மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கிராண்ட் சோழா: நிகழ்ச்சிகளுக்குத் தடை!

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கிராண்ட் சோழா: நிகழ்ச்சிகளுக்குத் தடை!

சென்னை கிண்டியில்  உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அடுத்த 10 நாட்களுக்கு நிகழ்ச்சிகளுக்கும் விருந்தினர்கள் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் பிரபல நட்சத்திர ஹோட்டலான ஐடிசி கிராண்ட்  சோழா செயல்பட்டு வருகிறது. இங்குச் சமையல் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து  கடந்த இரு வாரங்களில் 85 ஊழியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஹோட்டலில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு  சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.  அதுபோன்று  முக்கிய நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ். திவ்யதர்ஷினி கூறுகையில்,

 “சென்னையில் 25க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இங்குள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நாளைக்குள் பரிசோதனை செய்து முடிக்கப்படும்.  ஐடிசி கிராண்ட் சோழாவில் அடுத்த 10 நாட்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 21 மற்றும் 22ஆம் தேதி டெல்லியிலிருந்து வந்த தலைமை தேர்தல் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஐடிசி கிராண்ட் சோழாவில் தான்  நடந்தது. இந்த கூட்டத்திற்குத் தமிழகத்திலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அரசியல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், இவர்கள் உட்பட கடந்த தினங்களில் இங்கு வந்து சென்ற விருந்தினர்கள் தங்கள் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று, மற்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கு முக்கிய விஐபிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்குவார்கள் என்பதால் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

ஐடிசி கிராண்ட் சோழா நிர்வாகம் மீது  தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கிராண்ட் சோழாவில் அதிக பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், எங்களது விருந்தினர்கள் மற்றும் கூட்டாளிகளின் பாதுகாப்புதான் முக்கியமானது என கிராண்ட் சோழா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொது இடம் முதல் கிச்சன் வரை சமூக இடைவெளி உட்பட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், எங்கள் குழுவில்  ஒவ்வொருவரும் விருந்தினர்களின் பாதுகாப்புக்காக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் பயிற்சி பெற்றுள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 2 ஜன 2021