மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

டிராவில் முடிந்த மூன்றாவது டெஸ்ட்: ரஹானே பெருமிதம்!

டிராவில் முடிந்த மூன்றாவது டெஸ்ட்: ரஹானே பெருமிதம்!

அஸ்வின் மற்றும் விஹாரியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா இந்த போட்டியில் தோல்வியடையும் என நினைத்தனர். ஆனால் வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் கடைசி வரை போராடி போட்டியை டிரா பெறச் செய்தனர்.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா நேற்றைய நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 52 ரன்னிலும், சுப்மன் கில் 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள். புஜாரா 9 ரன்னும், ரகானே 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (ஜனவரி 11) கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 309 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. எஞ்சிய 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா பந்து வீச்சைத் தொடர்ந்தது.

போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ரஹானே மேலும் ரன் ஏதும் எடுக்காமல் அதே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை லயன் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 102 ஆக இருந்தது

அடுத்து ரி‌ஷப் பண்ட் களம் வந்தார். முதல் இன்னிங்சில் பேட்டிங்கின்போது முழங்கையில் காயம் அடைந்ததால் அவர் கீப்பிங் செய்யவில்லை. அதில் இருந்து குணமடைந்த ரி‌ஷப் பண்ட் இன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 15ஆவது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது மூன்றாவது அரை சதமாகும்.

இந்திய அணி 68ஆவது ஓவரில் 200 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து இருந்தது. ரி‌ஷப் பண்ட் 74 ரன்னும், புஜாரா 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரி‌ஷப்பண்டின் ஆட்டம் தொடர்ந்து அதிரடியாக இருந்தது. கிரீன், லயன் ஓவர்களில் அவர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார்.

மறுமுனையில் இருந்த புஜாரா அவருக்கு உறுதுணை அளிக்கும் வகையில் நிதானமாக ஆடினார். அவர் 170 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். இது அவரது 27ஆவது அரை சதமாகும். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார்.

புதிய பந்தை எடுப்பதற்குள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் ரி‌ஷப் பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 97 ரன்னில் ஆட்டம் இழந்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

ரி‌ஷப்பண்ட் விக்கெட்டை லயன் கைப்பற்றினார். புதிய பந்தை எடுப்பதற்கான கடைசி ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 77 ரன்னில் இருக்கும் போது ஹசில்வுட் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இதனால் இந்திய அணி தோல்வி அடைய நிறைய வாய்ப்பு இருந்தது.

இதனையடுத்து விஹாரி அஸ்வின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கடைசி வரை விக்கெட் கொடுக்காமல் இந்த ஜோடி போட்டியை டிரா செய்தது. விஹாரி 161 பந்துகள் சந்தித்து 23 ரன்களுடனும் அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வி அடைந்து விடும் என்று நினைத்த நிலையில் இந்த ஜோடி நம்பிக்கை அளித்து விளையாடியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் ரஹானே, ‘‘எங்களது ஆளுமையை வெளிப்படுத்தி கடைசி வரை போராட வேண்டும் என்று போட்டி தொடங்குவதற்கு முன் பேசிக்கொண்டோம். நாங்கள் போட்டியின் முடிவு குறித்து யோசிக்கவில்லை.

இன்றைக்கு போராடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நிலையில், 338 ரன்னில் ஆல்அவுட் ஆக்கியது சிறப்பானது.

நாங்கள் இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. ஆனால் அஸ்வின் மற்றும் விஹாரியை சிறப்பாக குறிப்பிட்டு ஆக வேண்டும். அவர்கள் கடைசி வரை வெளிப்படுத்திய ஆளுமை, பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. ரிஷப் பண்ட்டை பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் ஒரு யுக்தியை உருவாக்கினோம். ஆனால், எல்லாமே திட்டத்தை வெளிப்படுத்திய வகையில் அமைந்தது’’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் 15ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 11 ஜன 2021