மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஜன 2021

கங்குலிக்கு மாரடைப்பு: எண்ணெய் விளம்பரத்தை நிறுத்திய அதானி நிறுவனம்!

கங்குலிக்கு மாரடைப்பு: எண்ணெய் விளம்பரத்தை நிறுத்திய அதானி நிறுவனம்!

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் நடித்த சமையல் எண்ணெய் விளம்பரத்தை அதானி வில்மர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி லேசான மாரடைப்பு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

இதனிடையே சவுரவ் கங்குலி அதானி நிறுவனம் சார்பில் ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் விளம்பரத்தில் நடித்திருந்தார். ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் இதயத்துக்கு நல்லது என்று அந்த விளம்பரத்தில் கூறியிருப்பார். அதாவது, "40 வயதிலும் கூட உங்கள் வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்கலாம். உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் இதய வலிமையை உறுதி செய்து கொள்ளுங்கள். அது இந்த எண்ணெய் மூலம் தொடங்கட்டும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் இந்த எண்ணெய்க்கு மாறுங்கள். இது நல்ல கொலஸ்ட்ராலையும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது" என்று கூறுவார்.

இந்தச் சூழலில் அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் இந்த விளம்பரத்தை அதானி வில்மர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த எண்ணெய் இதயத்திற்கு நல்லது என விளம்பரப்படுத்தியவருக்கு இதய நோய் ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ அங்சு மாலிக், "நாங்கள் சவுரவ் கங்குலி உடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அவர் தொடர்ந்து எங்கள் பிராண்டு தூதராக இருப்பார். அண்மையில் ஒரு மூத்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகி உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருக்கும்போது டிரெட் மில்லில் இருந்து தவறி விழுந்தார். அப்படி என்றால் டிரெட்மில் மோசமானது என்று அர்த்தமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “ரைஸ் பிரான் ஆயில் உலகின் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்றாகும். இதிலுள்ள காமா ஒரிசோனல் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ஆனால் அது ஒரு மருந்து அல்ல. சமையல் எண்ணெய். இதய நோய் பாதிப்புக்கு உணவு மற்றும் பரம்பரை பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம். கங்குலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் நடித்துள்ள எண்ணெய் விளம்பரத்தைத் தற்காலிகமாக நிறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனமும் குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனமும் இணைந்து 1999 முதல் ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 6 ஜன 2021