மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: இதயங்களை தேடுவோம்: ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் பயணம் திறந்த இதயம்!

சிறப்புக் கட்டுரை: இதயங்களை தேடுவோம்: ஓர் ஐஏஎஸ் அதிகாரியின்  பயணம் திறந்த இதயம்!

நா.மணி

ஹரிதுவார், தேராடூன் பயணம் மேற்கொள்வோருக்கு, மசூரியை கடக்கும் போது, ஒரு சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும். "அதோ தெரிகிறதே! அது தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி மையம். இங்கு தான் இந்தியா முழுமைக்குமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்று சுற்றுலா வழிகாட்டி குரல் கொடுப்பார். பச்சைப் பசேலென்ற, பசுமை போர்த்திய இமய மலை சாரலில், அந்த வெள்ளை வெளேர் கட்டிடம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித உணர்வுகளை உருவாக்கும். அந்த பயிற்சி மையத்திற்கு, நான்காம் கட்ட பயிற்சிக்கு செல்கிறார் தமிழ் நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆர். ஆனந்தகுமார்.

தனது பயிற்சி மைய அனுபவங்களை ஒரு நூலாக வடிக்கிறார். எல்லாம் பயிற்சி மைய அனுபவங்கள் என்றும் கூறி விடவும் முடியாது. இந்த நூலை வாசித்து முடித்தவுடன், இது என்ன பயண இலக்கியமா? குடிமைத் தேர்வு எழுதுவோருக்கான எழுச்சி தரும் இலக்கியமா? நட்பின் மேன்மையை தாங்கி நிற்கும் நூலா? விளையாட்டு வழி வாழ்வியல் தத்துவங்களை பேசும் நூலா? என்ற மயக்கம் ஏற்படும். இது ஒருவகை பேசும் புத்தகம் ( Taking books) வடிவில் எழுதப்பட்ட நூல்.

2019 ஆம் ஆண்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள, இந்த நூலை, எத்தனை பேர் வாசித்து உள்ளார்கள் என்பது தெரியாது. ஆனால் ஏராளமானோர் தேடி வாசிக்க வேண்டிய முக்கிய நூல்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி

ஆனந்தகுமார் அவர்கள், தனது நான்காம் கட்ட பயிற்சி அனுபவம் குறித்து நம் முன் விரிக்கும் காட்சிகள், நம்மில் பலர் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவை. தனது மொழி நடையில், சொல்லும் விதத்தில் இவற்றை மிக இயல்பாக,எளிமையாக, விளையாட்டாக நமக்கு சொல்லிச் சென்று விடுகிறார். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் பயிற்சியின் தரம், அதற்கு தேர்வு செய்யும் தலைப்புகள், அதற்கான கருத்தாளர்கள் பற்றிய பொதுவான சித்திரம் நம் மனதில் இருந்தாலும் சில பயிற்சிகளை விவரிக்கும் போது மொத்த பயிற்சியின் பரிமாணங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

பொருளாதார பயிற்சி

Behavioural Economics என்று அழைக்கப்படும் 'மனப்பாங்கு பொருளாதாரம்' பற்றி இன்னும் பெரிதாக பொது வெளியில் அறியப்படாமல் இருந்தாலும், தங்களுக்கு நடத்தியதை வைத்து, தான் புரிந்து கொண்ட அடிப்படையில் ஆனந்தகுமார் விளக்கும் முறை அபாரம். அதேபோல் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான அல்லது குன்றாத பொருளாதார வளர்ச்சியை, ஒரு வடையை வைத்து விளக்கும் விதமும் அளப்பரியது.

ஆளுமைப் பயிற்சிகள்

முடிவெடுத்தல், பிரச்சினைகளை கையாளுதல் ஆகியவற்றுக்காக தரப்படும் பயிற்சிகள், அதற்கான குழு செயல்பாடுகள் ஆகியவற்றை, நூலின் வழியே வாசித்து அறிதல், அனுபவித்தல், அவசியம். அமைச்சர்கள் தங்களைவிட உயர் பதவியில் இருப்போரிடம், இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டிய விசயத்தை, இருபதே வினாடிகளில் எப்படி சுருங்கச் சொல்வது? பேசு பொருளை/ எடுத்துக் கொண்ட திட்டத்தை/ இலக்கை ஆட்சியாளர்களை எப்படி ஏற்றுக் கொள்ள வைப்பது? அடுத்தடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்துவது? பின்னர், அதனையே இருபது நிமிடங்களில் எப்படி எடுத்துக் கூறுவது, நடைமுறையாக்கம் பெறும் என்று நம்பிக்கையை உருவாக்கிய பின்னர், ஒரு திட்டத்தின் முழுப் பரிமாணத்தையும் விளக்க இரண்டு மணி நேரத்தில் எப்படி விரித்து உரைக்கலாம் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான வழிமுறைகள்/ பயிற்சிகள் புதுமையானவை. 'அனார்கலி ஆஃப் ஆரா' படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கர் போன்ற திரைக் கலைஞர்கள் கூட பயிற்சி மையத்திற்கு வரவழைப்படுகிறார்கள். அப்படம் திரையிடப்படுகிறது. அதனையொட்டிய உரையாடல் தொடங்குகிறது. அதன் வழியாக, சங்கடமான கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சியாக அது அமைகிறது.

