மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: சிறார் இலக்கியத் தோட்டத்தில்... அடுத்த காலத்திற்கான பொழுதில்…

சிறப்புக் கட்டுரை: சிறார் இலக்கியத் தோட்டத்தில்... அடுத்த காலத்திற்கான பொழுதில்…

அ.குமரேசன்

அந்தி என்றால் பொதுவாக மாலைப்பொழுது என்று புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இரண்டு பொழுதுகள் சந்திக்கிற அல்லது ஒரு பொழுதிலிருந்து இன்னொரு பொழுது பிறக்கிற நேரத்தை “அந்தி” என்று கூறுகிறது தமிழ். காலை அந்தி, மாலை அந்தி, நண்பகல் அந்தி என்ற சொற்பதங்கள் இலக்கியத்தில் இருக்கின்றன. ஆக, அந்தி என்றால் ஒரு காலத்திலிருந்து அடுத்த காலத்திற்கு இட்டுச் செல்கிற பொழுது.

பூக்களின் மொட்டுப் பருவம் மலர்ப் பருவத்திற்கு இட்டுச் செல்கிற அந்திப் பருவம் எனலாம். ஒவ்வொரு மொட்டும் தன்னுள் ஒரு காட்டையே வைத்திருக்கிறது. மனிதர்களின் தலைமுறைகளைத் தம்முள் வைத்திருக்கிற மொட்டுகளே குழந்தைகள்.

‘அந்தியில் மலர்ந்த மொட்டுகள்’

பதினைந்து காடுகளைக் கொண்டுள்ள குழந்தை மொட்டுகளின் கதை மலர்கள் தொடுக்கப்பட்ட சரமாக வந்திருக்கிறது ‘அந்தியில் மலர்ந்த மொட்டுகள்’. கொரோனா ஊரடங்கில் ஊக்கம் அடங்காத குழந்தைகளின் கற்பனை ஊற்றுகளைத் தாங்கி வந்திருக்கிற இந்தப் புத்தகத்தை உழவுக் கவிஞர் உமையவன் தொகுக்க, நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘முள்ளில் மாட்டிய கீரிப்பிள்ளை’ கதையை எழுதியுள்ளார் அபிநயா. தொகுப்பின் படைப்பாளிகளில் மூத்தவரான இவர், வாக்குரிமை பெற்ற தலைமுறைப் பருவத்திற்கு மாறவிருக்கிற 17 என்ற அந்தி வயதில் இருப்பவர். ஒரு பாம்பிடம் கீரி உதவி கேட்கிற புதுமையான கற்பனை. எத்தகையவர்களோடு கூட்டுச் சேர வேண்டும் என்று புரிந்துகொள்ள ஒரு கரடி அறிவுறுத்துவது நல்ல சிந்தனை. அதே வேளையில், மனிதர்களைப் பாகுபடுத்தி “அவங்க மாற மாட்டாங்க” என்று தள்ளி வைக்கிற ஒதுக்கல் அநாகரிகத்தை நியாயப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணமும் தோன்றுகிறது.

கதை சொல்லிக் கரடி

குட்டிக் கதை சொல்லி ஆறு வயது ஆயிஷா அஸ்ஃபியா ‘கதை சொல்லிக் கரடி’ கதையைச் சொல்லியிருக்கிறார். காடு முழுக்கச் சுற்றிக் கதைகளைச் சேகரித்து வைத்திருக்கிறது கரடிக்குட்டி லீலு. அந்தக் காட்டின் ஆண்டு விழாவில் முத்தாய்ப்பாகக் கதை சொல்கிற நிகழ்ச்சி நடக்கிறது. ஆகா, இதுவே எப்படிப்பட்ட கற்பனை என்று மனம் வாசக மனம் பரவசமாகிறபோது, மற்ற பெரிய விலங்குகள் கதை கேட்க மறுத்து வெளியேறுகின்றன. பொதுவாகக் கதைகளில் நாம் எதிர்பார்க்காத முடிவு வருமானால் சுவைப்போம். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற முடிவே வருமானால் உவப்போம். அந்த உவப்பைத் தருகிறது லீலுவின் அனுபவம்.

