மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ‘நாட்டுப் பண்ணை’ பாடிப் பதிவு செய்த முதல் பெண்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ‘நாட்டுப் பண்ணை’ பாடிப் பதிவு செய்த முதல் பெண்!

முதல் பெண்கள் 3: கமலா கிருஷ்ணமூர்த்தி

நிவேதிதா லூயிஸ்

1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, சிதறிக்கிடந்த பல குட்டி அரசுகளை ஒன்றாக இணைத்து ஒரு பெரும் நாடாக சர்தார் படேல், நேரு போன்ற தலைவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்த காலம் அது. அப்போது இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்த சமஸ்தானங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானமும் ஒன்றாகும். அதன் திவான் பொறுப்பில் இருந்தவர் சர் சி.பி.ராமசாமி. திருவனந்தபுரம் பக்தி விலாச சாலையில் அவரது வீட்டுக்கு எதிரே அவருடைய நெருங்கிய நண்பர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் குடியிருந்தார்.

திருச்சியை அடுத்த திருவரங்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர். இங்கிலாந்தில் ஐ.சி.எஸ் படித்து ஆட்சியராகும் வாய்ப்பிருந்தும், வெளிநாடு செல்ல பெற்றோரின் இசைவு கிடைக்காததால் அந்த ஆசையைக் கைவிட்டவர். கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைக்க, அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ஸ்ரீனிவாசன் - ராஜலட்சுமி தம்பதியின் ஒரே மகளாக அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1922 ஜூன் 6 அன்று கமலா பிறந்தார்.

ஸ்ரீனிவாசன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தாலும், இசை, நாடகம், நடனம் என்று நிகழ்த்துக் கலைகள் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். பணிக்காலத்திலேயே மேடைகளில் கதாகாலட்சேபம் செய்து வந்தார். அதில் தன்னுடன் பாட சிலருக்குப் பயிற்சியும் கொடுத்துவந்தார். மகள் கமலா தந்தை பாடுவதைக் கூர்ந்து கவனித்து, ஐந்து வயதிலேயே தந்தையுடன் பாடத் தொடங்கினார். மகளின் ஆர்வத்தைக் கண்ட ஸ்ரீனிவாசன், மகளுக்கு இசை கற்பிக்கத் தொடங்கினார். ஸ்ரீனிவாசனின் கதாகாலட்சேபங்களுக்கு ஆர்மோனியம் இசைத்துவந்த அப்பு பாகவதர் என்பவரிடம் ஏழு வயது முதல் கமலா இசை கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

திருவிதாங்கூர் சமஸ்தானப் பண் ரிக்கார்டு - விளம்பரம்

“அவர் சிறந்த ஆசிரியர். பாடலை சொல்லிக்கொடுக்கும்போதே அதை இயற்றியவர் என்ன சூழலில், எந்த பாவத்தில் அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் என்பதை விளக்கிவிடுவார். அப்படி அவர் எனக்கு சொல்லித் தந்த பாபநாசம் சிவன் இயற்றிய மோகன ராகத்தில் அமைந்த ‘கபாலி’ பாடலை ஒரு முறை சிவன் அவர்களிடமே பாடிக்காட்டினேன். பாடலின் பாவம் அப்படியே பொருந்தி வந்திருப்பதாக அவரும் என்னைப் பாராட்டினார்” என்று தன் ஆசிரியர் குறித்து பின்னாளில் சுருதி இதழுக்கு அளித்த பேட்டியில் கமலா கூறியுள்ளார்.

கமலாவும், கச்சேரியும்

ஏழு வயதிலேயே தந்தை இயக்கிய ‘ராமதாஸ்’ என்ற மேடை நாடகத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு கமலாவுக்குக் கிடைத்தது. தியாகராசர் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த ‘சீதாபதி’ என்ற பாடலையும், பூர்ணஷட்ஜம் ராகத்தில் அமைந்த ‘லாவண்ய ராமா’ என்ற பாடலையும் மேடையில் பாடினார். திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருடன் ஸ்ரீனிவாசனுக்கு நல்ல நட்பு இருந்தது. “சமஸ்தானத்தில் நடைபெறும் கலை விழாக்கள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு பெரும்பாலும் என் தாத்தாவுக்கு அளிக்கப்பட்டது. அதற்கு வரும் கலைஞர்கள் தாத்தா வீட்டில் தங்கி, உணவு உண்டு, பாடி மகிழ்ந்து இருந்ததை அம்மா அடிக்கடி நினைவுகூர்வார்” என்று சொல்கிறார் கமலாவின் மகள் மீரா பத்மநாபன்.

