மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

ஏரியில் இறங்கிய அரசு பேருந்து: பயணிகளின் நிலை?

ஏரியில் இறங்கிய அரசு பேருந்து: பயணிகளின் நிலை?

திருப்பதியிலிருந்து தஞ்சாவூர் வந்துகொண்டிருந்த தமிழக அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி ஏரியில் இறங்கியது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு ஆண்டு தோறும் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக புதிய பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் புதிய பேருந்துகளும் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

அதன்படி இன்று அதிகாலை, திருப்பதியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசின் விரைவு பேருந்து விபத்தில் சிக்கியது. நேற்று இரவு திருப்பதியிலிருந்து புறப்பட்டு, வேலூர், விழுப்புரம் வழியாக வந்து கொண்டிருந்தது. பேருந்தைத் தஞ்சாவூரைச் சேர்ந்த செபஸ்டின் (46) ஓட்டி வந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வந்ததும், விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்த பழனிசாமி (37) என்பவர் சுழற்சி முறையில், பேருந்தை ஓட்டி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மங்கலம் பேட்டை அருகே உள்ள புல்லூர் செல்லும் சாலையில், வந்து கொண்டிருக்கும் போது, 3:45 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, சாலை ஓரத்தில் உள்ள, நீர் நிரம்பி நிற்கும் மங்கலம்பேட்டை பெரிய ஏரியின் உள்ளே எதிர்பாராத விதமாக இறங்கி விபத்தில் சிக்கியது.

இதில் ஓட்டுநர் பழனிசாமி சாமர்த்தியமாகச் செயல்பட்டு பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். ஒரு சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்கலபேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில், துணை ஆய்வாளர் பிரசன்னா மற்றும் கோதண்டபாணி, ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள் பயணிகளை மீட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தொலை தூரம் செல்லும் அரசு பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

ஞாயிறு 24 ஜன 2021