மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 ஜன 2021

ஃபேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஃபேஸ்புக், யூடியூப்  நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

சமூக வலைதளங்களில் வீடியோக்களை தணிக்கை செய்து வெளியிடக் கோரிய வழக்கில் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல், பிராங்க் ஷோ என்ற பெயரில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பி அதனை வெளியிட்டு வந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் அந்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "சென்னையில் பெண்களிடம் தவறான முறையில் கேள்விகள் கேட்டு யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்களை போலீசார் கைது செய்து அந்த சேனலை முடக்கியுள்ளனர். எனினும் அவர்களது வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் சமூக வலை தளங்களுக்குக் கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பெண்கள் குழந்தைகள் உட்படப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது தெரியவந்தது. தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன்மூலம் தவறான கருத்துக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை

குழந்தைகளிடம் சென்று சேரக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே யூட்யூப், ஃபேஸ்புக் கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைத் தணிக்கை செய்து ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில், ஃபேஸ்புக், யூடியூப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார்கள் ஏதேனும் வந்தால் தான் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்று, இந்த மனு தொடர்பாக யூடியூப், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

புதன் 27 ஜன 2021