மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

டாக்டர் சாந்தாவுக்கு அரசு மரியாதை! முதல்வரை பாராட்டும் மருத்துவ உலகம்

டாக்டர் சாந்தாவுக்கு அரசு மரியாதை! முதல்வரை பாராட்டும் மருத்துவ உலகம்

‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்று தான் பாடிய பாடலுக்கேற்ப வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., அந்தப் பாடலின் வரிகள், அத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டுமென்ற உத்வேகத்தையும் பலரிடம் ஏற்படுத்தியிருக்கும். அப்படி வாழ்ந்து மறைந்தவர்களுக்கு எம்.ஜி.ஆர்., நிறுவிய அரசியல் இயக்கமே உரிய மரியாதை செய்வதை ஊர் உலகமே மெச்சுகிறது.

சென்னை அடையாறு கேன்சர் சிகிச்சை மையத்தின் தலைவரும், மூத்த புற்றுநோயியல் நிபுணருமான வி.சாந்தா, கடந்த 19 ஆம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். அவருடைய 93 ஆண்டு கால வாழ்க்கையில் 68 ஆண்டுகளை புற்றுநோய் மருத்துவத்துக்கு அர்ப்பணித்தவர். பல லட்சம் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்க ஓய்வு உளைச்சலின்றி உழைத்தவர். இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஆசியாவுக்கே பெருமை தேடித்தந்த மருத்துவர் சாந்தா.

அடையாறு கேன்சர் சிகிச்சை மையத்தை நாடி உலகம் முழுவதிலிருந்தும் பல ஆயிரம் புற்றுநோயாளிகள் தேடி வருவதற்கு ஆணிவேராக இருந்து அதனை ஆலமரமாக வளர்த்தெடுத்தவர். ஆனாலும் ‘அதில் நான் ஒரு சிறு அங்கம்தான்’ என்று தன்னடக்கத்தாலும் தன்னிகரற்று விளங்கியவர் சாந்தா. அவருக்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவருடைய மறைவுக்கு அதே அரசுகளின் சார்பில் இறுதி மரியாதை செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, எல்லோரிடமும் இருந்தது. ஆனால் அன்றைய நாளில் டெல்லிக்குச் சென்றிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

டாக்டர் சாந்தாவின் அர்ப்பணிப்புள்ள பணிகளைப் பற்றி முதல்வரும் நன்கு அறிந்திருந்ததால் அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார். அவருடைய உடல் தகனம் மறுநாள் நடப்பதாக இருந்தால் கண்டிப்பாக அதில் பங்கேற்கிறேன் என்றும் உத்தரவாதம் தந்திருக்கிறார். ஆனால் அன்றைய தினமே அவருடைய உடல் தகனம் செய்யப்படவிருப்பது தெரிந்து வருந்திய முதல்வர் பழனிசாமி, அவருக்கு அரசு சார்பில் உரிய வகையில் இறுதி மரியாதை செய்வதற்கு ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு தமிழக காவல்துறை தலைவருக்கு தொடர்பு கொண்ட போது அவர் விடுமுறையில் இருந்ததால், சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் கூறப்பட்டது. அதன்படி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாஷேசைய்யன். சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் சாந்தா இறந்த அன்றே அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டாலும், உடனடியாக முடிவெடுத்து அவருக்கு அரசு மரியாதை செலுத்தியதில் முதல்வர் பழனிசாமியின் நடவடிக்கையை தமிழகத்திலுள்ள மருத்துவர்கள் மட்டுமின்றி, அவருடைய சேவையை அறிந்த அனைத்து மருத்துவர்களும் பாராட்டுகின்றனர். ஏற்கெனவே பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் இதேபோன்று அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்வதற்கு முதல்வர் உத்தரவிட்டதும் இப்போது நினைவுகூரப்படுகிறது.

வந்தாரை வாழ வைப்பதில் மட்டுமில்லை; நன்றாக வாழ்ந்தோரை உரிய மரியாதையுடன் வழியனுப்புவதிலும் தமிழகத்துக்கு நிகரான மண்ணில்லை!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வியாழன் 21 ஜன 2021