மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

ஜனவரி 14 ஆம் தேதி துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, நீதிபதிகள் நியமனம் குறித்து காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை அரசியல்வாதிகளாலேயே நியமிக்கப்படுகிறார்கள், யார் மூலமோ யார் காலையோ பிடித்து தகுதி இல்லாதவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிவிடுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் குருமூர்த்தி.

இதற்கு எதிராக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சிலர் குருமூர்த்தி மீது புகார் அளிக்க, அதற்கு சி.எஸ்.ஆர். எனப்படும் ரசீதும் கொடுத்துள்ளது காவல்நிலையம்,

குருமூர்த்திக்கு எதிராக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் ஜெ. தடா ரஹீமும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் ஜனவரி 17 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில்,

“கடந்த 14-01-2021 அன்று துக்ளக் பொன்விழா ஆண்டை முன்னிட்டு துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளை பற்றி கேவலமான முறையில் விமர்சனம் செய்துள்ளார் ..

இந்தியாவில் பல விதமான கிரிமினல் வழக்குகளில் நீதிபதிகள், பலருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அரசாங்கத்தால் தூக்குத் தண்டனை நிறைவேற்றி உள்ளது உதாரணமாக அப்சல் குரு , யாகூப் மேனன் உட்பட பலர் அதே போன்று நீதிபதிகளால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக பல ஆயிரம் பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதே போன்று சிவில் வழக்குகளில் பலவிதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கிய போதிலும் ஒருவருக்கு பாதிப்பு வந்தாலும் பாதிக்கப்பட்டவர் நீதிக்கு கட்டுப்பட்டு நீதிபதிகளின் தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு வருகின்றனர் உதாரணத்திற்கு பாபர் மசூதி தீர்ப்பு உட்பட ... நீதி ஒரு பக்கத்திற்கு சாதகமாக வும் மறு பக்கத்திற்கு பாதகமாக இருந்தாலும் இந்தியாவின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு நீதிபதிகளின் தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கொண்டு வருகின்றனர் ..

ஆனால் துக்ளக் விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் எல்லாம் ஏதோ அரசியல் வாதியின் காலை பிடித்து நீதிபதியானவர்கள் தான் , யாரும் திறமையின் அடிப்படையில் நீதிபதியாக நியமிக்கப்படுவது இல்லை அதனால் நீதியை எதிர்பார்க்க முடியாது என பேசி உள்ளார்

ஆகவே நீதிபதிகள் பற்றி கொச்சைப்படுத்தி கேவலமாக விமர்சனம் செய்த துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை உச்சநீதிமன்ற , உயர்நீதிமன்ற நீதிபதிகள் தானாகவே முன்வந்து வழக்கை விசாரித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை உடனே கைது செய்து தேசிய பாதுகாப்பு (NSA) சட்டத்தில் சிறையில் அடைக்க தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் அப்போது தான் மக்களுக்கு நீதியின் மீதும் நீதிபதிகள் மீதும் இதுவரை வைத்த நம்பிக்கை தொடரும் இல்லை என்றால் அரசியல் வாதிகளின் கை பாவை என நீதிபதிகளை மக்கள் சாடுவார்கள்

நீதிபதிகள் தானாகவே முன்வந்து வழக்கை விசாரித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கவில்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நீதிபதிகளுக்கு வளையல்கள் போடும் போராட்டம் நடத்துவோம்”என்று அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 18) காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், ‘ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம் குறித்து அவதுறான தகவல்களை பேசியுள்ளார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முறையீடு செய்தார்,

அதற்கு நீதிபதிகள், “இதுகுறித்து முறையான மனுவை தாக்கல் செய்தால் மனுவை ஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம்.எனவே மனு தாக்கல் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளனர். எனவே வழக்கறிஞர் அலெக்சாண்டர் சார்லஸ் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக மனு தாக்கல் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.

முன்னதாக நேற்று (ஜனவரி 17) ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டரில், ”நான் நீதித்துறை மீது எப்போதுமே உயர்ந்த மதிப்பு வைத்திருப்பவன். துக்ளக் விழாவில் வாசகர் ஒருவருக்கு நான் பதிலளிக்கும்போது .. நீதிபதி பதவிக்காக விண்ணப்பிக்கும் சிலர் எப்படி அரசியல்வாதிகளை ஆதரவுக்காக அணுகுகிறார்கள் என்பதையே நான் நினைத்துப் பேசினேன். ஆனால் அந்த சூழ்நிலையின் வெப்பத்தில் நீதிபதி பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் என்ற பதத்திற்குப் பதிலாக நீதிபதிகள் என்று நான் பயன்படுத்தி விட்டேன். அது தவறுதான். அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

நீதித்துறை மீதும் நீதிபதிகள் மீதும் எப்போதுமே நான் மரியாதை கொண்டிருப்பவன். . இந்த நிலையில் நான் நீதிபதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு உண்மையாகவே எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.

இதே குருமூர்த்தி 2018 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை, ‘ப.சிதம்பரத்தின் ஜூனியராக இருந்தவரா’என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார் . இதன் பேரில் டெல்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து குருமூர்த்தியை விமர்சித்த நிலையில், தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார் குருமூர்த்தி.

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

திங்கள் 18 ஜன 2021