ஸ்ரீனிவாசன் திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்த தியாகராசர் ஆராதனை விழாவில் தனி கச்சேரி செய்யும் வாய்ப்பு பத்து வயதில் சிறுமி கமலாவுக்கு கிடைத்தது. பக்க வாத்தியங்களுடன் அழகாக அவர் பாடி முடிக்க, அதன்பின் திருவிதாங்கூரின் பல அரசு விழாக்களில் கமலாவின் கச்சேரிகள் இடம்பிடித்தன. பணத்துக்காக மகள் இசை நிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்பது ஸ்ரீனிவாசனின் திடமான கருத்தாக இருந்தது. டிக்கெட் விற்று நடத்தப்படும் எந்த நிகழ்ச்சிக்கும் மகளைப் பாட அனுப்புவதில்லை என்பதை உறுதியாக கடைப்பிடித்தார்; கமலாவும் தந்தையின் காட்டிய பாதையில் தன் இறுதி மூச்சு வரை நடந்தார்.

வானொலி இதழில் வந்த ரிக்கார்டு விளம்பரம் - எம்.எல்.வி, டி.கே.பி.யுடன் ரிக்கார்டில் கமலா கிருஷ்ணமூர்த்தியும்

1937ஆம் ஆண்டு கமலாவுக்கு 15 வயதாகும்போது அவருக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பண்ணான ‘வஞ்சீச மங்களம்’ பாடலை இசைத்தட்டில் பாடிப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சேரரின் தலைநகர் வஞ்சியின் தலைவனான திருவஞ்சிக்குளம் வஞ்சினாதனைப் பாடுவது போல அமைந்த பாடல் வஞ்சீச மங்களம். சேரரின் வழிவந்தவர்கள் என்று திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் என்று சொல்லப்படுவதால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாட்டுப்பண் ஆனது. இதை 19ஆம் நூற்றாண்டில் பிறந்த உள்ளூர் பரமேசுவரன் என்ற கவிஞர் இயற்றினார். “அம்மா இந்தப் பாடலைப் பாடினால் நன்றாக இருக்கும் என்று தாத்தாவிடம் சொல்லி, பாடவைத்தவர் திருவிதாங்கூர் அரசி ராணி சேது லட்சுமி பாய். என்னை பாடச் சொல்லி அழைத்தார்கள்; நான் பாடிவிட்டு வந்தேன் என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு” என்று மீரா சொல்கிறார்.

திருவிதாங்கூரின் சமஸ்தானப் பாடலை மதராஸ் நகரில் பாடிப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்தவர் முசிறி சுப்பிரமணியம். அதே இசைத்தட்டில் மன்னர் சுவாதி திருநாளின் ‘கருணாகர மாதவா’ என்ற பாடலையும் பாடினார் 15 வயதான சிறுமி கமலா. 1938ஆம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் இணையும் வரை திருவனந்தபுரம் வானொலியில் தினமும் காலை நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பும், இரவு நிகழ்ச்சிகளின் முடிவிலும் கமலாவின் குரலில் வஞ்சீச மங்களம் ஒலித்தது. முதலாம் ஆண்டு இன்டர் படித்துக் கொண்டிருக்கும்போதே, கமலாவுக்கு தபால் துறையில் பணியாற்றி வந்த எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் திருமணம் நிச்சயம் ஆனது; கல்வி பாதியில் நின்றும் போனது.

“அம்மாவுக்கு அதில் பெரிய வருத்தமுண்டு. பெண்ணுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். நான் பி.ஏ. மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு திருமணம் நிச்சயமானது. என்ன நடந்தாலும், படிப்பை விடக்கூடாது என்று பிடிவாதமாக என்னை அம்மா பட்டப்படிப்பை முடிக்க வைத்தார்” என்று மீரா சொல்கிறார். 1939 மே 1 அன்று கமலா - கிருஷ்ணமூர்த்தி திருமணம் நடைபெற்றது. “ஏழு நாள்கள் திருமண நிகழ்ச்சிகள் நடந்தனவாம். பல இசைக் கலைஞர்கள் திருமணத்தின் போது இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அம்மாவும் தன் திருமணத்தில் பாடினார்” என்கிறார் மீரா.

