மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஜன 2021

மின்னணுப் பொருளாதாரம்- சிறப்புத் தொடர்: ஒன்றிணையும் யூரேசிய - தனிமைப்படும் இந்தியா! பாகம் 8

மின்னணுப் பொருளாதாரம்- சிறப்புத் தொடர்: ஒன்றிணையும் யூரேசிய - தனிமைப்படும் இந்தியா! பாகம் 8

பாஸ்கர் செல்வராஜ்

கடந்த நவம்பர் மாதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 10 ஆசிய நாடுகளும், மற்ற ஆசிய நாடுகளான சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் இணைந்து இந்த பிராந்தியத்துக்கான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (RCEP) ஒன்றை செய்து கொண்டன. இதையடுத்து கடந்த டிசம்பர் 30 அன்று ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் முதலீட்டுக்கான அகல் விரிவான ஒப்பந்தம் (Comprehensive Agreement on Investment–CAI) ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. டிரம்ப் தோல்வி, அதையடுத்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக விழும் இரண்டாவது இடி என்றே இதைச் சொல்ல வேண்டும்.

ஏன் வர்த்தக ஒப்பந்தங்கள்?

எல்லா நாடுகளும் தமக்குத் தேவையான பொருட்களை தாமே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. அதேபோல பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முதலீடு, மூலப்பொருட்கள், தொழிலாளர்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஒரே நாட்டில் இருப்பதில்லை. இந்த போதாமைகளை நாடுகள் தங்களுக்குள் பேசி இருதரப்பும் தங்களிடம் உள்ளதைக் கொடுத்து வாங்கிக் கொண்டு இருவரும் பயனடையும் வகையில் இருதரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இந்த ஒப்பந்தங்கள் இருவரின் இசைவிலோ, ஒரு நாட்டின் தவிர்க்க இயலாத கையறு நிலையிலோ, ராணுவ அரசியல் பொருளாதார பலமிக்க நாடு மற்ற நாடுகளின் மீது அழுத்தம் கொடுத்தோ, கட்டாயப்படுத்தியோ ஏற்படுத்தப்படுகிறது.

உலக அரசியல்

பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூறுகளோடு அப்பொருட்களுக்கான சந்தை, சந்தை இருக்கும் நாடுகளுக்குப் பொருட்களைத் தங்குதடையின்றி கொண்டு செல்வதற்கான கடல் அல்லது நிலவழி பாதை (Geopolitics), பொருட்களை நாடுகளுக்கிடையில் பரிமாறிக் கொள்வதற்கான பொதுவான பணம் (டாலர்), அந்தப் பணம் நாடுகளின் வங்கிகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பு (SWIFT) எனப் பல்வேறு கூறுகளை இது உள்ளடக்கியது. இந்தக் கூறுகளைக் கட்டுப்படுத்தவும் கைக்கொள்வதற்குமான நடவடிக்கைகளே உலக அரசியலாக நாம் காண்கிறோம். இப்படியான நடவடிக்கையின் பகுதியாகவே நாடுகளின் தலைவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்படியான பயணங்களையே தலைமை அமைச்சர் மோடி மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை...

தொண்ணூறுகளுக்கு முன்பு வரை இவ்வாறான நடவடிக்கைகள் இருநாடுகளுக்கு இடைப்பட்டதாகவும் அந்நாடுகளுக்கு இடைப்பட்ட நாணயங்களில் செய்யக் கூடியதாகவும் இருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவின் தலைமையில் பொதுவான வர்த்தக வடிவம் (WTO) பெற்று பெரும்பாலும் டாலரின் மட்டுமே நடைபெறக்கூடியதாக மாறியது. அமெரிக்காவின் நிதி மூலதனம், உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதிக மதிப்பு கொண்ட தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் உலகம் முழுதும் பாய்ந்தது. மற்ற நாடுகளில் இருந்து பெரும்பாலும் விலைமதிப்பு குறைந்த பொருட்கள் அமெரிக்கச் சந்தைக்குச் சென்றது.

