மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

இறுதிப் பட்டியல்: தமிழகத்தில் ஆறே கால் கோடி வாக்காளர்கள்!

இறுதிப் பட்டியல்: தமிழகத்தில் ஆறே கால் கோடி வாக்காளர்கள்!

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் ஆறே கால் கோடி வாக்காளர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தமிழகத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. அதன்படி, கடந்த 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இறந்து போனவர்களின் பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக கடந்த நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 15ஆம் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு அவற்றை பரிசீலித்து நேற்று மாவட்ட வாரியாகவும், சட்டமன்ற தொகுதி வாரியாகவும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 21 லட்சத்து 82, 120 பேர் புதிதாகப் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்து இருந்தனர். இதில், 21 லட்சத்து 39,395 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களது பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இறந்து போனவர்கள், இடம் மாறியவர்கள், போலியாக பெயர்களை சேர்த்தவர்கள் என 5 லட்சத்து 9,307 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 3 லட்சத்து 32,743 விண்ணப்பங்கள் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக பெறப்பட்டன. இதில், 3 லட்சத்து 9,292 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்காக ஒரு லட்சத்து 84, 791 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் ஒரு லட்சத்து 75,365 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74, 446 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38,473 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 3 கோடியே 18 லட்சத்து 28,727 பேர் பெண் வாக்காளர்கள். 7,246 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். சிறப்பு முகாம்களின்போது வெளிநாடுகளில் வசித்து வரும் 47 பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். மொத்த வாக்காளர்களில் 4 லட்சத்து 62,597 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

தங்களது பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை http://elections.tn.gov.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான போதும் தொடர் திருத்த நடைமுறை அமலில் உள்ளது. 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்ப படிவம் 6ஐ சமர்ப்பித்தும்,www.nvsp.in. என்ற இணையதளம் மூலமும், வோட்டர் ஹெல்ப்லைன் எனப்படும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட தகவல் மையங்கள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மாநில தகவல் மையம் தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் செயல்படுகிறது. 180042521950 எனப்படும் கட்டணமில்லா தொலைபேசி மூலம் மாநில தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதில் 18-19 வயதுடையோர் அதிக ஆர்வம்காட்டினர். இதன் காரணமாக தமிழகத்தில் நடந்த சிறப்பு சுருக்க திருத்த முகாம்களின் போது 18-19 வயதுடைய 8 லட்சத்து 97, 694 பேர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதில், 4 லட்சத்து 80, 953 பேர் ஆண்கள். 4 லட்சத்து 16,423 பேர் பெண்கள். 318 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி ஆகும். இங்கு 6 லட்சத்து 94,845 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோன்று குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி ஆகும். இங்கு 1 லட்சத்து 76,272 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 21 ஜன 2021