மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கட்டுமா? உச்ச நீதிமன்றம்!

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கட்டுமா? உச்ச நீதிமன்றம்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிபூர் ஆகிய எல்லை பகுதிகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 11) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் போப்பண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும்வரை, வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால், அதை நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. ஏனென்றால் சிக்கலைத் தீர்க்க தவறிவிட்டீர்கள். புதிய வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட விளைவு தற்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அப்போது மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்தது” என்று கூறியுள்ளார்.

ஆனால் மத்திய அரசின் பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்கிறீர்கள்... என்ன பேச்சு வார்த்தை நடக்கிறது? என்ன பேசுகிறீர்கள்? என்ன நடந்து கொண்டிருக்கிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை துஷார் மேத்தாவிடமும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடமும் எழுப்பினர்.

இதையடுத்து அட்டர்னி ஜெனரல், இவ்வழக்கில் அவசரமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதை கேட்ட தலைமை நீதிபதி, நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். இவ்விவகாரத்தில் போதுமான அளவுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னதாக, அவர்களிடத்தில் சொல்லுங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், உச்ச நீதிமன்றம் அதன் கடமையைச் செய்யும் என்று சொல்லுங்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், “விவசாயிகளுக்கு இந்த சட்டம் நன்மை பயக்கிறது என ஒரு மனு கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சட்டத்தை நிறுத்திவைத்தால் பேச்சுவார்த்தைதான், குழு முன் பேச்சு வார்த்தை சிறப்பாக நடக்கும்” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை எட்டுவதற்குக் கால அவகாசம் மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் இதையேதான் தெரிவித்தீர்கள். போராட்டக்களத்தில் உயிர் துறப்பது நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது?. போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஏதாவது நடந்தால் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்தான் எந்த முடிவுக்கும் இரு தரப்பால் வர முடியவில்லை என்ற விமர்சனம் நீதித்துறை மீது வரக்கூடாது. அதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பெண்கள் உட்பட விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடுகின்றனர் இதிலிருந்தே தீவிரம் தெரியவில்லையா? அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று போராட்டத்தை தொடருமாறு அறிவுறுத்துங்கள் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

மேலும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் என அட்டர்னி ஜெனரல் கூறிய போது, காந்தியின் சத்யா கிரக போராட்டம் போல அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் என்று நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

இறுதியாக, விவசாயிகளின் கோரிக்கை பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். அதை நாங்கள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

திங்கள் 11 ஜன 2021