ஒரு யானைக் குட்டிக்கு இண்டி என்று பெயர் சூட்டியிருக்கிறார் ஐந்து வயது எம்.கே.ஏஞ்ஜெல். ‘குறும்புக்கார இண்டி’ கதையில் அந்தக் குட்டி யானையின் குறும்பு ரசிப்பதற்கு. அலட்சியத்தால் அதற்குக் கிடைக்கிற அனுபவம் பாடம் படிப்பதற்கு.

குரங்கு காப்பாற்றிய மயில்

குரங்கு என்றால் பறித்துக்கொண்டு ஓடும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மயிலைப் பிடித்து அடைக்கிறவர்களிடமிருந்து அதைக் காப்பாற்றுகிறது ஒரு குரங்கு. தனது வாக்குறுதியை அது எப்படிக் காப்பாற்றுகிறது என்ற சுவையான புதிரை வைத்து ‘குரங்கு காப்பாற்றிய மயில்’ கதையைத் தந்திருக்கிறார் ஏழு வயது கமல்சங்கர். மயில் தோகையைப் பாடப்புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று எதிர்பார்த்துக் கடந்துபோன பள்ளி நாட்களின் அறியாமை நினைவுக்கு வருவது புன்னகை. அதிர்ஷ்டம், அழகு என்று மயில்களின் தோகைகளைப் பறிக்கும் கொடுமை இந்நாட்களிலும் தொடர்வது புண் நகை.

ஒற்றுமையே மகிழ்ச்சி

ரோஜா என்ற நாய் ஒரு பாலத்தில் ஏறுவதற்குக் குட்டி நாய்கள் உதவி செய்கின்றன, பாலத்திலிருந்து இறங்க முடியாமல் அந்தக் குட்டிகள் தவிக்கிறபோது ரோஜா உதவுகிறது. என்ன நடந்தது என்று விவரிக்கும் ‘ஒற்றுமையே மகிழ்ச்சி’ கதை, விவரிக்காமலே உணர்த்தும் கருத்து நட்புதான் உறுதியான பாலம் என உணர்த்துகிறது. ஐந்து வயது க.சாய் மகஸ்ரீ இப்படியொரு கதையை யோசித்தது நம்பிக்கையூட்டுகிறது.

மந்திர பூமி

பறவையால் யானையைத் தூக்கிக்கொண்டு பறக்க முடியுமா? முடியுமே! காயம்பட்ட விலங்கின் உருவம் சிகிச்சைக்குத் தோதாகச் சிறிதாக மாறுமா? மாறுமே! குணமான பிறகு பழைய உருவத்திற்கு வந்துவிடுமா? வருமே! அதிசயக் காட்டில் இப்படியெல்லாம் நடக்கும்! கற்பனை வளத்தின் இன்னுமொரு பரவசத்தைத் தருகிறது பத்து வயது ஹ. தமீனா தஸ்வின் எழுதியுள்ள ‘மந்திர பூமி’.

எவர் மீதும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பது தவறு. யாரையும் பகையாகக் கருதாமல் உதவுவதே பண்பு. மனிதர்கள் பின்பற்ற வேண்டிய இந்தப் பாதையை வரைந்து காட்டுகிறார் ஒன்பது வயது திரவியம். யானைக் குட்டிகளுக்கும் முதலைக் குட்டிகளுக்கும் இடையே விழுந்த சந்தேக வேலி பற்றிப் பேசுகிறது ‘குட்டி யானையும் முதலையும்’ கதை.

சிங்கம் ராஜாவா?

எந்தக் காடானாலும் அதற்குத் தலைவர் யார்? அந்தக் காடுதான்! பல காலமாகக் கதைகளில் காட்டுக்கு அரசனாக சிங்கத்துக்கே முடிசூட்டி வந்திருக்கிறோம் (பாவம், அதற்கே இது தெரியாது!). ‘சிங்கம் ராஜாவா?’ - மற்ற விலங்குகளின் சார்பில் இந்தக் கேள்வியை எழுப்புகிறார் ந.க.தீப்ஷிகா. ஜனநாயகச் சிந்தனைகள் வலுவாக வளர்க்கப்பட வேண்டிய காலக்கட்டத்தில் இந்தப் பன்னிரண்டு வயதுப் படைப்பாளியின் கேள்வி முக்கியமானது. தலைமைப் பொறுப்புக்கு வருகிற பொறுப்பற்றவர்களை அப்புறப்படுத்துவதும், பொதுநலத்துக்காக உழைக்கிறவர்களைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதும் குடிமக்களின் பொறுப்பு என்ற கருத்து கதையைத் தாண்டி நிஜ அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேராசையைத் தருகிறது!