பயிற்சியின் முடிவில் நூலாசிரியர் மனதிலும், வாசகர் மனதிலும் நீங்காது நிற்கும் ஓர் மனிதர் சோனம் வாங்சுக்.

இவர், லடாக்கில் ஒரு பள்ளிக் கூடம் நடத்துகிறார். அந்தப் பள்ளியில் சேர்வதற்கான குறைந்த பட்சத் தகுதி, ஏதேனும் ஒரு பள்ளியில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அல்லது, தோல்வி அடைந்து இருக்க வேண்டும். இந்தப் பள்ளியும் சோனம் வாங்சுகும் என்ன சாதித்தார்கள் என்று அறிந்து கொள்ள அவரது இணையத்தில் தனியே சென்று காண்க. முன்பருவக் கல்வி முதல் முதுகலை கல்வி வரை எல்லாம் அரசால் வழங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வைப்பதே அவரது பயிற்சியின் தலையாய கடமையாக இருக்கிறது. முத்தாய்ப்பாக, அவர் பயன்படுத்தும் வார்த்தைகள்‌ "கல்வி, நம் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல முறையில் சென்று சேர்ந்தால், நாட்டுக்குள் நாடுகள் உருவாக்காமல் இருப்போம்" என்பதே.

விளையாட்டு, கல்வி, வாழ்க்கை தத்துவம்

நூலின் முக்கிய அங்கத்தில் ஒன்று, விளையாட்டுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள உறவு குறித்து ஆனந்தகுமார் பேசுதல். நான்காம் கட்ட பயிற்சிக் காலம் முழுவதும் தினமும் மூன்றரை மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். இதுவும் தனது எல்லாமும் ஆன நண்பர் ஸ்வரூப்போடு தான் சாத்தியம் ஆகிறது. அவர்கள் விளையாட்டு மைதானத்தில் செலவழித்த நேரம் முக்கியமல்ல. விளையாட்டைப் பற்றி அவர்கள் இருவரும் புரிந்து வைத்துள்ள முறை, விளையாட்டு வழி கூறும் வாழ்வியல் தத்துவங்கள், நூலின் மிக முக்கியப் பகுதி. அதிலும் குறிப்பாக, கிரிக்கெட்டை முன் வைத்து அவர்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்கள் இதுவரை யாரும் கூறாதது. நூலாசிரியர் இதனை தனி நூலாகக் கூட கொண்டுவரலாம். மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அந்த விளையாட்டு மைதான பயிற்சியாளர் இராணா அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்து யாரேனும் ஒரு நூல் எழுதினால் கூட பெரும் பயனைத் தரும். எண்பதுகள் தொடங்கி இன்று வரை அந்த மைதானத்திற்கே தன்னை தத்துக் கொடுத்து உள்ளார். " வயிறு நோய்களின் கஜானா" என்ற அவரது பொன் மொழி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருத்தல் பெரும் நன்மை பயக்கும். " ஒரு விளையாட்டில் யார் தான் விரும்பி அவுட் ஆவார்கள்? அது போல் தான் வாழ்க்கையும். விரும்பித் தோற்றுப் போவோர் யாரும் இல்லை." " வாழ்வில் நல்ல இனிப்பான அத்தியாயங்கள் இனிமேல் தான் வரும் என்ற நம்பிக்கைக்கும் கிரிக்கெட்டில் பந்து வீச்சுக்கும் உள்ள ஒப்புமை இப்படிப் விளையாட்டு வழி வாழ்வியல் தத்துவங்கள் பலவற்றை உணர்த்துகிறார்.