இந்திய உலக வர்த்தகம்

தொண்ணூறில் ஏற்பட்ட டாலர் நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி இந்தியா இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உற்பத்திக்கான முதலீடுகளும், தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்குள் பாய்ந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைந்து நம் வீடுகளில் நிறைந்தது. இந்தியாவில் இருந்து மென்பொருட்கள் (Software), பெட்ரோலிய பொருட்கள், ஆபரணக்கற்கள், துணிகள், மருந்துப்பொருட்கள், உலோகப் பொருட்கள், பொறியியலாக்கப் பொருட்கள் (Engeering Goods) போன்றவை பிற நாடுகளின் சந்தைகளுக்கு ஏற்றுமதி ஆனது. கூடுதலாகக் கூலி உழைப்பாளர்களையும், படித்த திறன்மிக்க உழைப்பாளர்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.

மூலம்: Theme Paper on GLOBAL VALUE CHAINS EXPANDING BOUNDARIES OF INDIAN MSMES 2018-2019

சீனாவின் வளர்ச்சி

இப்படியான விலைமதிப்பு குறைந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கிய சீனா, உற்பத்தி தொழில்நுட்பங்களில் தன்னிறைவு அடையத் தொடங்கி, விலைமதிப்புமிக்க திறன்பேசிகள், இணைய சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்தது. அதன் மொத்த உற்பத்தி மதிப்பு (GDP) அமெரிக்காவை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்திருக்கிறது. அதோடு தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் என்று கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), அதிவேக இணைய சாதனங்கள் 5ஜி, அதிவேக கணினிகள் (Supercomputers), Cloud Computing, சேமக்கலங்கள் (Battery), மின்னணு நாணய தொழில்நுட்பம் (Blockchain Technology) என அனைத்திலும் அமெரிக்காவுக்கு இணையாகவும் சில துறைகளில் அதனை விஞ்சியும் வளர்ந்திருக்கிறது. இது சந்தைக்கான சீன-அமெரிக்கப் போட்டியை உருவாக்கியது.

சீனாவுக்கு எதிராக மேற்குலகம்

இப்படி பெருகி வந்த சீன பொருட்களை உலகம் முழுதும் சந்தைப்படுத்த நடப்பில் இருக்கும் வர்த்தக முறை ஏதுவாக இருந்து வருகிறது. இதுவரையிலும் அமெரிக்கப் பொருட்களுக்கு சாதகமாக இருந்தது, இப்போது அதன் போட்டியாளனுக்கு சாதகமானதாக மாறியது. தொழில்நுட்ப ரீதியாக பொருட்களை மேம்படுத்தி, குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சீனப் பொருட்களை எதிர்கொள்ள முடியாத மேற்குலக அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தில் இவர்கள் மாற்று மரபுசாரா எரிசக்தியை உருவாக்குவது, புதிய மின்னாற்றலில் இயங்கும் மகிழுந்துகளை (Electric Car) உருவாக்குவது போன்ற கொள்கைகளையும், சீனா தனது எரிபொருளுக்கு மற்ற நாடுகளையும் கடல்வழியையும் சார்ந்திருப்பதை ஆயுதமாக்கி அடிபணிய வைப்பது, சீன எண்ணெய் சந்தையைக் குறிவைத்து நகரும் மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவது, ரஷிய - சீனக் கூட்டை உடைப்பது, ‌ரஷியாவுக்குப் போட்டியாக கத்தாரின் சிரியா வழியான எரிவாயுக் குழாய் திட்டத்தை உருவாக்க சிரியாவில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவது எனப் பல முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அத்தனையும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

