மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

யானைக்கு தீ: 55 ரிசார்ட்டுகளுக்கு ‘சீல்’

யானைக்கு தீ: 55 ரிசார்ட்டுகளுக்கு ‘சீல்’

யானைக்கு தீ வைத்த விவகாரத்தைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி மாவனல்லா பகுதியில் குடியிருப்புக்கான அனுமதி பெற்று விதிமுறைகளை மீறி நடந்துவந்த 55 தங்கும் விடுதிகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரம் போன்ற பகுதிகளில் அதிக அளவிலான தனியார் ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் உள்ளன.

இங்கு, காயத்துடன் சுற்றிவந்த ஆண் காட்டு யானை ஒன்று உணவு தேடி கடந்த வாரம் மாவனல்லா பகுதியிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி வளாகத்துக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிலர் யானையை விரட்டி, அதன் மீது தீப்பந்தத்தை வீசினர். உடலில் பற்றி எரியும் தீயுடன் யானை பிளிறிக்கொண்டு ஓடிய வீடியோ வெளியாகி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. யானையின் இறப்புக்குக் காரணமான இரண்டு நபர்களைக் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரைத் தேடிவருகின்றனர்.

யானைக்குத் தீ வைத்த சம்பவம் நடந்த அந்தத் தனியார் தங்கும் விடுதி, அனுமதியின்றி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இரவோடு இரவாக அதற்கு சீல் வைத்தனர். மேலும், இந்தப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றனவா என வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளைக்கொண்ட குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் மாவனல்லா பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டுவந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. எனவே, 55 தனியார் விடுதிகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய வருவாய்த் துறை அதிகாரி ஒருவர், “குடியிருப்புக்களுக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாகச் செயல்பட்டுவந்த அனைத்துத் தனியார் தங்கும் விடுதிகளையும் உடனடியாக மூட நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளுக்கான உரிமம் பெற்று, தங்கும் விடுதிகளாகச் செயல்பட்டுவந்த 55 விடுதிகளை மூட உத்தரவிட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 30 ஜன 2021