மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!

கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!

ரகசிய தகவல்கள் திருடப்படுவதால் ‘கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்’ என சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்ததுடன், பலரும் கடன்காரர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த நிலையில், உடனடியாகக் கடன் வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து, கடன் கொடுக்க பல்வேறு ‘லோன் அப்ளிகேஷன்கள்’ களமிறங்கியிருக்கின்றன. இந்த ஆப்களில் சென்று சில அடிப்படை விஷயங்களை மட்டும் நாம் தந்தால் போதும். அடுத்த சில மணி நேரத்தில் கடன் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுகிறார்கள்.

சமீப காலமாக, இந்தியாவில், ஐ கிரெடிட், ஸ்மார்ட் காயின், கேபிட்டல் ஃபர்ஸ்ட், கேஷ் இ, கேஷியா போன்ற ‘லோன் ஆப்’களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்; உங்களுக்கு எளிதில் கடன் கிடைத்துவிடும். நீங்கள் எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை; எந்த விண்ணப்பத்தையும் நீட்ட வேண்டியதில்லை. ‘லோன் ஆப்’கள் மூலம் சிறிய மற்றும் பெரிய தொகைக் கடன்களை மிகவும் சுலபமாக வாங்கிவிட முடியும் என்கிற மாதிரி பல அனுகூலங்கள் இந்த லோன் ஆப்பில் உள்ளன.

ஆனால்,“நீங்கள் செல்போனில் லோன் ஆப்பை டவுன்லோடு செய்கிறீர்கள். அது, உங்கள் இ-மெயில் கணக்கை எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கும். நீங்கள் ‘ஓகே’ என அழுத்துவீர்கள். பின்பு, ஃபேஸ்புக் கணக்கைக் கேட்கும். அதற்கும் ‘ஓகே’ என அழுத்துவீர்கள். பின்பு, உங்கள் சம்பள விவரங்கள், ஆதார் எண் என எல்லாவற்றையும் ஆப் வாயிலாகவே கொடுப்பீர்கள். இதன் பிறகு, உங்களுக்கு லோன் கிடைத்துவிடும்.

இந்த வகைக் கடன்களுக்கு அடமானமாக எதையும் கேட்க மாட்டார்கள் என்பது நல்ல விஷயமாக உங்களுக்குத் தோன்றினாலும், உங்களுடைய ஸ்மார்ட்போனில், நீங்கள் வைத்திருக்கும் அலைபேசி எண்கள், தனிப்பட்ட விஷயங்கள் என நீங்கள் நினைக்கும் புகைப்படங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண்கள் என அனைத்து விவரங்களையும் அடமானம்வைத்துதான் கடன் வாங்குகிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

‘நேரில் சென்று வட்டிக் கடையில் கடன் வாங்கினால்தானே பணத்தைக் கேட்டு பிரச்சினை செய்வார்கள்; ஆப் மூலம் பணம் பெற்றால் என்ன செய்துவிட முடியும்’ என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் லோன் ஆப்கள் மூலம் பணம் பெறுவதுதான் மிகப் பெரிய சிக்கலே. ஏனெனில், நீங்கள் நேரடியாக வங்கிக்கோ, தனி நபரிடமோ சென்று கடன் பெறும்போது, அவர்கள் சொல்லும் கடன் விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்த பிறகு, அவை உங்களுக்கு சரிப்பட்டு வரும் என்றால் மட்டுமே கடன் வாங்குவீர்கள். இல்லையெனில், வாங்க மாட்டீர்கள். ஆனால், லோன் ஆப்பில் நீங்கள் ‘I Agree’ என அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். இதன் மூலம், அவர்களின் எல்லா சட்டதிட்டங்களையும் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்துவார்கள்.

இந்த ஆப்கள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் மூலமே பணத்தை வசூலிக்கின்றன. கடன் பணத்தை வசூலிக்க அவர்கள் பலவிதமான வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். இது குறித்து லோன் ஆப் நிறுவனங்களிடம் புகார் செய்தால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந்தத் தனியார் ஏஜென்சியை நடத்துபவர்கள் முறையான அனுமதி பெற்று அலுவலகம் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள் விதிமுறைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல.

என்றாலும், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் க்ரைமில் வரும். இது தொழில்நுட்பச் சட்டம் 2000இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கம் இல்லாமல் உடனடியாகக் காவல் துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டியது அவசியம்” என்கிறார்கள் நிதி சார்ந்த தொழில்நுட்ப வல்லநர்கள்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம். ஆப் மூலமாகச் சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுகக் கட்டணம் எனக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாகத் தகவல் வந்துள்ளது. கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

அதிக வட்டி, மறைமுகக் கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாகக் காவல் துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் (லோன் ஆப்) சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸார் சார்பில் சம்பந்தப்பட்ட துறைக்குக் கடிதம் எழுதப்பட்டது.

அத்துடன் குறுகிய கால கடன், உடனடி கடன் என்று கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, யாரும் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “கடன் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, சில நிபந்தனைகள் கேட்கும். அதை நாம் சரி என்று பதிவு செய்தால், தகவல் தொழில்நுட்ப வசதி மூலம் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன், இணையதள முகவரி உள்ளிட்ட ரகசிய தகவல் அனைத்தும் திருடப்படுகின்றன.

எனவே கடனை செலுத்த முடியாத நேரத்தில், பல்வேறு வகைகளில் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவு செய்திருந்தால், அதனை உடனடியாக அழித்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 3 ஜன 2021