மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

திமுக மாநாட்டு பணிகள்.. - துவக்கி வைத்த நேரு; மகேஷ் மிஸ்ஸிங்!

திமுக மாநாட்டு பணிகள்.. - துவக்கி வைத்த நேரு; மகேஷ் மிஸ்ஸிங்!

“ஆபரேசன் செஞ்சுட்டு அஞ்சு நாளைக்கி முன்னாடி திருச்சி வந்த நேருவே, தன்னுடைய உடல் நிலையை பொருட்படுத்தாமல் மாநாட்டு பணிகளை துவக்கி வைக்க எந்திருச்சி வந்துட்டாரு. ஆனால், இந்த மகேஷ் பொய்யாமொழி மட்டும் வரலையே” என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் திருச்சி மாவட்ட தி.மு.க.வினர்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில மாதங்களாகவே மாவட்ட வாரியாக உள்ள கட்சி நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணையத்தின் மூலமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி மாநாடு நடத்தும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இதற்காக, திருச்சி – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் சுமார் 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த நிலத்தின் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போடும் பணிகளை கடந்த டிசம்பர் மாதமே துவங்கி விட்டார் திமுகவின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு. இந்நிலையில், இன்று (18.01.2021) திங்கட்கிழமை காலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களோடு சிறுகனூரில் மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்குச் சென்ற கே.என்.நேரு, அங்கிருக்கும் முள் செடிகளை அகற்றி, இடத்தை புல்டோசர் கொண்டு தூய்மைப் படுத்தும் பணிகளைத் துவக்கி வைத்தார்.

திமுக சார்பாக மாநிலம் தழுவிய அளவில் இதுவரை 10 மாநாடுகள் நடந்துள்ள நிலையில், தற்போது நடக்கவிருக்கும் இந்த 11வது திருச்சி மாநாடானது மற்ற மாநாடுகளை விட வித்தியாசமன முறையில் இருக்கும் எனக் கூறுகிறார்கள் திருச்சி திமுக நிர்வாகிகள். அதாவது, பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் அந்த மாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி திமுகவின் தொண்டர்களுக்கும் அழைப்பில்லை எனவும், மாவட்ட வாரியாக வட்டச் செயலாளர்கள் முதல் கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் வரை உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் வேலையில், கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள் முதல் மேல் மட்ட நிர்வாகிகள் வரை அனைவருக்கும் உற்சாகமூட்டும் மாநாடாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்குவதே திருச்சியில்தான் இருக்கும் எனவும், இதற்காக, பொன்மலை ஜி கார்னர் பகுதியில் மாநாடு நடத்தும் அளவிற்கு மிகப்பெரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி திமுகவைப் பொறுத்த வரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கூறப்படும் சூழலில், இன்றைய மாநாட்டுப் பணிகள் துவக்க நிகழ்வில் கலந்து கொள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் மட்டும் ‘மிஸ்ஸிங்’ ஆன விசயம் திருச்சி திமுகவினரை திகைப்புக்குள்ளாக்கியது. ஆனால், மகேஷ் பொய்யாமொழி தரப்போ, ‘அண்ணன் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வாக இருப்பதால், கடந்த இரண்டு தினங்களாக தொகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை பார்வையிட்டு வருகிறார். அதனால் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. முதன்மைச் செயலாளரிடம் அவர் பேசிவிட்டார்” என தகவல் தெரிவிக்கிறது.

நாளை திருச்சி வரவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டுப் பணிகளை பார்வையிடுவார் எனவும் கூறப்படுகிறது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 18 ஜன 2021