அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ரத்து… எதனால்?

public

அண்ணா பல்கலைக்கழகம் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷ்னல் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல் நிறுத்திவைத்துள்ளது. மத்திய மாநில அரசுகளில் இட ஒதுக்கீடு பிரச்சினையால் 45 மாணவர்கள் கனவு தகர்ந்துள்ளது.

இந்த இரு பட்டமேற்படிப்புக்கான சேர்க்கை டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் சிஇஇபி (CEEB- Combined Entrance Exam for Biotechnology) என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை மத்திய அரசு கீழ் இயங்கும் RCB (Regional Centre for Biotechnology) என்ற நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, நுழைவுத் தேர்வை GAT-B (Graduate Apptitute Test in Biotechnology) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடத்தியது. இதன் தேர்வு முடிவுகள் வெளியாகிய பின்பும் மாணவர் சேர்க்கையை நடத்தாமல் இருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்த நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கப்படும் பயோடெக்னாலஜி மாணவர்களுக்கு மாதம் 12,000 ரூபாயும் கம்பியூடேஷ்னல் மாணவர்களுக்கு 12,500 ரூபாய் வரை மாத உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய அரசு கீழ் இயங்கும் RCB எடுத்துக்கொண்டு,மாணவர் சேர்க்கையை மாநிலத்தில் இருக்கும் அந்தந்த நிறுவனங்களை நடத்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுதான் மாணவர் சேர்க்கையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் 49.5% இட ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துமாறு கோரிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீட்டில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது சமூகநீதி காக்க தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சி என வாதிட்டால், இந்தத் தேர்வின் அடிப்படையைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தியிருக்கும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் GAT-B நுழைவு தேர்வு எழுதியதன் அடிப்படையில் எம்.எஸ்சி மெடிக்கல் பயோடெக்னாலஜி பட்டமேற்படிப்பில் 10 இடங்களையும் மற்ற 10 இடங்களை தமிழக மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு மதிப்பெண் கொண்டு சேர்க்கை நடத்தியதற்கு அனுமதி வழங்கியது யார் என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழக சேர்க்கையில் முட்டுக்கட்டை போடுவதற்கு உள்நோக்கம் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தனி அந்தஸ்து (Institute of Eminence) கோரிய துணைவேந்தர் சூரப்பா ,மாநில 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து வராது என்றார். ஆனால், இரண்டு துறைகளுக்கு இட ஒதுக்கீடை கேட்டு பெறாமல் இருப்பது அவர் உறுதிமொழி வெற்று வாக்குறுதி என்பதை நிரூபிக்கிறது.

இந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று மாத உதவித் தொகையுடன் படிக்கலாம் என எண்ணியிருந்த மாணவர்கள் மத்திய மாநில அரசு அறிவிப்புகளால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

“தமிழக அரசு சமூகநீதி காக்க வேண்டும், அதே வேளையில் 45 மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைப்பது சமூகநீதிக்கு ஏற்படும் ஆபத்து. எனவே இந்த கல்வி ஆண்டு முடியும் முன்பு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது.

**-தனிமொழி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *