சிறப்புக் கட்டுரை: கொரோனா கால மாற்றுக் கல்வி முறை சாத்தியமே!!!

public

நா.மணி

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓர் உழைக்கும் மக்கள் குடியிருப்பு அது. மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒரு வீட்டின் வாசல் குழந்தைகளால் நிரம்பி வழிகிறது. தனிநபர் இடைவெளி, முக கவசம் என எந்தவித கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன.  என்ன நடக்கிறது என்று விசாரித்தால் டியூஷன் என்கிறார்கள் குழந்தைகள்.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் நீண்ட நாட்களாக  மூடப்பட்டிருக்கிறது.  மார்ச் மாதம் 22 ஆம் தேதி,  முழு முடக்கம் திடீரென அறிவிக்கப்பட்டது.   எல்லோரும் எல்லா நேரங்களிலும்  முடங்கிக் கிடந்தோம். அந்த நேரத்தில், ஏழை எளிய மக்கள் உணவுக்கு என்ன செய்தார்கள்? பிற அவசர அவசிய செலவுகளை எப்படி செய்து  கொண்டார்கள் என்பது தனிக் கதை.  ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு வகை துயரம்.  ஒவ்வொரு வகை இயலாமை. 

கொரோனா வைரஸ் பற்றிய பயம் பீதி வேறு. முழு முடக்கம் பகுதி முடக்கம் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு திரும்பும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகவேண்டிய நிர்பந்தம். இதனால் வேலை செய்ய  முடியாது என்று ஒதுக்கி விடப்பட்ட சிறிய  குழந்தைகளைத்  தவிர, எல்லாக் குழந்தைகளையும் வேலைக்கு அழைத்துச் சென்று, முழு முடக்கு கால கடன் சுமைகளை களைந்து  கொள்ள முடியாதா?  என்ற ஏக்கம் ஒரு பக்கம். வேலை தளத்தில் இருந்து வீடு திரும்பும் வரை பதின்பருவக் குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்ல முடியாது என்ற நெருக்கடி ஒரு பக்கம்.   

ஊரில் இருக்கும் ஒரு படித்த பையனையோ அல்லது பெண்ணையோ, அவர்களே ‘ஆசிரியர்’ என இவர்களே  நாமகரணம் சூட்டி, ‘உங்கள் வீடே பள்ளிக் கூடம்’ என்று  திடீர் தனிப் பயிற்சி மையங்கள் அல்லது திடீர் தற்காலிக பள்ளிகள் தன் நிதிப் பள்ளிகள் உருவாகி வருகிறது.  இந்த தீடீர் ஆசிரியரோ புகழ் பெற்ற சீனத் திரைப்படமான நாட் ஒன் லெஸ் ஆசிரியர் போல் நடந்து கொண்டு இருந்தார்.  அக்குழந்தைகளின் பள்ளி   ஆசிரியர்கள் கண்ணில் படும் போதெல்லாம் பெற்றோர்கள் எப்போது பள்ளிக் கூடம் என்று கேட்கிறார்கள்.  ஆனால் கொரோனா பெருந்தொற்று பெரும் பயம் இன்னும் அகலவில்லை. 

பெருந்தொற்று காலம் தொடங்கி மாதங்கள் ஒன்பது கடந்து விட்டது. இன்னும் தொண்ணூறு விழுக்காடு கிராமங்கள்,  இதனை ஒரு நகர்புற வியாதியாகவே பாவிக்கிறது.  நகர்புறங்களில் தொற்று பரவல் இருந்தாலும் கொரானா நோய் என்று ஒன்று இருக்கிறதா? இல்லை டூப்பா?” என்று கேட்கும், நகர்புற படித்த மாந்தர்கள் பலரை  பார்க்கவும் முடிகிறது. 

