dரூ.2500 பொங்கல் பரிசு விநியோகம் ஆரம்பம்!

public

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பரிசுத்தொகை விநியோகம் இன்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஏற்கனவே, தீபாவளி பண்டிகைக்காக எப்போதும் இல்லாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கத் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் தீபாவளி பண்டிகை இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை என்பதால் அப்போது இஸ்லாமியக் கிறிஸ்துவ குடும்பத்தினரின் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பரிசு வழங்கினால் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழும். எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பரிசுத் தொகை வழங்கலாம் என திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில், அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது.

இந்த சூழலில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் கொடுக்கப்பட்டு இன்று பரிசு விநியோகம் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் அச்சிடப்பட்ட துணிப்பையுடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மன்னார்குடியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

கரூர் வடக்கு நகரம் வெங்கமேடு வி.வி.ஜி நகர் சாய்பாபா கோவில் அருகிலுள்ள நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2,500 ரொக்கத்துடன் சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேப்பூர் தென்நந்தியாலம் கீழ்விஷாரம் மேல்விஷாரம் இராமநாதபுரம் ஆகிய ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்களை எம்.எல்.ஏ.காந்தி வழங்கினார்.

வரும் 12ஆம் தேதி வரை காலை 100 பேருக்கும், பிற்பகல் 100 பேருக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மாவட்டமான சேலத்தில், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சயில், பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட பொறுப்பாளருமான வெங்கடாசலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.2500 கொடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ரூ.252.23 கோடி மதிப்பில் 10,08,909 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,585 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே சாரல் மழை பெய்து வரும் நிலையிலும் எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே ரேஷன் கடைகள் முன்பு குவியத் தொடங்கினர். இதில் ஈரோட்டில், சத்தியமங்கலம் அருகே வடக்குப்பேட்டை ரேஷன் கடை முன்பு, அப்பகுதி மக்கள் நீண்ட வரிசையாக கற்கள் மற்றும் துணிப்பை வைத்து இடம் பிடித்தனர்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் இன்றைய தேதிக்கு டோக்கன் பெற்றவர்கள் ஆர்வத்துடன் சென்று பரிசு பொருட்களை வாங்கி வருகின்றனர். இதை புகைப்படம் எடுத்தும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒருசில கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று வாங்கி செல்வதை காண முடிகிறது என்றாலும் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதையும் காண முடிகிறது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *