மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஜன 2021

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்!

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்!

பள்ளிகளைத் திறப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தமிழக அரசுதான் சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களைத் திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 24 மணி நேரமும் மாணவர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், 22.3 சதவிகித மாணவ மாணவியர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர்கள் தூக்கமின்மை மற்றும் ஆரோக்கிய குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தைகளின் நடத்தையிலும், உணர்வுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக 87 சதவிகிதப் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற நிச்சயமற்ற நிலையில், கல்விச்சுமையும் மாணவர்களின் மனநலத்தை பாதிக்கச் செய்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி, கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாகப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். தலா 50 சதவிகித மாணவர்களுடன், இரு அமர்வுகளாக மூன்று மணி நேரம் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (ஜனவரி 21) விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “தமிழக அரசுதான் பள்ளிகளைத் திறப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். பள்ளிகள் திறப்பது முக்கியமானது என்றாலும் எச்சரிக்கையுடன் முடிவு எடுக்க வேண்டியதுள்ளது. அதேநேரம் பள்ளிகள் திறப்பது தொடர்பாக, எந்த ஓர் அழுத்தமும் இல்லாமல், தமிழக அரசு சுதந்திரமாக முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த வழக்கும் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம். எனவே, 8 முதல் 10 வாரங்களுக்குள் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கவில்லை என்றால், மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வெள்ளி 22 ஜன 2021