பிளவுபட்ட கூட்டு

இறுதியில் அவரவர் நலன்களை முன்னிறுத்தும் அரசியல் நகர்வுகள் ஆரம்பித்தது. ஜெர்மனி விலையுயர்ந்த அமெரிக்க எரிவாயுவை இறக்குமதி செய்ய மறுத்து ரஷியாவில் இருந்து மற்றுமொரு எரிவாயுக்குழாய் அமைக்க ஒப்பந்தம் (Nord stream 2) செய்து கொண்டது, சீனாவுடனான பொருளாதார நெருக்கத்தை அதிகப்படுத்தியது. ஒபாமாவை அடுத்து வந்த டிரம்ப் நிர்வாகம் இதுவரையிலான அரசியல் ஒப்பனைகள், கலைச்சொற்களை எல்லாம் களைந்து நேரடியாகவே தனது நாட்டின் பொருளாதார நலனை முன்னிறுத்தும் அரசியல் பேரத்தில் ஈடுபட்டது. தான் உருவாக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் எதிரிக்கு சாதகமாக இருப்பதால் தானே உடைத்து நொறுக்க ஆரம்பித்தது. பல்வேறு வர்த்தக விதிகளை மீறியது. சுற்றுச்சூழல், அரசியல், பொருளாதார ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறியது. தமது பொருளாதார சுமைகளைக் குறைக்க தமது அணி நாடுகளை ராணுவச் செலவுகளை கூட்டவும், அமெரிக்க பொருட்களை வாங்கவும் வற்புறுத்தியது.

சீனாவுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப போர்

சீனாவுடனான வர்த்தகப் போரை ஆரம்பித்தது. சீனா பணிய மறுக்கவே அதன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை முடக்க அதன் மீதான தொழில்நுட்ப போரை (Tech war) தொடுத்தது. சீன திறன்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு மென்பொருளைப் பயன்படுத்த தடை, ஹோவாவெய் நிறுவனம் 5ஜி சாதனங்களை சந்தைப்படுத்த தடை, இந்தப் பொருட்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையான சில்லுகளை (Chip) விற்க தடை, அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எல்லா நாடுகளும் சீன நிறுவனங்களுக்கு இப்பொருட்களை விற்க தடை, இவற்றை மீறினால் அவர்களின் மீது பொருளாதாரத் தடை எனத் தடைமேல் தடை விதித்து சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. சீனா இதற்கு எதற்கும் பணியாமல் எல்லா தடையையும் உடைத்து ஹார்மொனி OS, சொந்த சில்லுகளை உருவாக்கும் தொழில்நுட்பம் என மாற்றுகளை உருவாக்கி 2025க்குள் தொழில்நுட்பத் தன்னிறைவை அடையும் திட்டத்தை வெளியிட்டது.

கேள்விக்குறியான உலகமயம்

இது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பாதித்தது. இந்த அடாவடித்தனமான செயல்பாடுகள் உலக நாடுகளை சினமடைய வைத்தது. அமெரிக்காவின் பெரிய சந்தை, அவர்களை மீறி வர்த்தகம் செய்ய முடியாத சூழல் ஒருபுறம், அதற்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் சீன சந்தையை இழக்க முடியாத எதார்த்தம் மறுபுறம் என நாடுகளை அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. இதை ஏற்காமல் தற்சமயத்துக்குச் சகித்துக்கொண்டு மாற்றை நோக்கி நகர ஆரம்பித்தன. ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் சொந்த ராணுவத்தை உருவாக்குவது குறித்து பேச ஆரம்பித்தது. ஜப்பானும் அந்த திசையில் நகர ஆரம்பித்தது. சீனாவின் ஹோவாவெய்யின் 5ஜி சாதனங்களை தென்கொரியா தடை செய்ய மறுத்தது. இதனால் அமெரிக்காவின் தலைமையில் ஒரு துருவ உலகமாக (Unipolar) இருந்தது பல்துருவ உலகமாக (Multipolar) மாற்றம் கண்டது. உலகமயத்தைப் பின்னுக்குத் தள்ளி தேசியவாதம் வலுப்பெற ஆரம்பித்தது.

