மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

விவசாயிகள் போராடும் பகுதிகளில் இணையச் சேவை முடக்கம்!

விவசாயிகள் போராடும் பகுதிகளில் இணையச் சேவை முடக்கம்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் எல்லைப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணையச் சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நடத்திய 11 கட்டம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் நேற்று போராட்டக் களத்துக்கு வந்து விவசாயிகள் அந்த பகுதியிலிருந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் விவசாயிகள் அங்கிருந்து செல்ல மறுக்கவே இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பல் விவசாயிகள் தங்கியிருந்த கூடாரம் மற்றும் அவர்கள் வைத்திருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் விவசாயிகள் அங்கிருந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காசிப்பூர், சிங்கு, திக்ரித், உட்பட விவசாயிகள் போராட்டம் நடத்தும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணையச் சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

நேற்று நள்ளிரவு 11 மணி தொடங்கி நாளை நள்ளிரவு 11 மணி வரை இணையச் சேவை முடக்கப் படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள் மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று இரவு ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று விவசாயச் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் காயமடைந்த போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற மற்றும் டெல்லி காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் ஆகியோர் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷாகித் பூங்கா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு டெல்லியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் 2 நாட்களுக்கு இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 30 ஜன 2021