மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

300 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

300 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

300 நாட்களுக்குப் பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் நேற்று (ஜனவரி 19) முதல் திறக்கப்பட்டு இருக்கின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் மூன்றாவது வாரம் முதல் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தன.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தன. அதைப் பின்பற்றியே நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளி நுழைவுவாயில் பகுதிகளில் ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு கண்காணித்தனர். பின்னர் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தி் மாணவ-மாணவிகளைப் பள்ளிகளுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவ-மாணவிகள் மட்டுமே அனுமதி என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே, ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 25 மாணவ-மாணவிகள் அமருவதற்கு ஏதுவாக இடைவெளிகள் பின்பற்றப்பட்டு இருந்தன. ஒரு மேஜைக்கு இரண்டு மாணவர்கள் வீதம் ஒரு அறையில் 25 மாணவர்களுக்கும் குறைவான அளவிலேயே அமர்ந்து இருந்தனர்.

மாணவ-மாணவிகள் 300 நாட்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வருவதால் உற்சாக மிகுதியில் நண்பர்களைக் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு சமூக இடைவெளியை அவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய பள்ளிகளில் கண்காணிப்புக் குழுவும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் மாணவ-மாணவிகள் ஒன்றாக கூடி பேசுவதை தவிர்க்கவும், பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் கண்காணித்தனர்.

சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்குச் செல்வதற்கு முன்பாக வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பின்பற்ற வேண்டியவை எவை, செய்யக்கூடாதவை எவை போன்றவை அடங்கிய துண்டு பிரசுரங்களும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

அடிக்கடி மாணவர்கள் கைகளை கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி வளாகங்களில் தண்ணீர் மற்றும் கைகளை கழுவுவதற்கு சோப்புகளும், இதுதவிர சானிடைசர் வழங்கும் கருவிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

300 நாட்களுக்குப் பிறகு பள்ளிகளுக்குத் திரும்பிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியோடு இருப்பதாக கூறினர். கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு வந்திருந்ததாகவும், வராதவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடுவார்கள் எனவும் கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

புதன் 20 ஜன 2021