கோவாக்சின் தடுப்பூசியையும் பயன்படுத்தலாம்: நிபுணர் குழு!

public

கோவிஷீல்டு மருந்தைத் தொடர்ந்து இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியையும் அவசர பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு அதன் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐசிஎம்ஆர், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கோவாக்சின். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் பல கட்டங்களாகப் பரிசோதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, தடுப்பூசி தயாரிப்பு முறைகள் குறித்தும் பரிசோதனை பற்றியும் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியையும், அவசர பயன்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி கேட்டு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. நேற்று முன்தினம், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு கொண்டுவர, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அமைத்த நிபுணர் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.

இதில் கோவிஷீல்டு மருந்தை பரிந்துரைத்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளைச் சமர்ப்பிக்குமாறு மருந்து நிறுவனத்திடம் நிபுணர் குழு வலியுறுத்தியது. அதன்படி மீண்டும் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரத் பயோடெக் தடுப்பூசியையும் அவசரக்கால பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக நிபுணர் குழுவின் பரிந்துரையை அடுத்து கோவிஷீல்டு தடுப்பூசியைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கும் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியைப் போன்று கோவாக்சின் தடுப்பூசியும் போக்குவரத்துக்கும் சேமித்துப் பாதுகாத்து வைப்பதற்கும் எளிமையானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *