மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - சக்திகாந்த தாஸ்

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - சக்திகாந்த தாஸ்

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய இந்தியப் பொருளாதாரம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான பட்ஜெட் 2021 அறிக்கையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்படுத்தற்கான பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதற்கிடையில் நேற்று நடந்த ரிசர்வ் கூட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கம்போல, ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்தக் கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 5) நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.

இதுதொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவிகிதமாக நீடிக்கிறது. இந்த முடிவிற்கு ஆதரவாக, நிதிக் கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நான்காவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க கடன் பெறும் சூழலைத் தொடர்ந்து அளிக்கப்படும்.

இதேபோல் 2021-22இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (சிபிஐ) 5.2 சதவிகிதமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தைக் களைவதற்காகவும் சக்திகாந்த தாஸ் கவர்னரான குறுகிய காலத்தில், கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டுமே ஐந்து முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்திருந்தார்.

அதே போல, கொரோனா ஊரடங்கில் மக்களும் இந்திய பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயிருந்தபோது 2019ஆம் ஆண்டில் ஐந்து முறை குறைத்ததில், 50 சதவிகிதத்தைக் கடந்த மார்ச் 27ஆம் தேதி ஒரே முறையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதாவது, அன்றைய தினம் 5.15 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாகக் குறைத்தது. அதன்பிறகு, மே மாதத்திலும் 0.40 புள்ளிகளை மேலும் ரிசர்வ் வங்கி குறைத்தது. நடந்த டிசம்பர் மாதக் கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை. நேற்று நடந்த கூட்டத்திலும் குறைக்கவில்லை.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 6 பிப் 2021