அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: ஹர்ஷ்வர்தன்


நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பாஜக அறிவித்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக மக்களுக்கு இலவசமாகப் போடப்படும் என்று தெரிவித்திருந்தார்
தமிழகத்திலும் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வாக்காளர்களைக் கவரும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு, அதன் நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது.
மேற்குவங்கம், கொல்கத்தாவில் இருக்கும் பிதன்நகர் முதன்மைச் சுகாதார நிலையத்தில் ஒத்திகை நடைபெறுகிறது. கேரளத்தில் நான்கு மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடக்கிறது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒத்திகை நடைபெறும் நிலையில் அங்கிருந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செயல்படுத்துவதற்கான முன்னோட்டம் தான் இது. ” என்று தெரிவித்துள்ளார்.
“2 மணி நேரத்தில் 25 பேருக்குத் தடுப்பூசி செலுத்த நேரம் சரியாக இருக்குமா? என்பது குறித்து ஒத்திகை நடத்திப் பார்த்தோம். தமிழகத்தில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான இட வசதி உள்ளது. இதற்காக 46 ஆயிரம் மையங்களை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம். இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக முதலில் 6 லட்சம் சுகாதார பணியாளர்கள் முன் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக புற்று நோயாளிகள் மற்றும் முதியவர்கள் வரிசையில் இருக்கின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
In 1st phase of #COVID19Vaccination free #vaccine shall be provided across the nation to most prioritised beneficiaries that incl 1 crore healthcare & 2 crore frontline workers
— Dr Harsh Vardhan (@drharshvardhan) January 2, 2021
Details of how further 27 cr priority beneficiaries are to be vaccinated until July are being finalised pic.twitter.com/K7NrzGrgk3
டெல்லியில் ஜிடிபி மருத்துவமனையில் நடைபெறும் ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் வெளியே வந்த அவரிடம், டெல்லியில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் நாடு முழுவதும் இலவசமாகப் போடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிபடுத்துவது எங்கள் கடமை. தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டாம். போலியோ தடுப்பூசியின் போது ஏராளமான வதந்திகள் பரவின. ஆனால் அவற்றை புறம் தள்ளி பொதுமக்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். தற்போது நம் நாடு போலியோ இல்லாத இந்தியாவாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.