கொரோனா கொண்டுவந்த மாற்றம்

உலகமயப் பின்னடைவை அடுத்து இது என்னவாக மாறும் என்று விவாதம் எழுந்த சூழலிலேயே கொரோனா வந்தது. சீனா இதைக் கட்டுப்படுத்த முடியாமல் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கணக்கிட்ட அமெரிக்கா தனது தனிமைப்படுத்தும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி பழைய பனிப்போரை மாதிரியாகக்கொண்டு உலகை இரு முகாம்களாகப் பிரிக்க முயன்றது. இந்த கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டு கைகோத்தவர்கள் இருவர்தான். ஒன்று இந்தியா, மற்றொன்று ஆஸ்திரேலியா. மற்றவர்கள் நடுநிலை வகித்தார்கள். ஒருபக்க சார்பாக நடந்து கொள்ள அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தைப் புறக்கணித்தார்கள்.

இந்தியாவின் கணக்கு

சீனாவும் அமெரிக்காவும் இணக்கம் காண முடியாத வகையில் முரண்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் ஒன்றிணைந்து இயங்குவது சாத்தியமே இல்லை என இந்தியா கணக்கிட்டது. இந்த முரண்பாடு முற்றும் போது வேறு வழியின்றி சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் என நம்பியது. அடுத்து டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என அவர்மீது பந்தயம் கட்டியது. அவருக்கு நேரடியாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இறங்கியது. அமெரிக்கத் தலைமையை எந்த நாடும் மீறும் சூழல் இன்னும் ஏற்படவில்லை எனக் கணித்தது. அமெரிக்காவுடன் தோளோடு தோளாக நின்று சீனாவுக்கு எதிரான சண்டையில் பங்கேற்றது. சீன முதலீடுகளைத் தடுத்து, அவர்களுக்கு இந்திய சந்தையை மறுத்து, அவர்களைச் சந்தையில் இருந்து வெளியேற்றியது.

அதிகார போதையில் தடுமாறிய இந்தியா

இதுவரையிலும் தாமதித்து வந்த இந்தியச் சில்லறை வணிக சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையாக திறந்து விட்டது. அமெரிக்க நிறுவனங்களான அமேசான், வால்மார்ட் ஆகிய வணிக நிறுவனங்களுக்கும், கூகுள், முகநூல் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், இவர்களின் இந்திய கூட்டாளியான ஜியோவுக்கும் சந்தை முற்றுருமையை (Monopoly) வழங்கியது. இதுவரையிலும் ஆயுத விற்பனை செய்து வந்த ரஷியாவை வெளியேற்றி அந்த இடத்தை அமெரிக்க நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன. இவர்களுக்கு சாதகமான இந்திய விவசாயத் துறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் விவசாய திருத்த சட்டங்களை இந்தியா கொண்டுவந்தது.

முக்கியமாக விவசாயிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றும் நிலவாடகை திருத்த சட்டத்தை (Contract Forming) கொண்டு வந்தது. இப்படி வெளியேறும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் குறைகூலிகளாக சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தொடங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்ற ஏதுவாக தொழிலாளர் திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது. அவர்களைத் தயார்படுத்த புதிய கல்விக்கொள்கையை அறிவித்தது. உலகில் எந்த நாடும் இப்படி ஒரு மின்னல்வேக மாற்றத்தைக் கண்டிருக்காது.

பொய்த்துப்போன இந்தியாவின் கணக்கு

அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு மாறாக கொரோனாவுக்கு எதிராக போரில் மக்களைத் திரட்டியும் தனது தொழில்நுட்ப வலிமையை பயன்படுத்தியும் சீனா வெற்றி பெற்றது. மிகக்குறைவான பொருளாதார மனித இழப்புகளைச் சந்தித்து வேகமாக வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தவறிய அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின்போது சந்தித்ததைப் போன்ற பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. செயற்கையான போரில் வென்று உலகின் மன்னனாக முடிசூடிய அமெரிக்கா இயற்கையாக எழுந்த இந்தப் போரில் தோற்றிருக்கிறது. பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு நிஜப்போரை நிகழ்த்துவதற்குப் பதிலாக சீனாவிற்கு எதிரான நிழல் யுத்தத்தில் பங்கேற்ற இந்தியா அமெரிக்காவைப் போலவே மோசமான பொருளாதார மனித இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. மக்களை வேலையின்றி, வாழ்வாதாரமின்றி எந்த உதவியுமின்றி நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது.

