மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

பள்ளிகள் திறக்காத நிலையில் திரையரங்குகளில் 100% அனுமதியா?

பள்ளிகள் திறக்காத நிலையில்  திரையரங்குகளில் 100% அனுமதியா?

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டதால், கீர்த்தி சுரேஷின் பெண் குயின், சூரியாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், விஜய் சேதுபதியின் கணவர் பெயர் ரணசிங்கம் உட்பட முக்கிய திரை பிரபலங்களின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்று அனுமதி வழங்கிய தமிழக அரசு, தற்போது 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட அரங்கில் 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய அரசும், இது கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதனிடையே வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிவிடும். தற்போது உருமாறிய வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்ற அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கண்ணன், ராம் சுந்தர், மற்றும் சங்கர் ஆகியோர் ஆஜராகி, "100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதோடு அதனைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது தவறான நடவடிக்கையாகும். தேவையெனில் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்" என்று வாதிட்டனர்.

திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, "அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படும். அரசு விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், "திரையரங்குகள் இயங்குவது குறித்து மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் வழங்கியுள்ளது. அதில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது" என உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கௌரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், "மனுதாரர்களின் கோரிக்கைகளில் போதிய முகாந்திரம் உள்ளதாகவும் இதனடிப்படையில் அரசாணைக்கு தடை விதிக்க முடியும்" என்றும் குறிப்பிட்டனர்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவேண்டும். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளை 100 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிப்பது நல்லதல்ல. இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புகிறோம். இந்த அரசாணையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் ஜனவரி 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதுவரை 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி இல்லை என்றும் 50 சதவிகித இருக்கைகள் என்ற நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

வெள்ளி 8 ஜன 2021