மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம் வெற்றி!

யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம் வெற்றி!

டிஎஸ்எஸ் மணி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், எழுப்பப்பட்ட " முள்ளி வாய்க்கால் நினைவுத் தூண்" கடந்த ஜனவரி 8ஆம் தேதி சிங்கள ராணுவத்தால் இடிக்கப்பட்ட பிறகு, அதைக்கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் , வடக்கிலும், கிழக்கிலும் இன்று (11-01-2021 )முழு கடையடைப்பும் நடத்தப்பட்டது. பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சாகும்வரை பட்டினிப்போர் தொடங்கி நடத்தி வந்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில், நினைவுத்தூண் எழுப்பப்பட இன்று காலை 7.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதையடுத்து கஞ்சி கொடுத்து மாணவர்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன். அவரே பஞ்ச புராணம் பாடி அடிக்கல்லும் நாட்டினார்.

இதனிடையே நினைவு தூபியை இடித்ததற்குக் கண்டனம் தெரிவித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “யாழ் பல்கலைக்கழகம் வெறுமனே பட்டதாரிகளை உருவாக்கும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. அது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கின்ற இடமுமாகும். அதுமட்டுமன்றி தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தின் சாட்சியாகவும் அதன் பரிணாம வளர்ச்சியோடும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற அறிவுசார் செயற்பாட்டுக் களமுமாகும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் யாழ் பல்கலைக்கழகம் இரண்டறக் கலந்து பணியாற்றி வந்துள்ளமையை அனைவரும் அறிவர்.

தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்ட வேளையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர்வதற்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை கடந்த வெள்ளிக்கிழமை இரவு (08.01.2021) ரகசியமாக இடித்துத் தரைமட்டமாக்கியதன் மூலம் யாழ் பல்கலைக்கழகத்தின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பொங்குதமிழ் நிகழ்வை முன்னின்று நடத்தியவர் என்று பெருமை பேசிய துணைவேந்தரே அந்த நினைவுத்தூபியை இடிப்பதற்கு முன்னின்று செயற்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் தங்களது அன்பிற்கினிய உறவுகளை நினைவு கூர்வதற்காகக் கட்டிய நினைவுத்தூபியை இடித்ததன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் எத்தகைய பலனை அடைய நினைக்கின்றனர் என்பது தெரியவில்லை. இதனை இடித்ததைவிட அதற்கான காரணத்தை முன்வைக்கும் உபவேந்தரின் கருத்துகள் முன்னிற்குப் பின் முரணாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிலிருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதாகவும் தனக்கு மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் மாறுபட்ட கருத்துகளைத் துணை வேந்தர் கூறியிருக்கிறார்.

பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு செனட் சபை என்ற அமைப்பு இருக்கிறது. மாணவர் அமைப்பு இருக்கிறது. விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பதிவாளர், பர்சார் போன்று பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி ஒரு சரியான முடிவை எடுத்துச் செயற்பட்டிருந்தால் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வரப்போவதில்லை. ஆனால், ஒருவருடனும் கலந்துரையாடாமல் இரவோடு இரவாகத் தன்னிச்சையாகச் செயற்பட்டு அந்த நினைவுத்தூபியை இடிக்க வேண்டியதன் அவசியத்தை உபவேந்தர் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர், “ஒரு சட்ட விரோத கட்டுமானத்தை அகற்ற வேண்டும் என்று தீர்மானித்தால் அதனை பகல் வேளையில் பகிரங்கமாகச் செய்திருக்கலாமே அதனைவிடுத்து இரவோடிரவாக இடிக்க வேண்டியதன் அவசியமென்ன? இதுவரை உபவேந்தர் பதவியிலிருந்த எவரும் செய்யாத ஒரு செயலை இந்த உபவேந்தர் செய்திருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அவமதித்துள்ளது. உபவேந்தரின் இந்தச் செயலை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரது தன்னிச்சையான இச்செயலை நாம் கவலையுடன் கண்டிக்கிறோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் அனைத்துவித நடவடிக்கைகளுடனும் இரண்டறக் கலந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மட்டுமன்றி சர்வதேச நாடுகளின் அரச ஒழுங்கு முறைகளையும் கண்காணித்து, ஆய்வுக்குட்படுத்தி, ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதனைச் சுட்டிக்காட்டி, அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செயற்பட்டு வந்துள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 11 ஜன 2021