திருப்பித் தாக்கும் சீனா

தோல்வியைத் தொடக்கத்தில் இருந்தே அனுமானித்து பின்வாங்காமல் முரட்டு பிடிவாதத்துடன் முன்னேறிய டிரம்ப் நிர்வாகம் தேர்தலிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அவர்களைப் பின்பற்றி பின்வாங்காமல் வால்பிடித்த இந்தியாவின் எதிர்பார்ப்பிலும் இடி விழுந்திருக்கிறது. இதுவரையிலும் ஏற்றுமதி சார்ந்து இயங்கிய சீனா சொந்த நாட்டு மக்களின் நுகர்வு (Consumer) சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ரஷியா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருளை சொந்த நாணயத்தில் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஏற்றுமதிக்கும், எரிபொருள் வாங்கவும் தேவைப்பட்ட டாலரின் தேவையை இல்லாமல் ஆக்கி, இதுவரையிலும் சேமித்த 1.3 ட்ரில்லியன் டாலர் செல்வத்தைச் செலவிட தயாராகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்குவதை சீனா ஏற்கனவே நிறுத்தி விட்டது. இந்த நுகர்வு உருவாக்கும் சந்தை தேவைக்கு சீனாவில் உள்ள மூலதனமும் வெளிநாட்டு மூலதனமும் சீன உற்பத்தியில் (Dual Circulation) ஈடுபடும். அதற்கு இசைவாக வெளிநாட்டு நிதி நிறுவனங்களை முதலிட சீனா அனுமதித்து வருகிறது. பதிலாக சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது உலக சந்தையை பெற்றுத்தரும். அப்படிப் பெருகும் வர்த்தகத்தைத் தனது சொந்த மின்னணு நாணயத்தில் நடத்துவதன் மூலம் சீன நாணயம் உலக வர்த்தகத்தில் முக்கிய இடம் பிடிக்கும் எனக் கணக்கிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. தான் உருவாக்கிய மின்னணு நாணயத்தை தற்போது பரிட்சித்துப் பார்த்து வருகிறது.

ஜெயித்தவன் பக்கம் சாய்ந்த நாடுகள்

அரசியல் பொருளாதாரச் சூழல் தெளிவடைந்த சூழலில் சீனாவின் தலைமையில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளைத் தவிர்த்து மற்ற பெரும்பாலான ஆசிய நாடுகள் இணைந்து ஆசிய பிராந்தியத்துக்கான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (RCEP) செய்து கொண்டன. இந்தியாவுடன் குவாட் (Quad) ராணுவக் கூட்டணி கட்டிய ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை இதில் தந்திரமாக இணைந்து கொண்டு தங்களது நலன்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டன. இந்தியாவுடன் உற்பத்தி சங்கிலி குறித்து பேசிய ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் இருந்து ஜப்பானுக்கும், ஆசிய நாடுகளுக்கும் செல்கிறதே ஒழிய இந்தியாவுக்கு வரவில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அமெரிக்க அதிபர் பைடன் சீனாவை அணி நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்ளும் என்று தெரிவித்து இருந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்பாகவே, தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தத்தை புறம்தள்ளி வரப்போகும் பைடன் நிர்வாகத்தின் வேண்டுகோளையும் நிராகரித்து, ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் முதலீட்டுக்கான அகல் விரிவான ஒப்பந்தத்தில் (CAI) கையொப்பமிட்டுள்ளது.

