மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

அவசர கதியில் கோவாக்சினை பயன்படுத்த வேண்டாம்: வலுக்கும் கோரிக்கை!

அவசர கதியில் கோவாக்சினை பயன்படுத்த வேண்டாம்: வலுக்கும் கோரிக்கை!

ஜனவரி 16ஆம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. இதில், கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடைந்து, முடிவுகள் வெளி வராத நிலையில் இதனை அவசரமாகச் செலுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.

அதே சமயத்தில் இதனைச் செலுத்திக் கொண்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில்தான் இதனை அவசரக் காலத்தில் செலுத்த வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மருத்துவ பாசறை வெளியிட்ட அறிவிப்பில், “உலகெங்கும் நவீன மருத்துவத்தில் தடுப்பு மருந்துகள் மூலமே இளம்பிள்ளைவாதம் முதலான பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன என்பது உண்மையாயினும் ஆய்வு முழுமையடையாத நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை உடனடியாக மக்களுக்குச் செலுத்தத் துடிப்பது கண்டனத்துக்குரியது.

ஊரடங்கு தளர்த்திய பின்பு, கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து பாதிக்கப்பட்டோர் மற்றும் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் ஆய்வுகள் முற்றுப்பெறாத தடுப்பூசியை அவசரகதியில் கோடிக்கணக்கான மக்களுக்குச் செலுத்த முனைவது வெற்று அரசியல் நோக்கமே அன்றி மக்கள் நோக்கமல்ல.

ஆய்வு முடிவுகள் எதிர்மறையாக வரும் பட்சத்தில் பல உயிரிழப்புகளையும் கடும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் பேராபத்து உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி என்பதாலேயே மூன்றாம் கட்ட ஆய்வை முடிக்கும் முன்பே இந்த ஆய்வு மன்றம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு மருந்து நிறுவனங்கள் பொறுப்பேற்காது என்று கூறுவதை அரசு ஏற்பதும் தடுப்பூசி மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக குலைக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டனில் வாழும் மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை இந்திய மக்களின் நோய் எதிர்ப்புத் திறனுடன் ஒப்பிடுவது தவறாகும். மேற்கூறிய நாடுகளுடன் இந்திய மக்களின் நோய்த்தொற்று மற்றும் இறப்பு விழுக்காட்டை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புலனாகும். அவர்களுக்குத் தடுப்பூசி உடனடித் தேவையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் குறிப்பாகத் தமிழக மக்களுக்கு இது உடனடி தேவையன்று. ஏனெனில் இந்த வைரஸ் தொற்றுக்கு இயற்கையாக ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றலை, ஒப்பிடும் போது தடுப்பு ஊசிகள் மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் வீரியம் குறைவானதாகும். குறைந்த காலமே நீடிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். இந்நிலையில் அடிக்கடி தடுப்பூசி போடுவது தனியார் நிறுவனங்களுக்குப் பணம் ஈட்டும் செயலாகவே அமையும்.

முதற்கட்டமாக வைரஸ் தொற்றால் உயிர் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ள நபர்கள் வயதானவர்கள் மற்றும் மருத்துவ சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அவர்களுக்கும் ஆராய்ச்சிகள் முற்றுப்பெறாத நிலையில் பள்ளி குழந்தைகளுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்படக் கூடாது.

அதுபோன்று 50 வயதுக்குட்பட்ட எவருக்கும் தடுப்பூசியைக் கட்டாயமாக்கக் கூடாது என்றும் விருப்பத்தின் பெயரில் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், மாநிலத்தில் கோவாக்சினை பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் டி.எஸ்.சிங் தேவ் கூறுகையில், “கோவாக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பாக அதனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 11 ஜன 2021