தூத்துக்குடி: காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை!

தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் மீது மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று கொற்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். இரவு குடிபோதையில் ஏரல் பஜார் பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, முருகவேல் வாழவல்லான் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்று அங்கும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது உதவி ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த முருகவேல், உதவி ஆய்வாளர் பாலு மீது டாட்டா ஏசி எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மோதி கொலை செய்திருக்கிறார். உதவி ஆய்வாளரும், மற்றொரு காவலரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, நள்ளிரவு 2:00 மணி அளவில் கொற்கை விலக்குப் பகுதியில் அவர்கள் வாகனம் மீது மோதியிருக்கிறார் முருகவேல். இதில் பாலு நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். பாலுவுடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காவலர் காயங்களுடன் ஏரல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நிகழ்த்திவிட்டுத் தப்பியோடிய முருகவேலை 10 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளி முருகவேல் காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக் குமார் முன் சரணடைந்துள்ளார். இதுதொடர்பாக மதுரை டிஐஜி ராஜேந்திரன் ஏரல் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, “இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் முருகவேல். வாழவல்லான் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், குடிபோதையில் தகராறு செய்த போது அங்கு சென்ற உதவி ஆய்வாளர் பாலு, முருகவேலுவின் வாகனத்தை பறிமுதல் செய்து நாளை காவல் நிலையம் வந்து பெற்று கொள்ளும்படி எச்சரித்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து முருகவேல் இரவு 12.15 மணியளவில் அவருக்கு சொந்தமான மெக்கானிக் கடையை திறக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த உதவி ஆய்வாளர் பாலு இந்நேரத்தில் கடையை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று பாலுவும், மற்றொரு காவலரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சிறிய வகை லாரியை மோதி கொலை செய்திருக்கிறார்” என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, “போதையில் சுற்றிய முருகவேல் என்ற நபரை எஸ்.ஐ. கண்டித்ததால், ஆத்திரமடைந்து அவர் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசியதில், சாயர்புரம் பண்டாரவிளையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற காவலர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா