மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

9, 11ஆம் வகுப்புகள்: இப்போது திறக்க வாய்ப்பு இல்லை!

9, 11ஆம் வகுப்புகள்: இப்போது திறக்க வாய்ப்பு இல்லை!

தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படும் வரையில் 9, 11ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் 25 மாணவர்கள் வீதம், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்வதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டதற்கு அவர்,

“10 மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1000 பேர் உள்ள பள்ளியில் 40 வகுப்புகளாகப் பிரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. 10ஆம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12ஆம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும் தனித்தனியாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் 10, 20 வகுப்பறைகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காற்றோட்டமாக கல்வி கற்க ஏதுவாக வகுப்பு அறைகள் பல கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் 9, 11ஆம் வகுப்புகளுக்கு இப்போது வகுப்புகளைத் தொடங்க வாய்ப்பு இல்லை” என்று கூறியவர்,

மேலும், “10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கே இடம் நெருக்கடி ஏற்படுகின்ற நிலையில் அவர்கள் ஒரு பள்ளிக்கு 300, 500 பேர் வந்தால் பாதிப்பு ஏற்படும்.

அதனால் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படும் வரையில் 9, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

மாணவர்கள் நலன் முக்கியம், கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளைப் பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைக் கூட்டம் சேராத வகையில் தனித்தனியாக வரவழைத்து சேகரிக்க வேண்டும், தேர்வுக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 24 ஜன 2021