நட்பின் மேன்மை

இந்த புத்தகம் எழுதப்பட்ட காரணிகளில் ஒன்று, தனது நண்பர் ஸ்வரூப் ( இவர் குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி) பாசத்தோடும் நேசத்தோடும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள். பழகிய விதம், இருவரும் சேர்ந்து அலசிய வாழ்க்கை தத்துவங்களை எல்லோருக்கும் சென்று சேர இந்த நூல் பயன்பட்டுள்ளது. நூலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆனந்தகுமார் தனது நண்பர் ஸ்வரூப்போடு சுற்றி சுற்றி வருகிறார். ஸ்வரூப் மட்டுமல்ல, அவரது குடும்பம், அவரது தமிழாசிரியர் 'நாகு சார்' என எல்லோரும் உடன் வருகின்றனர். ஸ்வரூப், ஆனந்தகுமாருக்கு நண்பராக கிடைக்காமல் போயிருந்தால், நமக்கு இப்படிப்பட்ட ஒரு புத்தகம் கிடைத்திருக்காது என்று கூறும் அளவு ஸ்வரூப் நூலின் நிறைந்து நிற்கிறார். தனது நண்பரின் நட்பின் ஆழத்தை நம்மிடம் சொல்ல முயற்சிக்கும் தருணங்கள் அற்புதமாவை‌.தனது நட்பின் ஆழத்தை உணர்ந்து கொள்ள திருக்குறளின் 790 குறளுக்கு உண்மையான பொருளைத் தேட எடுக்கும் முயற்சிகள் வாசித்து உணர வேண்டியவை. எந்த இரண்டு சிறந்த நண்பர்களும் இதனை அவசியம் வாசிக்க வேண்டும்.

போட்டித் தேர்வர்களின் தன்னம்பிக்கை நூல்

பொதுவாக தன்னம்பிக்கை நூல்கள், "ஒரு நிமிடம் என்பது மிகக் காலதாமதம்" என்ற ரீதியில் இரத்த நாளங்களில் நாண் ஏற்றும். இத்தகைய நூல்களை சிலர் தேடித் தேடி படிப்பர். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்புவோருக்கு வெற்றிக் கதைகள் மிக மிக முக்கியம். இந்த வகையில் "பயணம் திறந்த இதயம்" குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் இந்த நூலை வாசித்தால், அவர்களுக்குள் நாண் ஏற்ற வல்லது தான். பயிற்சியின் ஒரு பகுதி அமெரிக்காவில் பயிற்சி. ஐக்கிய நாடுகள் சபையின் முன் பறக்கும் இந்திய தேசியக் கொடியின் முன் நின்று படம் எடுக்கும் போது, கோவை மாவட்டத்தில், சின்னவதம்பச்சேரியில் பிறந்து இவ்வளவு தூரம் உயர்ந்து நிற்கிறோமே என்பதை ஒரு கணம் யோசித்து நிற்கிறார். "இப்படி நாமும் ஓர் நாள் போய் நிற்க வேண்டும்" என்ற எண்ணத்தை குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகி வருவோர் மனதில் எழுப்பும். அந்தப் தீப்பொறி அவர்கள் மனதில் பற்றிப் படர்ந்து, மசூரி ஐஏஎஸ் பயிற்சி மையம் செல்ல வழிவகுக்கும். ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வசதிகள், பயிற்சியின் தன்மை, கருத்தாளர்களின் தகைமை, பயிற்சியின் ஊடாக தரப்படும் விளையாட்டுகள், அமெரிக்கப் பயிற்சி அனுபவங்கள் அவர் விவரிக்க விவரிக்க, நிச்சயமாக தேர்வில் வென்று இங்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு செல்லவும், உழைக்கவும் உந்து சக்தி கிடைக்கும்.

தேர்வுக்கான டிப்ஸ்

"எல்லோரும் ஒரே புத்தகத்தைத் தான் படிக்கிறார்கள். எப்படிப் படிக்கிறார்கள் என்பதில் தான் வேறுபாடு" என்பார். தன்னுக்குத்தானே ஒரு விசயத்தை கேட்டுக் கொள்வதும், தன்னைத் தானே பார்த்துக் கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்று பேசுவார் மற்றோர் இடத்தில். இவையெல்லாம் போட்டித் தேர்வர்கள், தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும். ஒவ்வொரு மனிதனுக்கும் இது பயன்படும்.

பொதுவான வாழ்வியல் தத்துவங்கள்

நூல் முழுவதும் சிரிப்பும் கும்மாளமுமான தனது மொழி நடையின் வழியே பல வாழ்வில் தத்துவங்களை வாசகர்களுக்கு தவள விடுகிறார். போகிற போக்கில், "...தேடட்டும். தேடுதல் தானே வாழ்வே" என்று சொல்லிவிடுவார். "பேசுபவரை கவனிப்பது அவரை மதிப்பதற்கு சமம்" என்கிறார் ஓர் இடத்தில். இந்த பண்பை நான் பல இடங்களில் பின்பற்றியது இல்லை. பல நேரங்களில் எனது மனைவியின் கண்ணீருக்கும் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறேன். முக்கிய தருணங்களில் இது தான் நமக்கு தெரியுமே என்று பேசுபவருக்கு காது கொடுக்காமல் அவமதித்து இருக்கிறேன் என்பது முதல் முறையாக பெரும் வேதனை தருகிறது. சற்று நேரம் பொறுமையாக இருந்தாலே தீர்ந்துவிடும் சிக்கல்கள் தனது அனுபவங்கள் வாயிலாக பகிர்தல், நாமும் நூலைப் படித்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