டிங்குவின் பேராசை

டிங்கு என்ற எலிக்குஞ்சுக்கு வேறொரு பேராசை. மற்றவர்களின் பசியைப் பொருட்படுத்தாத அந்தப் பேராசையால் ஏற்படுவது பேராபத்து. ‘டிங்குவின் பேராசை’ பற்றிச் சொல்லி மனிதக் குடும்பங்களுக்குச் சூடான படிப்பினை சூப் தயாரித்துப் பரிமாறுகிறது ஓர் எலிக் குடும்பம். அதன் கதையைப் பரிமாறியிருப்பவர் ஏழு வயது சு. பிரவிந்திகா.

‘யானையின் தந்திரம்

குகைக்குள்ளே ஒரு சிங்கம் பதுங்கியிருப்பதை அறியும் அம்மா யானை, ஒரு டைனோசர் தந்திரம் செய்து தானும் தனது குட்டியும் தப்பிக்க வழி செய்கிறது. ஏழு வயது சி.கா.பொன்னெழிலி ஆக்கியுள்ள ‘யானையின் தந்திரம்’ என்ற இந்தக் கதைக்குளே, மனைவிகளின் அறிவை கணவர்கள் அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும் என்ற செய்தியும் பதுங்கியிருக்கிறது.

காட்டின் திருவிழா

மரம் வளர மழை வர வேண்டும், மழை வர மரம் வளர வேண்டும். குட்டி யானை கிட்டு சந்திக்கிற அனுபவத்திலிருந்து இதை எடுத்துக் காட்டுகிறது ‘காட்டின் திருவிழா’. எந்த நோயிலிருந்தும் இருபதே நொடியில் விடுவிக்கிற மருத்துவ வல்லமை கொண்ட ஓர் ஊதாப்பூ மகத்துவத்தை அந்தக் காட்டின் விலங்குகள் அறிந்துள்ளன. நாம் நம்மைச் சுற்றிலும் இருக்கிற மூலிகைகளைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? பதினோரு வயது ச.மதுரம் ராஜ்குமார், “கிட்டுவின் ஆனந்தக் கண்ணீர் மழை நீரில் கலந்து ஓடி தூர் வாரப்பட்ட குளத்தில் போய்ச் சேர்ந்தது” என்று எழுதியிருப்பதில் எவ்வளவு அழகான உவமை நயம்!

‘என் பெயர் என்ன?’ – இந்தத் தலைப்பு தனது பெயரை மறந்துபோகும் ஒரு ஈ ஒவ்வொருவராக விசாரித்து அதைக் கண்டுபிடிக்கும் பழைய கதை போன்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஒரு பறவைக்கு அதன் பெயர் எப்படி வந்தது என்று சொல்கிற புதிய கதை இது. நயமாகக் கற்பனை செய்திருக்கிறார் பன்னிரண்டு வயது ரமணி.

எங்கே அந்தப் பெரிய மரம்?

விலங்குகளின் கதைகளாகவே இருக்கின்றனவே என்று நினைத்தபடி பக்கத்துக்குப் போனால், அது மனிதர்களின் கதை. அதுவும், இருபது பேர் சேர்ந்து கட்டியணைக்கிற அளவுக்குப் பெரியதாக உள்ள மரத்தின் ஓட்டைக்குள் செயல்படும் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கிற மனிதர்கள்! யார் அவர்கள், என்ன ஆராய்ச்சி என்ற கேள்வித் துறுதுறுப்பு ஏற்படுகிறது. மரத்தடியில் சாய்ந்து கண்களை மூடி கடந்த காலத்தை அசை போடுகிறவரின் வயது ஒரு திருப்பம். எட்டு வயது ஜூவான் எட்ரிக் எழுத்தில், ஒரு பெரியவரின் கதையாக வருகிறது ‘எங்கே அந்தப் பெரிய மரம்?’

