உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்: 150 பேர் மாயம், 3 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 150க்கும் மேற்பட்டோர் மாயமானதாகத் தகவல் வெளியான நிலையில், இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தௌலிங்கா ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் இருந்த 100 முதல் 150 பேர் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
#WATCH | Water level in Dhauliganga river rises suddenly following avalanche near a power project at Raini village in Tapovan area of Chamoli district. #Uttarakhand pic.twitter.com/syiokujhns
— ANI (@ANI) February 7, 2021
இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் தபோவன் பகுதியிலுள்ள ரிஷி கங்கா மின்சார திட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசின் எரிசக்தி நிறுவனமான என்டிபிசிக்கு சொந்தமான இடத்திலிருந்து மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை கூறுகிறது. அதோடு அடித்துச் செல்லப்பட்டவர்களில் பலரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பொதுமக்கள் புரளி பரப்ப வேண்டாம், பழைய வீடியோக்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பனிச்சரிவு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து மாநில முதல்வரிடம் கேட்டறிந்துள்ள பிரதமர் மோடி, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தௌலிங்கா நதிக்கரை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு சமொலி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்று அலக்னந்தா நதிக்கரை ஓரம் வசிப்பவர்களும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய விமானப்படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் உட்பட மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இரண்டு மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டமாக மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, மற்றவர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகாததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அச்சமடைந்துள்ளனர்.
உத்தராகண்டில், 'இமய மலையின் சுனாமி' என்று ஊடகங்களால் கூறப்பட்ட 2013ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் , பல்லாயிரம் பேர் இறந்ததும், காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.