தேடிக் கற்கத் தூண்டுதல்

பயிற்சியில் அவர் என்ன கற்றுக் கொண்டாரோ, என்ன அனுபவித்தாரோ அவற்றை சொல்லும் பாணியிலும், அவற்றை விளக்கும் போது அவர் வாசித்த நூல்களை நாமும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. குறிப்பாக, ஒரு கருத்தாக்கத்தை எப்படி விளக்க வேண்டும்? எப்படிப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்? எப்படிப் புரிய வைக்க வேண்டும்? என்று இளம் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முன் மாதிரி ஆட்சியராக இருப்பதைக் காண முடியும். புறநானூறு, பாரதியார் திருக்குறள் என தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டும் விதங்கள், அதனைப் பொருத்தும் இடங்கள், ஒரு விசயத்தை எவ்வளவு தெளிவாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான சாட்சியங்கள்.

மனைவியின் மாண்பையும் அன்பையும் உரக்கக் கூறுதல்

நூலாசிரியர் அமெரிக்கப் பயிற்சியில் இருக்கும் போது, தனது மனைவியின் பிறந்த நாள் வருகிறது. அதற்காக ஆறு பக்கங்களை நூலில் ஒதுக்கியுள்ளார். அதில் ஐந்து பக்கங்களில் ஓர் கவிதை வழியே தன் அன்பைப் பொழிகிறார். அந்த இணையர் வாழ்நாளில் இதுவே முக்கிய நாட்களில் வெகுதூரம் இந்த நாட்களாகவும் இருந்துவிடலாம். ஆனால், அமெரிக்காவிலிருந்தபடியே, தனது கவிதை வழியே தன் மனம் திறந்து காட்டிய அந்த நாள், அந்த வரிகள் தான் அவரது இணையரை அதிகம் மகிழ்வித்த நாளாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொது வெளியில் மனைவியின் அருகில் அமர கூச்சப்படும் படித்த மாந்தர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கவிதை ஓர் பாடம். அருகில் இருக்கும் தருணங்களில் அன்பைப் பொழிய பழகிக் கொள்ளாவிட்டாலும், கொஞ்சம் தொலைவில் இருக்கும் போதாவது தக்க வார்த்தைகளில் அன்பை வெளிப்படுத்தலாம்.

அதற்கு இந்த வாட்ஸ்அப், மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தலாம். தனது இதயத்தை திறந்து காட்டலாம். எல்லையில்லா அன்பை சிலர் இதயத்தில் பூட்டி வைத்து இருப்பார்கள். அந்த அன்புக்கு பாத்திரமான மனைவிக்கே அது வாழ்நாள் முழுவதும் தெரியாமல் கூட போய்விடும் சோகம் பல நிகழ்ந்து விடுகிறது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி, அமெரிக்காவிலிருந்து, தன் மனைவிக்கு எழுதிய பிறந்த நாள் கவிதையை இங்கு அவர் இணைத்திருப்பதன் நோக்கம், மனைவியின் மீதான தனது அன்பை வெளி உலகிற்கு சொல்வதல்ல. "கணவன்களே! மனைவி இடத்தில் உங்கள் அன்பை உரக்கச் சொல்லுங்கள்" என்பதற்காவே.

ஐஏஎஸ் அதிகாரிகள் இதற்கு முன்பும் இது போல் ஆயிரக்கணக்கில் பயிற்சி பெற்று இருக்கிறார்கள். தங்கள் அனுபவங்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்களா? தெரியவில்லை. வேறு யாரும் இதுபோல், நண்பனின் தோளில் கை போட்டு கொண்டு, சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டு செல்லும் மொழிநடையில் சொல்லியிருக்க மாட்டார்கள். அந்த வகையில், ஆனந்தகுமார் அவர்களின் " பயணம் திறந்த இதயம்" நூல் ஒவ்வொருவருக்குள்ளும் தனக்கான இதயங்கள் தேட வைக்கும். வாழ்வின் வெற்றிக்கான சில உள்ளீடுகளைத் தரும். தோல்வி கண்டு துவண்டு போகாமல் இருக்கவும் உதவும்.

கட்டுரையாளர்

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

சனி 9 ஜன 2021