மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

விடைத்தாளைத் திருத்த மறுத்தால் ஆசிரியர் தகுதி இழப்பு: உயர் நீதிமன்றம்!

விடைத்தாளைத் திருத்த மறுத்தால் ஆசிரியர் தகுதி இழப்பு: உயர் நீதிமன்றம்!

மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியைத் தானாகவே இழந்துவிடுவர் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தேவசாந்தினி என்பவர் பணியாற்றியபோது, 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நாட்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து ரோமன் கத்தோலிக்கப் பள்ளிகளின் மறைமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

பின்னர் ஆசிரியை அளித்த விளக்கத்தை ஏற்று, தண்டனை எதுவும் வழங்காமல், பணியில் சேர அனுமதித்தது. பணியிடை நீக்க காலத்தை விடுப்பாக கருதுவதாகக் கூறி, விடுப்புக் கடிதம் கேட்டு தேவசாந்தினிக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அவர் விடுப்பு கடிதம் வழங்க மறுத்துவிட்டார். இதனால், ஊதிய உயர்வும், பணியிடை நீக்க காலத்துக்குரிய ஊதியமும் வழங்கப்படவில்லை.

இதன் பின்னர், அதே மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளிக்கு 1998ஆம் ஆண்டு தேவசாந்தினி மாற்றப்பட்டார். அங்கு 31-7-2013 அன்று அவர் ஓய்வுபெற்றார். தமிழக அரசின் அரசாணையின்படி, அவர் அந்தக் கல்வியாண்டு முழுவதும் பணியாற்ற மறு நியமனம் செய்யப்பட்டார்.

அப்போது, ப்ளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்குச் செல்ல தேவசாந்தினி மறுத்ததால், அவரது மறுநியமனத்தை ரத்து செய்து, 2014ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் 1997ஆம் ஆண்டு பணியிடை நீக்க காலத்துக்கு விடுப்பு கடிதம் வழங்கப்படாததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தேவசாந்தினி தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், “வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாதது, அதனால் மனுதாரரை பணியிடை நீக்கம் செய்தது ஆகிய விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. அந்தக் காலத்தை அவர் பணியில் இருந்ததாக கருத வேண்டும். அவருக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வையும், ஓய்வூதியத்தையும் எட்டு வாரத்துக்குள் வழங்க வேண்டும்.

அதேநேரம், மனுதாரர் விடைத்தாள் திருத்தச் செல்லவில்லை என்பதால், அவரது மறு நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியப் பணி என்பது புனிதமான பணி. கற்பித்தல் மட்டுமல்லாமல், பிழையைத் திருத்துவதும் அவர்களது பணிதான். அதாவது, மாணவர்கள் செய்யும் பிழையைத் திருத்துவது கற்பித்தலில் ஓர் அங்கம் ஆகும். மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்துவிடுவர்.

எனவே, விடைத்தாளை திருத்த மறுத்த மனுதாரரின் மறு பணிநியமன உத்தரவை ரத்து செய்தது சரிதான். இதில் தவறு இல்லை என்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று நீதிபதி கூறியுள்ளார்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 24 ஜன 2021