மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஜன 2021

நீதிபதிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

நீதிபதிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கலுக்கு முன்னதாக வேலைநாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அதுபோன்று முதன் முறையாகப் பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கடந்த ஜனவரி 12ஆம் தேதி, பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் உள்ளிட்ட பார் கவுன்சில் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சி, நீதிபதிகளின் நகைச்சுவை பேச்சு என கோலாகலமாக விழா நடத்தப்பட்டது.

இதில் பேசிய நீதிபதி கிருபாகரன், “ வேளாண்மை என்பது இயற்கையோடு இயந்து வாழ்வது. கொரோனா காலத்தில், லாக் டவுன் என்று சொன்னவுடன், நாமெல்லாம் விளம்பரத்தில் வரக் கூடிய ஜவுளி கடைகளுக்கும், நகைக் கடைகளுக்கும் செல்லவில்லை... எங்கே சென்றோம்... காய்கறி கடைகளுக்கு சென்றோம்... அரிசி கடைக்கு சென்றோம்.... இதையெல்லாம் கொடுத்தவர்கள் விவசாயிகள் தான். இவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவது தான் பொங்கல்.

பகலவன் இல்லை என்றால் உலகு கிடையாது. பகலவன் ஒளியிலிருந்துதான் பயிர்கள் விளைகின்றன. எனவே பகலவனுக்கும் ஒரு கொண்டாட்டம் நடக்கிறது என்றால் அதுவும் பொங்கல் பண்டிகைதான்... இயற்கையோடு இயந்து இருப்பது தான் பொங்கலும் தமிழனும்.

உலகின் மிகப் பெரிய விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும். காலம் மாறிவிட்டது, நம்முடைய பண்பாடு மாறிவிட்டது, தமிழ் மாறிவிட்டது. தமிழை மறந்துகொண்டிருக்கிறோம். அதையெல்லாம் மறக்காமல் இருக்க இந்த பொங்கல் திருநாளில், நம் பண்பாட்டை, தமிழ் மொழியை மறக்க வேண்டாம் என உறுதிமொழி எடுப்போம்.

சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார்கள். அவர் மராட்டியைத் தாய் மொழியாகக் கொண்டவர். கர்நாடகத்தில் பிறந்து இங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மலையாள மொழியையும், ஜெயலலிதா கன்னட மொழியையும் தாய் மொழியாக கொண்டவர்கள். இங்கு அவர்களை முதல்வர்களாகக் கொண்டாடினோம்.

விஜயகாந்த், வைகோ ஆகியோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இது தமிழர்கள் மொழி, இன வெறி பிடித்தவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது. யாராக இருந்தாலும் போற்றிக்கொண்டாடுவார்கள். வேறு மாநிலங்களில் சென்று மாற்று மொழி பேசுபவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆனால் தமிழகத்தில் செலுத்தலாம். நல்லதைச் செய்தால் கொண்டாடுவோம். தமிழர்களை அரவணைக்கும் பண்பு உண்டு. யாரையும் வெறுக்கும் பண்பு கிடையாது என்றவர், இதை யாரையும் குத்திக்காட்ட வேண்டும் எனச் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாக இந்தியாவில் 2 மொழிகள் தான். ஒன்று பிராகர்தம், மற்றொன்று தமிழ். பிராகர்தம் என்பது அசோகர் காலத்தில் கிமு 325 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த மொழி என்று சொல்கிறார்கள். ஆனால் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் தொல்லியல் ஆய்வுகளில் கிமு 521 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களுடைய மொழியாக தமிழ் உள்ளது என்று சொல்கிறார்கள். மண் பாண்டங்களில் தமிழில் எழுதி வைத்துள்ளனர்.

இதன்மூலம், தமிழ் சமுதாயம் அப்போது எழுத படிக்கத் தெரிந்த சமுதாயமாக இருந்திருக்கிறது. ஆங்கிலம் படித்தால் உலகெங்கிலும் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம்.ஆனால் தமிழ் என்பது நமக்கு மற்றொரு கண். இதனை மறந்துவிடக் கூடாது. அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வோம் என இந்நாளில் உறுதி மொழி ஏற்போம்” என்று பேசினார்.

நீதிபதி வைத்தியநாதன் பேசுகையில், “பொங்கல் இனவாத அடிப்படையிலானது கிடையாது. முதலில் விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இரண்டாவதாக நாமெல்லாம் நிம்மதியாகத் தூங்குவதற்குக் காரணம் எல்லைகளில் போராடும் ராணுவ வீரர்கள் தான். அவர்களுக்கும் பொங்கல் வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன். விவசாயிகள், ராணுவ வீரர்கள் இல்லை என்றால் நமக்கு வாழ்க்கையே இல்லை. சேர்மேன் மற்றும் மற்றவர்கள் பேசும் போது, ‘அந்த காலத்தில் குழந்தைகளை பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவோம்’ என மிரட்டுவது போல், நீதிபதி கிருபாகரனைப் பூச்சாண்டியாகக் காண்பித்துவிட்டீர்கள். நகைச்சுவையாக இருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்தது சந்தோஷமாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 14 ஜன 2021