“தினமும் மாலை நான்கரை மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாப்பா வெங்கட்ராமையா வயலின் இசைக்க, பாலக்காடு மணி மிருதங்கம் இசைக்க, என் திருமணத்தில் நான் இரண்டு மணி நேரம் கச்சேரி செய்தேன்” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கமலா. திருமணம் முடித்து முதலில் பாளையங்கோட்டையில் வசித்த தம்பதி, பின்னர் திருச்சி, வேலூர், மும்பை, டெல்லி எனப் பல நகரங்களுக்கு பணி நிமித்தம் இடம் பெயர நேர்ந்தது.

1940ஆம் ஆண்டு திருச்சியில் கிருஷ்ணமூர்த்தி பணியாற்றிய போது, அனைத்திந்திய வானொலியில் பாடும் வாய்ப்பு கமலாவுக்குக் கிடைத்தது. திருச்சி வானொலி நிலையத்தின் “கிரேடு ஒன்று” இசைக் கலைஞராக பணியாற்றினார். திருவனந்தபுரத்திலிருந்து மகளைப் பாடவைக்க திருச்சி வந்தார் தந்தை ஸ்ரீனிவாசன். வானொலி நிலையத்துக்கு மகள் கமலாவை நேரில் அழைத்துச் சென்று பாடவைத்தார். பின்னாள்களில் நெல்லையில் கிருஷ்ணமூர்த்தி பணியாற்றியபோதும், மகளை வானொலி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல திருவனந்தபுரத்திலிருந்து நெல்லை வந்து, திருச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் நெல்லை வீட்டில் ஸ்ரீனிவாசன் விட்டுச்செல்வார்.

இதே போல மைசூரு வானொலி நிலையம், மும்பை வானொலி நிலையம் என பல வானொலி நிலையங்களில் கமலா நேரடி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். பணம் வாங்காமல் பல மேடைகளில் தன் தாய் பாடியதை நினைவுபடுத்திச் சொல்கிறார் மீரா. மதராஸ் மியூசிக் அகாடமியிலும் தந்தை ஸ்ரீனிவாசனுடன் இணைந்து கமலா இசை நிகழ்ச்சிகள் செய்துள்ளார். 1941ஆம் ஆண்டு மியூசிக் அகாடமியின் ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் பாடினார். அப்போதே அவர் பாடிய இரண்டு இசைத்தட்டுகள் வெளியாயின. தந்தை ஸ்ரீனிவாசன் இயற்றிய ‘கண்ணன் மணிவண்ணன்’ என்ற பாடல், ‘கிண்கிணி நாதம்’ என்ற பாடல், சுத்தானந்த பாரதி இயற்றிய ‘அபயகரத்தை’, ‘சங்க நிதி பத்ம நிதி’, சுவாதி திருநாளின் ‘பத்மநாப பாகி’ ஆகிய பாடல்களை கமலா பாடிப் பதிவு செய்தார்.

கணவரின் பணி நிமித்தம் பல ஊர்களுக்கு தன் மூன்று குழந்தைகளுடன் பயணமானார் கமலா. அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் வானொலி நிகழ்ச்சிகள் செய்து வந்தார். இலங்கையில் அவரது கிண்கிணி நாதம் மற்றும் கண்ணன் மணிவண்ணன் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம் நகரங்களில் தந்தையுடன் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூரிலும் இசை நிகழ்ச்சி செய்தார். 1958ஆம் ஆண்டு மும்பையில் கமலாவின் குடும்பம் குடியேறியது. 1969ஆம் ஆண்டு கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்து போக, அதன் பின் சில ஆண்டுகள் கமலா பாடவில்லை.

மதுரை சண்முகவடிவு, எம்.எஸ்.சுப்புலட்சுமி, அவரது தங்கை வடிவாம்பாள், கமலா கிருஷ்ணமூர்த்தி, குழந்தை ராதா விஸ்வனாதன். பின்னால் கமலாவின் தாயார் ராஜலட்சுமி.