கொரோனாவுக்குப் பிறகான உலகம்

இனி நிலவழியாக ஆசிய-ஐரோப்பிய கண்டங்களை இணைக்கும் சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை (One belt One road) திட்டம் வேகமெடுக்கும். இந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய பல ட்ரில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம் கொரோனா பாதிப்பில் இருந்து உலக பொருளாதார மீட்சிக்கானதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்க வல்லதாகவும் இருக்கும். அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்வழி போக்குவரத்துக்கு மாற்றாக அமையும். இது சீன மின்னணு நாணயத்துக்கு ஊக்கமாகவும் இறுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தைக் குறைப்பதிலும் முடியும். ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட இதுவரையிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் இணையாது என்று கணக்கிட்ட இந்தியாவின் இரண்டாவது கணக்கும் பொய்யாகிப் போயுள்ளது. இது இரு விஷயங்களை தெளிவுபடுத்துகிறது.

1. உலக அரங்கில் சீனாவின் இடத்தை உறுதி செய்கிறது.

2. வரப்போகும் அமெரிக்க நிர்வாகம் சீனாவுடன் இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தலாமே ஒழிய கூட்டாக சண்டைக்கு செல்ல முடியாது.

இமாலய தவறு செய்த இந்தியா

ஆக, சீனாவில் இருந்து பெருமளவு நிறுவனங்கள் வெளியேறப் போவதில்லை மாறாக அங்கே உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம். அதை நம்பி இந்திய சில்லறை பொருள் விற்பனை சந்தையையும், ராணுவத் தளவாட சந்தையையும் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கொடுத்த இந்தியா, பதிலாக எதையும் பெறப்போவதில்லை. அவர்கள் கொடுப்பதற்கு முன்பே எடுத்துக் கொண்டு விட்டார்கள். வாக்குறுதிகளை வரமாக நம்பிய இந்தியா ஏமாந்து விட்டது. சந்தைக்கு சாதகமான கொள்கை முடிவுகள் இந்தியாவுக்குள் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இவை அனைத்தும் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிக லாபமீட்டும் தகவல்தொடர்பு சார்ந்தவை என ஜப்பானின் நிக்கி பத்திரிகை செய்தி வெளியிடுகிறது.

ஆப்பசைத்த குரங்கு

இவை இதுவரையிலும் பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வந்த முறைசாரா பொருளாதாரத்தில் நுழைவதால் இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்கவே செய்யும். சந்தையில் நுழைந்த அவர்கள் வேகமாக செயல்பாட்டுக்கு வந்து விட்டதால் இனி இதைத் தடுத்து நிறுத்தும் சாத்தியம் குறைவு. இது விவசாய துறையிலும் சிறு குறு உற்பத்தி துறையிலும் உடைப்பை ஏற்படுத்தி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் வெளியேற்றுவது தவிர்க்க இயலாதது. சிறு குறு நிறுவனங்கள் தமது பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகளின் சந்தை வளரும் வாய்ப்பு இல்லை. அங்கு வேலைசெய்த தொழிலாளர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முக்கிய ஏற்றுமதி நாடான சீனாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் அங்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

