மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

எதிர்காலத்தைக் கையாள்வதற்கு முன்பு...!

எதிர்காலத்தைக் கையாள்வதற்கு முன்பு...!

சத்குரு

ஒருவரது எதிர்காலத்திற்காக முன்னேற்பாடு செய்ய நிறைய வழிகள் உள்ளன. எதிர்காலம் என்பது நிதர்சனத்தில் இல்லாதது; நம்முடைய அனுபவத்தில் அது இல்லை என்றாலும், அது நிகழக் கூடிய சாத்தியமாகவே இருக்கிறது.

சில பேர் தங்களுடைய எதிர்காலத்தை தங்களது கட்டாயங்களின் பேரில் திட்டமிடுகிறார்கள். இன்னும் சிலர் தங்களது விழிப்புணர்வின் சித்தப்படி திட்டமிடுகிறார்கள், மேலும் சிலர் அதனை அசட்டையாக கையாள்கின்றனர்.

ஒருவர் தனது வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். விழிப்புணர்வுடன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதுவும் நிச்சயமாக பலன் தரும். எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல; எதைத் தேர்ந்தெடுத்தாலும் உங்களுடைய உயிரைக் கொடுத்து அதை செய்ய வேண்டும். உங்களை முழுமையாய் வீசி, அந்த செயலில் ஈடுபட விருப்பமாய் இருக்க வேண்டும். அதுதான் முக்கியமான விஷயம். இல்லாத ஒரு எதிர்காலத்துக்காக, ஏதோ ஒரு வகையில் திட்டம் போட்டு எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்.

ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது ஒரு ஈரானியர் அவரை சந்தித்தார். அவர் ஜார்ஜ் புஷ்ஷிடம், "ஜனாதிபதி அவர்களே, என் மகனுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. 'ஸ்டார் ட்ரெக்' திரைப்படத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த செகோவ், சீனரான சுலு, ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்காட்டி என்று எல்லா தேசத்து மக்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படத்தில் ஈரானைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லையே என்று அவன் வருத்தம் கொள்கிறான். ஏன் 'ஸ்டார் ட்ரெக்'கில் ஈரானைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை?" என்று கேட்டார். அதற்கு ஜார்ஜ் புஷ் அவரைப் பார்த்து, "ஏனென்றால் அது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் ஒரு விஷயம்" என்றார்.

ஒரு விதையை விதைத்துவிட்டு, எதிர்காலத்தில் அது முளைப்பதற்காக நீங்கள் காத்திருக்கலாம்; இது ஒரு வழி. இன்னொரு வழி நீங்களே உங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கலாம் அல்லது சரியான திசையில் காற்று வீசும்போது ஒரு கலத்தில் ஏறி அமர்ந்து கொள்ளலாம்.

அந்தக் கலம் எப்படி இருந்தாலும் எங்கு செல்ல வேண்டுமோ அங்குதான் செல்லும். இவையெல்லாம் ஒருவரது எதிர்காலத்தைக் கையாள்வதற்கான வெவ்வேறு வழிகள்.

எதிர்காலம் என்றால், இன்னும் நிதர்சனத்தில் இல்லாத ஒன்றைக் கையாள முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தில் இருக்கும் ஒன்றை இப்போது நீங்கள் கையாளவில்லை. இனிமேல் வரப் போகும் ஒன்றை நீங்கள் கையாள்கிறீர்கள்.

வாழ்க்கையின் தன்மையே இதுதான் - ஒரு குழந்தை, தாயின் கருவறையில் இருக்கும்போது, அந்தத் தாய் ஒவ்வொரு கணமும் அந்தக் குழந்தையை பராமரித்து வந்தாலும், குழந்தைக்கு தாயின் முகம் தெரியாது, அதே போல தாயும் குழந்தையின் முகத்தைப் பார்த்தது கிடையாது. ஒருவருக்குள் ஒருவராக இருந்தாலும் இருவரும் முற்றிலும் அன்னியர்களாக இருக்கிறார்கள்.

அதே போலத்தான், நீங்கள் படைப்பிற்குள்ளே இருக்கிறீர்கள், வெளியில் இல்லை. பல வழிகளிலும் நீங்கள் படைப்பின் மடியிலோ அல்லது படைப்பவனின் கருவறையிலோ இருக்கிறீர்கள். இருந்தாலும், உங்களைச் சுற்றியிருக்கும் கவசத்திலிருந்து நீங்கள் வெளியே வராமல் இருந்தால், கருவறையின் சௌகரியங்களிலிருந்து வெளியே வராமல் இருந்தால், படைத்தவனின் முகத்தை நீங்களோ அல்லது உங்கள் முகத்தை படைத்தவனோ பார்க்க முடியாது.

கருவறை ஓர் அற்புதமான இடம், ஆனால் அது இருட்டாக இருக்கிறது, உங்கள் கண்களும் மூடி உள்ளன, உங்களால் எதையும் பார்க்க முடியாது, இதுதான் பிரச்சனை. உங்கள் கண்களைத் திறந்து ஒரு விளக்கை ஏற்றிப் பார்த்தால், எப்படி உயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். எது உயிரின் மூலமோ அதை நீங்கள் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால், அந்த இடம் இருட்டாக இருக்கிறது, அது போதாதென்று, உங்கள் கண்கள் வேறு மூடியிருக்கின்றன.

இரண்டு பேர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார்கள். ஒருவர் இன்னொருவரிடம், 'இங்கு மிகவும் இருட்டாக இருக்கிறது, இல்லையா?' என்று கேட்டார். அதற்கு மற்றொருவர், 'எனக்குத் தெரியவில்லை. என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை' என்றார்.