மகனுடன் சாந்தா குரூஸ் பகுதியில் தங்கியிருந்தவர், மெல்ல தன்னைத் தேடி வந்தவர்களுக்கு இசை கற்பிக்கத் தொடங்கினார். “கீர்த்தனைக்கு மேல் பாடத் தெரிந்தவர்களுக்கு எந்த கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் அம்மா பாட்டு சொல்லித் தந்தார். மறைந்த கீதா முரளி மற்றும் வாமனன், சீதா ராமகிருஷ்ணன், காயத்ரி சுந்தரேசன் போன்றவர்களுக்கு அம்மா பாட்டு கற்றுத் தந்தார். அவரது சொந்தப் பாடல்களையும் அவர்களுக்குக் கற்றுத் தந்ததால் காயத்ரி சுந்தரேசன் போன்றோர் அவர்கள் செல்லும் இடங்களில் அம்மாவின் பாடல்களைப் பாடுகிறார்கள்; கற்றும் தருகிறார்கள். தீபக் மஜும்தாரின் நடனப் பள்ளி அம்மாவின் வீட்டுக்கு அருகே இருந்ததால், அவ்வப்போது அவருடனும் இணைந்து பாடல்களை இயற்றியும், பாடியும் வந்தார். சுவாதி திருநாளின் பாடல் ஒன்றை நடனத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தார். ‘மியூசிக் டிரையாங்கிள் சபா’ என்ற அமைப்பிலும் பங்கேற்று வந்தார். அதன் பாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்” என்று மீரா சொல்கிறார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் மகள் ராதாவுடன் கமலா

எம்.எஸ். குடும்பத்தினருடன் நட்பு

திரைப்படங்களில் பின்னணி பாட வாய்ப்பு வந்தபோது கமலா மறுத்துவிட்டார். ஆனால், அன்றைய இசை, கலை உலக ஜாம்பவான்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாசன், ருக்மிணி தேவி அருண்டேல் போன்றவர்களிடம் நல்ல நட்பு பாராட்டினார். எம்.எஸ். குடும்பத்தினருடன் தன் அம்மா மிக நெருக்கம் என்பதை மீரா சொல்கிறார். மீராவை எம்.எஸ். அணைத்தபடி அமர்ந்திருக்கும் படம் அதை உறுதி செய்கிறது.

கமலா பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர். முருகன் கமலாவின் இஷ்ட தெய்வம். பல பாடல்கள் முருகன் மேல் இயற்றியுள்ளார். நல்ல இந்திப் பாடல்களைக் கேட்டால்கூட அவற்றில் முருகனைப் பாடும் தமிழ் சொற்களைப் போட்டு அருமையாகப் பாடல் புனைந்து பாடும் திறமை அவருக்கு இருந்தது. அவர் இயற்றிய பாடல்களை இன்றும் அமெரிக்காவிலுள்ள அவரது மாணவர்கள் பாடுவதை மீரா நினைவுகூர்கிறார்.

“85 வயதுக்குப் பின் அம்மாவுக்கு மறதி அதிகமாகத் தொடங்கியது. பணி ஓய்வு பெற்ற பின் அவரது மகன் சாந்தாகுரூஸில் இருந்து நேருல் பகுதிக்கு அம்மாவுடன் குடிபெயர்ந்துவிட்டார். அங்கு இசை கற்றுக்கொள்ள பெரிதாக மாணவர்கள் வரவில்லை. அம்மாவால் இசை இல்லாமல் இருக்க முடியவில்லை போல. கொஞ்சம் கொஞ்சமாக மன நலம் குன்றத் தொடங்கியது. , 2015 டிசம்பர் 31 அன்று தன் 93ஆவது வயதில் அம்மா இறந்து போனார்” என்று சொல்லி முடிக்கிறார் மீரா.

செம்மங்குடி குடும்பத்தாருடன் கமலா

பணம் பெற்றுக்கொண்டு மேடை நிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்று தந்தை கொண்ட உறுதியை இறுதி வரை கமலா காப்பாற்றினார். தந்தையின் மறைவுக்குப் பின் பொதுவெளியில் பாடுவதும் குறைந்து போனது. குடும்ப சுமை கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை அதனால் தானோ என்னவோ அவரது பாடல்கள் மக்களிடம் அதிகம் போய்ச் சேரவில்லையோ எனத் தோன்றுகிறது. அவரது நினைவாக ஒன்றிரண்டு இசைத்தட்டுகள் மட்டுமே உள்ளன. எவ்வளவோ உயரம் தொட வாய்ப்பிருந்தும், கொண்ட கொள்கைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் வாழ்ந்த கமலா கண்டிப்பாக பதிவு செய்யப்படவேண்டிய பெண்மணி என்பதில் ஐயமில்லை.

அவர் பாடிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாட்டுப் பண் வஞ்சீச மங்களம் சுட்டி இங்கே-

படங்கள் நன்றி

மீரா பத்மநாபன், சுருதி இதழ்

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. 'தமிழிசையில் கிறிஸ்துவம்' என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

முதல் பெண்கள் 2 - இந்தியாவின் முதல் பெண் தோல் மருத்துவர் : சந்திரா ராஜரத்தினம்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 24 ஜன 2021