முரண்பாடுகளின் மூட்டை

சீனா குறைமதிப்பு கொண்ட பொருள் உற்பத்தியில் இருந்து அதிக மதிப்பு கொண்ட பொருள் உற்பத்தியை நோக்கி நகருகிறது. சீன தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்து வருகிறது. குறைமதிப்பு கொண்ட உற்பத்தி ஆசிய நாடுகளுக்கு நகர்கிறது. அமெரிக்கா அவ்வாறான மாற்றத்தை நோக்கி நகர்ந்த போது ஜப்பான், தைவான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் அந்த இடத்தை நிறைவு செய்து அதன் தொடர்ச்சியில் வளர்ச்சி கண்டன. அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறும் இவர்கள், அதற்கு நேரெதிராக அவ்வாறான வாய்ப்பற்ற நாட்டுடன் இணைந்திருக்கிறார்கள். இது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வளர்ச்சி சாத்தியமான அமெரிக்காவுடன் இணையாமல் நலிவடைந்த இங்கிலாந்துடன் இணைந்து அதனிடம் தொழில்நுட்பங்களை வாங்கி அவர்களின் சந்தைக்கு ஏற்றுமதி செய்து வளர போகிறோம் என்று கூறுவதற்கு இணையானது. நலிவடைந்த நாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியற்ற முற்றுருமை சூழலை வழங்கும் போது அவர்களின் நலிவை இங்கே இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துச் சரிசெய்ய முயலுவார்களா? இல்லை, இந்திய வளர்ச்சியின் தூணாக இருந்து நம்மை ஏற்றி விடுவார்களா? போட்டியில்லாத சூழலில் இந்த நிறுவனங்கள் எதற்கு விலையை குறைத்து விற்க வேண்டும்? சந்தை விதிகளின்படியே இது நடக்காத காரியம் அல்லவா? சந்தையை முழுவதுமாக மூடிக்கொண்டு சுயசார்பு பேசுவது சொந்த நிறுவனங்களை உருவாக்கும். ஒரு சிலருக்கு மட்டும் சிறப்பு முற்றுரிமை வழங்குவது எப்படி தற்சார்பை உருவாக்கும்?

என்ன செய்ய போகிறோம்?

இந்தியா எதிர்பார்க்காத வகையில் விவசாயிகள் உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சீனா தவிர்க்க முடியாத ஆற்றலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது சீனாவுடன் சமரசம் செய்து கொண்டு அவர்களின் வளர்ச்சியில் பங்கு பற்றி பெருகி நிற்கும் இந்திய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதற்குப் பதிலாக அவர்களின் இணைய தொழில்நுட்ப சாதனங்களை இந்தியச் சந்தையில் நுழைய அனுமதிக்க வேண்டும். அது பெரும் மூலதனத்துடன் இப்போது சந்தையில் இருக்கும் நிறுவனங்களின் நலனுக்கும் லாபத்துக்கும் எதிரானது. அதேபோல விவசாயிகளின் போராட்டத்துக்கு செவிசாய்த்து பின்வாங்குவதும் முறைசாரா பொருளாதாரத்தில் எதிர்பார்த்த முக்கிய நிலம் சார்ந்த மாற்றங்களைக் கொண்டு வராது.

ஆதலால் இப்போது பங்குச் சந்தையில் உள்ளே புகுந்த பணம் அங்கிருந்து வெளியேறுவதில் போய் முடியும். இப்போது அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த மறு உருவாக்க நடவடிக்கையில் இருந்து பின்வாங்கினால் நிறுவனங்களின் நலன் பாதிக்கப்படும். நிறுவனங்களின் நலனை பாதுகாத்து தற்போதைய நிலையைத் தொடர்ந்தால் மக்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தெருவில் நிற்பார்கள். அரசு இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என அறிவித்திருப்பதன் மூலம் அது யார் பக்கம் என்று தெளிவாக்கி விட்டது. இந்த திரிசங்கு நிலைக்கு எதிர்க்கட்சிகள் என்ன மாற்று வைக்கிறார்கள்? நாம் இந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்ள போகிறோம்?

தகவல்

1. Asia-Pacific countries sign world’s largest trade pact

2. Europe hurried to sign China pact to preempt Biden

3. Two-faced US trade policy erodes Atlantic alliance

4. China-EU deal is a reality check for India

5. India’s self-reliance goal must not to be taken as move ‘towards isolating itself’, says Sunil Munjal

6. U.S. Debt Is Set to Exceed Size of the Economy Next Year, a First Since World War II

7. India self-isolates as China's economic might enfeebles West

8. Why India can’t uplift its farmers the same as China

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

முந்தைய பகுதிகள்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 14 ஜன 2021