எனவே, எதிர்காலம் என்பது - நீங்கள் எத்தனை முறை உங்கள் கைரேகைகளைப் பார்த்திருந்தாலும், எத்தனை முறை நீங்கள் கிரகங்களின் அமைப்புகளைப் பார்த்திருந்தாலும், எத்தனை எத்தனை முறை உங்கள் ஜாதகத்தைப் பார்த்திருந்தாலும், எத்தனையோ ஜோசியர்களை கலந்து ஆலோசித்திருந்தாலும் - உங்களுக்கு இன்னும் எதுவும் தெரியவில்லை, இன்னமும் நீங்கள் இருட்டுக் கிணற்றில்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அந்தக் காரணத்தினால்தான், அந்த ஒரே ஒரு காரணத்தினால்தான், வாழ்க்கை வாழ்வதில் அர்த்தம் இருக்கிறது; அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறதென்று உங்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது.

இருள் எதிர்மறையான குணமுடையது என்று நான் சொல்லவில்லை. ஒளி என்பது மிகச் சிறிய விஷயம்; அது தனக்கு தானே எரிந்து காணாமல் போய்விடும். இருள் சிறிய விஷயமல்ல, அது அளவிட முடியாதது, எண்ணிலடங்கா சாத்தியங்களை உடையது, ஏனென்றால் இருள் ஒளியைப் போல ஓர் இருப்பை உடையது அல்ல, இருள் என்பது இல்லாமல் இருப்பது - இப்படி அது இருக்கும் பட்சத்தில், உங்கள் விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமானாலும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் இருக்கிறது.

ஏதோ ஒன்று, ஒரு இருப்பாக இருந்தால், அங்கு குறைவாகத்தான் உங்களால் செயல்பட முடியும்; ஆனால் எதுவுமே இல்லை என்றால், நீங்கள் விரும்பியதெல்லாம் செய்ய முடியும். ஆனால் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்றால், அதற்குத் தேவையான திடநிலையும், சமநிலையும் உங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம், தேவையான தகுதி பெற்றவராக இருக்கலாம், திறமைசாலியாக இருக்கலாம், ஆனால் உங்களிடம் திடம் இல்லாவிட்டால், தள்ளாடிக் கொண்டிருந்தால், நீங்கள் பேராபத்தாகத்தான் இருப்பீர்கள்.

நீங்கள் சிறிது முட்டாளாக இருந்தால், கொஞ்சம் குறைவான பேராபத்தாக இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதற்குத் தேவையான உந்துதலை புத்திசாலித்தனம் தருகிறது.

வேகமாக செல்லும் ஒரு வாகனத்தைதான் நாம் விரும்புகிறோம் ஆனால் அது விபத்துக்குள்ளானால், அது பெரிய ஒரு பாதிப்பாக இருக்கும். 'எத்தனை உயரம் ஏறுகிறீர்களோ, அத்தனை பலமாக கீழே விழுவீர்கள்' என்பதை ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியும்.

புத்திசாலித்தனம், திறமை, ஆற்றல், தகுதிகள் இவையெல்லாம் தோல்வியிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்காது; சமநிலைதான் தோல்வியிலிருந்து உங்களை காக்கும். அதனால்தான் பதஞ்சலி முனிவரிடம் யோகத்தின் மூன்றாவது பகுதியான ஆசனாவை விவரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அவர், 'ஸ்திரம், சுகம், ஆசனம்' என்று சொன்னார்.

அதாவது ஆசனம் என்பது வசதியானதாகவும், திடமானதாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார். வசதி என்றால் நீங்கள் சௌகரியமாக உணர்வது, மேலும் நீங்கள் திடத்தன்மையுடனும் இருப்பீர்கள். இந்த இரண்டு விஷயங்களும் உங்களிடம் இருந்துவிட்டால், உங்கள் வாழ்க்கையின் முழு திறனையும் கண்டுகொள்வீர்கள். உங்களிடம் புத்திசாலித்தனம், தகுதிகள், திறமை இவையெல்லாம் இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் முழு திறனையும் உங்களால் கண்டு கொள்ள முடியாது - அதற்கு நீங்கள் உங்களுக்குள் திடமாகவும், சமநிலையுடனும், இலகுவாகவும் இருக்க வேண்டும்.

இல்லாத ஒன்றை, அதாவது எதிர்காலத்தை நாம் கையாளும் முன்பு, இலகுவாக, திடமாக இருந்தால் - இந்த இரு தன்மைகளையும் நீங்கள் அடைந்திருந்தால் - இதரவை நடைபெறும். எப்போதுமே நீங்கள் இலகுவாகவும், திடமாகவும் இருந்தால், மற்றவை எல்லாம் உங்கள் திறனுக்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப நடைபெறும்.

இதில் நிறைய காரணிகள் இருந்தாலும், அவையெல்லாம் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யும். இந்த இரு விஷயங்களும் இல்லையென்றால் - நீங்கள் இலகுவாக, திடமாக இல்லாவிட்டால் - ஒருநாள் மிகுந்த உற்சாகமாகவும், அடுத்த நாள் மிகுந்த சோர்வாகவும் இருப்பதைப் பார்ப்பீர்கள். எனவே, எதிர்காலத்தைக் கையாள்வதற்கு முன்பு, நாம் சௌகரியமாகவும், திடமாகவும் இருக்கும் இந்த பரிமாணத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருவது மிகவும் முக்கியம்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

சனி 6 பிப் 2021