மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

மூதாட்டியைக் காப்பாற்றிய சிறுவர்கள்: புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி!

மூதாட்டியைக் காப்பாற்றிய சிறுவர்கள்: புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி!

பொங்கல் பரிசு வாங்கிக் கொண்டு திரும்பியபோது, மயங்கி விழுந்த மூதாட்டியை இரண்டு சிறுவர்கள் மீட்டு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். சிறுவர்களின் இந்த சேவைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் தனது மகளுடன் சுப்புலட்சுமி என்ற 74 வயது மூதாட்டி வசித்து வருகிறார். தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு வழங்கி வரும் நிலையில், ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றிருக்கிறார் சுப்புலட்சுமி. நடக்க முடியாமல் ஒரு கிலோமீட்டர் தூரத்தை சுமார் 3 மணி நேரம் நடந்து சென்று பரிசுத் தொகையை வாங்கிக் கொண்டு திரும்பும்போது மயங்கி விழுந்துள்ளார்.

சாலையோரம் சுருண்டு கிடந்த அவரை அவ்வழியே சென்ற வீரமணி என்பவரின் மகன்களான நிதிஷ் (9), நிதின் (9) இருவரும் மீட்டு, இழுவை வண்டியில் ஏற்றி படுக்கவைத்து அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். சிறுவர்களின் இந்த மனிதாபிமான செயல் குறித்தும், மூதாட்டியை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் புகைப்படமும் ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு போலீஸார் இசக்கியா மற்றும் அவரது குழுவினர் சிறுவர்களின் செயலைப் பாராட்டி நேற்று அவர்களது வீட்டுக்கே சென்று இனிப்பும், பரிசும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுவர்கள், "நாங்கள் அவ்வழியே வந்து கொண்டிருந்தபோது சாலையோரத்தில் பாட்டி மயங்கி கிடந்ததைப் பார்த்தோம். அவரிடம், எங்கள் அம்மா ஸ்கூட்டியில் ஏறச் சொன்னார். ஆனால், பாட்டி வண்டியில் ஏற முடியாத நிலையில் இருந்தார். இதையடுத்து வீட்டுக்குச் சென்று வண்டியை இழுத்து வந்து, அவரை ஏற்றிக்கொண்டு சென்று வீட்டில் விட்டோம்" என்று கூறினர்.

இந்த நிலையில் மூதாட்டியின் வயது முதிர்வைக் கருத்தில்கொண்டு இனி வரும் நாட்களில் அவரது வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 8 ஜன 2021