒருபக்கம் அவர்களை முள்ளாய் தைத்துக் கொண்டிருக்கும். பணம், புகழ் எல்லாவற்றையும் கடந்து தனக்கென ஓர் அடையாளம் வேண்டுமென நினைக்கும் அவர்களுக்கு தேசியவாதம்தான் ஒற்றைத் தேர்வாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்துகொள்ள முயற்சிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மனநிலையை ஒத்தது இது.

ரஜினிகாந்த்துடனான ஒப்பீடு இங்கு பொருத்தமானது. இன்றைய காலகட்டத்தில் தேசியவாதம் என்பது ஆளும் அரசுகளிலிருந்து மாறுபட்ட தனித்த ஒன்றல்ல. ஆளும் அரசுகளின் மீதான பற்றே நாட்டுப்பற்று எனப் போதிக்கப்படும் காலமிது. பொதுவாக விளையாட்டு வீரர்கள் தாங்கள் எதன் பெயரால் பிரதிதித்துவப்படுத்தப்படுகிறோமோ அதன் மீது பெரும் பற்றுக் கொண்டிருப்பவர்கள். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நிலப்பரப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பொருட்படுத்தும் நோக்கில் தோனி இராணுவக் குறியீடு அணிந்து விளையாடிய நிகழ்வை இங்கே பொருத்தப்படுத்திப் பார்க்கலாம். இது வெறுமனே பாஜகவுடன் மட்டும் சம்பந்தப்படுத்தி பார்க்கும் விஷயமல்ல. இந்தியாவில் காங்கிரஸ் வலிமையுடன் இருந்தபோது நிறைய விளையாட்டு வீரர்கள் அந்தக் கட்சியில் இணைந்தனர் என்பது வரலாறு.

ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமா?

நம்முடைய அனுமானங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்த விவகாரத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் தற்போதைய ஆளும் அரசின் நினைத்ததைச் சாதிக்கும் கெடுபிடிப் போக்கு. அரசுக்கு ஆதரவாகக் கருத்துப் பகிரவும் ஆளுங்கட்சியில் இணையவும் நாடு முழுவதுமுள்ள கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவது தொடர்கதையாகிவருகிறது.

விவசாயப் போராட்டத்தின் பின்னணி குறித்து சச்சினுக்குத் தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆளும் தரப்பிற்கு இணக்கமானவராகக் கருதப்பட்டாலும் கடந்த காலங்களில் அவருக்கு இதுபோன்ற அழுத்தங்கள் ஆளும் அரசுகளால் கொடுக்கப்பட்டதில்லை. காந்திக்குப் பிறகு சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் முகமாகப் பார்க்கப்படும் சச்சினுக்குக் கொடுக்கப்படும் இதுபோன்ற அழுத்தங்கள் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் கண்ணோட்டத்தையே பாதிக்கக்கூடியவை. சங்கி என்ற ஒற்றைச் சொல்லில் சச்சினை அடைக்கும் முன்பாக இதையெல்லாம் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

செவ்வாய் 9 பிப் 2021