மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

ஒடிசா மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.பி!

ஒடிசா மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.பி!

பி.டெக் படிக்க விரும்பிய ஒடிசா ஏழை மாணவிக்கு தருமபுரி எம்.பி நேரில் சென்று நிதி உதவி வழங்கி உள்ளார்.

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ருசுபோடா. இவரது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள். குடும்ப வறுமையிலும் ஆர்வத்துடன் படித்த ருசுபோடா, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார். அதன் மூலம் அவருக்குத் தனியார் பொறியியல் கல்லூரியில் அரசுக் கல்வி உதவித்தொகையில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்து முடித்தார்.

எனினும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் அவரால் கல்லூரியிலிருந்து சான்றிதழ்களைப் பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது கல்விக்காகவும், கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ்களைப் பெறுவதற்காகவும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தும், சான்றிதழ் இன்றி படித்த வேலைக்குச் செல்ல முடியாமல், தவித்த அவர், சமூக வலைதளங்கள் வாயிலாக உதவி கேட்டுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் ஒடிசா சென்று அந்த மாணவியைச் சந்தித்து உதவி செய்திருக்கிறார்.

முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கிய அவர், கல்விக் கடன் பெறுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ருசுபோடா கல்விக்காக உதவி கேட்டிருந்தார். அவருக்கு ஐந்து சகோதரிகள் உள்ளனர். கல்விக்காக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்றுள்ளார். பி.டெக் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்திருந்தார். கல்வி கற்பதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஒடிசா வந்து அவருக்கு உதவி செய்தேன். கல்வியால் தான் சமூகம் முன்னேறும், சமூக நீதியைக் காக்க முடியும்" என்று தெரிவித்தார்.

ருசுபோடா கூறுகையில், " எனது தந்தை விவசாய வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அவரின் வருவாய் எங்கள் குடும்பத் தேவைக்குச் சரியாக இருக்கிறது. கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் எனது சான்றிதழ்கள் கல்லூரியிலேயே இருந்தது. அதை வாங்கத் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தேன். இதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களைக் கல்லூரியிலிருந்து பெற்றுத் தந்தார். தற்போது தருமபுரி மாவட்ட எம்.பி எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். இந்த பணத்தை வைத்து நான் பி.டெக் படிப்பேன். மேற்படிப்பு படிக்க உதவி தேவை எனில் தொலைப்பேசியில் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி " என்று கூறியுள்ளார்.

- பிரியா

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 7 பிப் 2021