மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

'ஒருபோதும் பணியமாட்டோம்’ : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

'ஒருபோதும் பணியமாட்டோம்’ : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான 8ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இன்று விவசாயிகளின் போராட்டம் 45ஆவது நாளாக டெல்லியில் தொடர்கிறது.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே 8ஆவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று மதியம் 2 மணி தொடங்கி மாலை வரை நடந்தது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சாம் பிரகாஷ் ஆகியோர் 41 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து ஒவ்வொன்றாக விவாதிக்கலாம் என விவசாயிகள் சங்கங்களிடம் அவர்கள் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாயிகளின் நலனை மனதில் வைத்துத்தான் வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சங்கங்கள் போராட்டத்தை ஒழுங்குடன் நடத்துவது, பாராட்டுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உறுதியாகக் கூறினர். திருத்தங்கள் செய்யலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்ததால் நீண்ட ஆலோசனை நடந்தும், எந்த தீர்வும் ஏற்படவில்லை. அதனால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜனவரி 15ஆம் தேதி நடத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், “ புதிய வேளாண் சட்டங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம். மீண்டும் 15ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தைக்கு வருவோம். வேறு எங்கும் செல்லமாட்டோம். புதிய சட்டத்தைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. அதனை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “ விவசாயிகள் சங்கங்களில் பல, அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை ஏற்பதாகக் கூறியுள்ளன. எனவே, சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கங்களுடன் தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு டிராக்டர்களில் அணி அணியாக விவசாயிகள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

சனி 9 ஜன 2021