மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

வெளுத்து வாங்கிய மழை: வெள்ளத்தில் சிக்கி 900ஆடுகள் பலி!

வெளுத்து வாங்கிய மழை: வெள்ளத்தில் சிக்கி 900ஆடுகள் பலி!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகச் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து ஆறு, ஏரி ஓடைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 900 ஆடுகள் உயிரிழந்தது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து மல்லாபுரம் மற்றும் பாவளம் கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கருத்தபிள்ளை, பழனி மற்றும் அஞ்சலை. இவர்கள் கூட்டாக சேர்ந்து 900 செம்மறி ஆடு வளர்த்து வந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆடு மேய்த்து வரும் இவர்கள், மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கொட்டகையில் அடைத்து வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். அந்த வகையில், நேற்றும் கொட்டகையில் அடைத்து விட்டு அங்கேயே தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக கல்வராயன் மலை அடிவாரத்தில் பாப்பாத்தி மூலை ஓடை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராத இந்த வெள்ளத்தால் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து ஆடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு மூவரும் ஓடி வருவதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதில் 300 ஆடுகள் எஸ்வி.பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களைக் கடந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே மிதந்து கிடப்பதாகவும், அந்தப் பகுதியிலேயே 600 ஆடுகள் உயிரிழந்து கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வெள்ளத்தின் காரணமாக ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோன நிலையில் கருத்தபிள்ளை, அஞ்சலை மற்றும் பழனி ஆகியோர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் ஆறுதல் கூறி வரும் நிலையில் தகவல் அறிந்து அங்குச் சென்ற கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆடுகளின் உரிமையாளர்களிடம் ஆறுதல் கூறியதுடன், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 7 ஜன 2021