மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஜன 2021

ஆன்லைன் கடன் செயலிகள்: ஆர்பிஐ, கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

ஆன்லைன் கடன் செயலிகள்: ஆர்பிஐ, கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்கமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது இந்திய ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அதில்,. "வளர்ந்து வரும் நவீன காலத்தில் செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.  செல்போன் செயலி மூலம் கடன் பெறுபவர்களிடம் அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் செயலி மூலம் கடன் தருபவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவதில்லை.

கடனை சரியாக திருப்பி செலுத்தவில்லை எனில் கடன் வாங்கியவர்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப் செயலியில் உள்ள உறுப்பினர்களுக்குப் பகிர்வது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குச் செல்கின்றனர். கூகுள் செயலி மூலம் பஜாஜ் பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், ஸ்மார்ட் காயின் என 50க்கும் மேற்பட்ட செயலிகள்  கடன்களை வழங்கி வருகின்றன. இந்த செயலிகளுக்கு எதிராக பல்வேறு புகார்களும் எழுந்துள்ளன.

இவ்வாறு கடன் பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். கடன்  வழங்கும் பல செயலிகள் சீனாவோடு கூட்டு வைத்து மறைமுகமாகச் செயல்படுவது தெரியவருகிறது. எனவே கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ளவும், செயலி மூலம் கடன் வழங்குபவர்களை முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாகச் செயல்படும் கடன் செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வது வருத்தத்திற்குரியது. இவ்வாறு கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வது இந்தியாவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடன் செயலிகள் கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்க முடியாது. கடனை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியுள்ளனர்.  இவை சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை. சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலும் இல்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 6 ஜன 2021