‘முகிலனும் கலைமானும் விண்மீன்களும்’ வருகிற கதையை எழுதியிருப்பவர் எட்டு வயது ஸ்ரீநிதா சீனிவாசன். ஒரு சிறுவனும், ஒரு பேசும் கலைமானும் நண்பர்கள். விண்மீனைத் தொட வேண்டும் என்ற அவனுடைய விருப்பம் நிறைவேறுகிறதா? இரவில் மேகங்கள் உயிர் பெற்றுக் கீழே வருகின்றன! குழந்தைகள் நினைத்தால் இன்று மேகங்களைக் கீழே வரவைக்கலாம், நாளை பூமியிலேயே என்னென்னவோ மாற்றங்களை நிகழ்த்தலாம்!

யானையின் நண்பன் யார்?

யானை புகுந்து அட்டகாசம், கிராம மக்கள் புகார் என்ற செய்திகள் அடிக்கடி வரும். ஒரு யானைக்குக் கிராம மக்கள் நண்பர்களாக மாறுகிற கதையைச் சொல்லியிருக்கிறார் எட்டு வயது ஸ்ரீநிதி பிரபாகர். ‘யானையின் நண்பன் யார்?’ என்று கேட்டு, முதலில் அதனைச் சேர்த்துக்கொள்ள மறுக்கும் இதர விலங்குகள் பிறகு அதனிடம் தங்களைச் சேர்த்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்துகிறார். யானைக்கு நண்பர்களாவதால் அந்த விலங்குகள் கிராம மக்களுக்கும் நண்பர்களாகிறார்கள்.

எல்லாக் கதைகளின் பொதுத்தன்மைகளாக நட்பு நாட்டமும், விலங்குகள் மீது நேசமும், யாரும் யாருக்கும் தாழ்வில்லை என்ற எண்ணமும் இருக்கின்றன. குழந்தைகளின் அன்புமயமான உலகத்தை வெளிப்படுத்தியுள்ள இந்த மொட்டுகள் சிறந்த படைப்பாளிகளாகவோ, ஆழ்ந்த வாசிப்பாளர்களாகவோ மலரலாம். நிச்சயமாக மனித நேய மனத்தினராக மலர்வார்கள்.

பக்கங்களில் குழந்தைகளின் கைவண்ணத்திலேயே உருவாக்கிய கறுப்பு வெள்ளைச் சித்திரங்கள் கதைகளுக்குள் இட்டுச் செல்கின்றன. பல வண்ணங்களில் ஒவ்வொரு கதையையும் கண்டு கேட்டு மகிழ்கிற வகையில் காணொலி திறப்புக் குறியீடு அச்சிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. காணொலிப் பதிவுகளின் அறிமுகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன, தமிழில் வந்திடும் வகையில் தயாரித்திருக்கலாம். ஆயினும் காணொலி அடிக்குறிப்புகளில் தமிழ்ப்பெயர்கள் இருக்கின்றன. முகப்பு அட்டைப்படத்தில் குழந்தைகள் கூடி விளையாடுவதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் வாசன்.

சிறார் இலக்கிய ஆக்கத்தில் முத்திரைகள் பதித்துவரும் எழுத்தாளர்கள் க. உதயசங்கர், கன்னிக்கோவில் இராஜா, பதிப்பாளர் தேவகி இராமலிங்கம் ஆகியோரின் வாழ்த்துரைகள் இன்றைய வளர்ச்சி பற்றிக் கூறியிருப்பதும், படைப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை. தொகுப்பாசிரியர் உமையவன் தன்னுரையில் ‘மலர்தலின் இசை கேளாய்’ என்று அழைத்திருக்கிறார். மொட்டுகளின் படைப்பும், புத்தகத் தொகுப்பும் அதற்கான உழைப்பும் மாறும் காலத்து அந்தியின் இசையையும் கேட்கச் செய்கின்றன.

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

(ஊரடங்கில் குழந்தைகள் எழுதிய கதைகள்)

தொகுப்பாசிரியர்: உமையவன்

வெளியீடு:

நிவேதிதா பதிப்பகம்,

10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை,

விருகம்பாக்கம்,

சென்னை – 600 092

தொலைபேசி: 9025459174, 8939387276

மின்னஞ்சல்: [email protected]

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 8 ஜன 2021