மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

நிவர் புரெவி பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்!

நிவர் புரெவி பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் இறுதி முதல் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகத் தமிழகத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடலூர் ஆகிய பகுதிகளில் விளை பயிர்கள் சேதமடைந்தன. புயல் பாதிப்பு குறித்து மத்தியக் குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.600 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். இன்று (ஜனவரி 2) மாலை அவர் வெளியிட்ட அறிவிப்பில், “

“ ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்று மற்றும் கன மழையின் காரணமாக, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. 8.12.2020 மற்றும் 9.12.2020 ஆகிய நாட்களில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது போல், ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு 28.12.2020 முதல் 30.12.2020 வரை ஆய்வு செய்தது.

‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க 3108.55 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என கூறி மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க 485 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க 1,029 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் என நிதி உதவி கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ” ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் தாக்கத்தின் காரணமாகப் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், வேளாண் பெருமக்கள் அதிக உற்பத்தி செலவு செய்து, பேரிடரால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,

மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500/- ரூபாய் என்பதை, 20,000/- ரூபாயாக உயர்த்தியும்,

மானாவாரி நெற்பயிர் தவிர, பிற மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7410 ரூபாய் என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தியும்,

பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000 ரூபாய் என்பதை, 25,000 ரூபாயாக உயர்த்தியும் வழங்க ஆணையிட்டுள்ளேன். உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழ்நாடு அரசு வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 எக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து ‘நிவர்’ மற்றும் புரெவி புயல்களின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 7.1.2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

சனி 2 ஜன 2021