மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

சென்னை டெஸ்ட்: இஷாந்த், சிராஜ் இடையே போட்டி!

சென்னை டெஸ்ட்: இஷாந்த், சிராஜ் இடையே போட்டி!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையில் நாளை (பிப்ரவரி 5) நடைபெறவிருக்கும் சென்னை டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு இஷாந்த், சிராஜ் இடையே போட்டி நிலவுகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 5) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெறும். இரண்டாவது டெஸ்டில் 50 சதவிகிதம் வரை ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து இந்திய வீரர்கள் சேப்பாக்கத்தில் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். ஆடுகளத்தில் புற்கள் கணிசமாக இருப்பதால் இங்கிலாந்து ஆடுகளம் போன்று இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறுகையில், “இது வழக்கமான சேப்பாக்கம் ஆடுகளம் போன்றுதான் இருக்கிறது. காற்றில் ஈரப்பதம் இருக்கும்போது ஆடுகளத்தில் புற்கள் தேவை. இதனால் ஆடுகளத்தில் எளிதில் வெடிப்பு ஏற்படாது. மற்றபடி ஆடுகளம் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும்” என்றார்.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது குறித்து ஆலோசிக்கிறது. பிரதான வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருப்பார். இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் இளம் வீரர் முகமது சிராஜ் இடையே போட்டி நிலவுகிறது.

இஷாந்த் ஷர்மா டெஸ்டில் விளையாடி கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்டது. ஆனால், முகமது சிராஜ் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமாகி 13 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இவர்களில் யாருக்கு இடம் என்பது கடைசி நேரத்தில்தான் தெளிவாகும்.

சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு அஸ்வின், குல்தீவ் யாதவ் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்க்ஷர் பட்டேல் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். ஒரு வேளை ஏழு பேட்ஸ்மேன்கள், நான்கு பவுலர்கள் என்ற அடிப்படையிலும் வியூகங்கள் வகுக்கப்படலாம்.

ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப ஆடும் லெவன் அணி முடிவு செய்யப்படும். ஒரு நாள் தாமதமாக இணைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த டெஸ்டில் பந்து வீசுவதற்கு முழுமையாக தயாராகாததால் அவரது இடம் கேள்விக்குறிதான்.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வியாழன் 4 பிப் 2021