மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

அஞ்சல் தேர்வு தமிழில் இல்லை: உறுதியை மீறிய மத்திய அரசு!

அஞ்சல் தேர்வு தமிழில் இல்லை: உறுதியை மீறிய மத்திய அரசு!

அஞ்சல் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் பதவிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதற்கு எழுந்த எதிர்ப்புகளையும் மீறி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.

தமிழக எம்.பி.க்கள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினர். அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், மத்திய அரசு தமிழ் உட்பட எல்லா மொழிகளையும் மதிப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். அதன் பின்னர் அந்தத் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அஞ்சல் துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீண்டும் தற்போது கண்டனக் குரல்கள் வலுக்கத் தொடங்கிவிட்டன.

விசிக தலைவர் திருமாவளவன், மத்திய அரசு கடந்த ஆண்டு கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக இப்போது அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. எப்படியாவது தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்து விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வை நடத்துவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்ற அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எனவே, இதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன், கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு மோசடி செய்துள்ளதாக சாடியுள்ளார். மேலும், தமிழ் மொழி குறித்து மோடி புகழ்ந்து பேசுகிறார் என்றால், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஆபத்து வருகிறது என்று பொருள் என விமர்சித்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அரசின் அஞ்சல் துறை தேர்வுக்கான மொழியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழ் மொழியில் தேர்வு எழுத வழிவகை செய்யப்படும் என உறுதியளித்த பின்பும், தற்போதைய அறிவிப்பு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றார்.

தொடர்ந்து மாநில மொழிகளைப் புறக்கணிக்கும் இத்தகைய கண்டனத்திற்குரிய நடவடிக்கைகளைக் கைவிட்டு, அஞ்சல் துறை தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற தமிழச்சி, அப்போதுதான் அனைவருக்குமான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதுவதற்கு உடன் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 8 ஜன 2021