**முற்றிலும் படிக்க முடியவில்லை**

இதையெல்லாம் வைத்து பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை தான். பள்ளிகள் திறப்புக்கு இவையெல்லாம் ஓர் அளவுகோல் இல்லை என்பதும் நிஜம் தான். பள்ளிகளை திறக்காவிக்காவிட்டால்  என்ன? இணையதள வசதி இருக்கிறது. கல்வி தொலைக் காட்சி இருக்கிறது. இதோ ஆசிரியர் தினந்தோறும் வாட்ஸ்அப் வழியே பாடங்களை அனுப்பி வைக்கிறார். முடிந்தவரை படித்துக் கொள்ளுங்கள் என்கிறது அரசு‌. முடிந்தவரை அல்ல, முற்றிலும் படிக்க முடியவில்லை என்ற எதார்த்தத்தை தெரிந்து கொள்ள  கள ஆய்வுகள் ஏதும் தேவை  இல்லை. அதேசமயம்,  தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வி எப்படி இருக்கிறது? இதனையும் இரண்டாக பிரித்து விடலாம். ஏதுமற்ற ஏழைகளை விட சற்று மேலானவர்கள் என்று தங்களை கருதிக் கொண்ட மக்களை மையமிட்டு  பல தனியார் பள்ளிகள் நடத்தப்பட்டன. அவையும் அதில் படித்த குழந்தைகளும் திரிசங்கு நிலையில் தான் உள்ளனர். நடுத்தர வர்க்கம், அதற்கு மேல் உள்ள வர்க்கப் பிரிவினரின் குழந்தைகளுக்கான தனியார் பள்ளிகளில்  படிப்பு பெருமளவில் பாதிக்கப்படவில்லை.  தனி மடிக்கணினி, தனியறை என்று படிக்க வைக்க வாய்ப்பு கிடைத்த வர்க்கப் பிரிவை சார்ந்தவர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கற்றல் அடைவுகளை அடைந்துள்ளதாக கருத முடிகிறது.  

  அரசுப் பள்ளி மாணவர்களை பொறுத்த மட்டில் கற்றல் என்பது இன்னும் முழு முடக்கக்  காலம் போலவே இருக்கிறது. இது, இணைய வழிக் கல்வியில் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வு அல்ல.  இணைய வழிக் கல்வி இடைவெளி அல்ல.  கற்றல் கற்பித்தல் என்பதில் இருந்து முற்றாக துண்டித்து தூக்கி தூர  வீசியெறிந்து விட்டது என்றே கூற வேண்டும். அரசுப் பள்ளி குழந்தைகள், எழுத்துக்களை மறந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர்களோ? வேலைக்கு சென்றவர்கள் எத்தனை ஆயிரம் பேர் நிரந்தரமாக  பள்ளி இடை விலகப் போகிறார்களோ? உண்மையில் கொரோனா பெருந் துயரங்களில் இது நீடித்த நிலைத்த பெருந்துயரமாக இருக்கப் போகிறது. 

பெருந்தொற்று காலம். பள்ளிகளைத் திறந்தால் பற்றிக் கொள்ளும் என்று கூட வைத்துக் கொள்வோம். “பள்ளிகள் திறப்பு, வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம், கற்றல் கற்பித்தல்  அல்லது இணை வழி கல்வி” என்ற இரண்டு வழிமுறைகள் தவிர வேறு மார்க்கம்  இல்லை என்று நம் சிந்தைக்கு சீல் வைத்தது யார்? நாடு முழுவதும் 11,02,783 அரசுப் பள்ளிகள் உள்ளன. தமிழ் நாட்டில் மாத்திரம் 37211 அரசுப் பள்ளிகளில் சுமார் 5471544 மாணவர்கள் படிக்கிறார்கள்.  கற்றல் கற்பித்தலில் எத்தனை புதுமைகள் வந்துள்ளது? எத்தனை விதமான படைப்பூக்க கல்வி  முறைகள்  கையாளப்படுகிறது?.    அரசும், மாற்றுக் கல்விச் சிந்தனையாளர்களும்,  செயல்பாட்டாளர்களும், ஆசிரியர் சங்கங்களும்  இவை எல்லாவற்றையும்  ஒதுக்கி வைத்துவிட்டு இணைய வழிக் கல்வியை மட்டுமே  நம்பி அமைதியாக இருக்கிறார்களே! ஏன்?  அது சாத்தியமா என்ற முயற்சிகள் கூட நடைபெறவில்லையே, எதனால்?

**மாற்று வழி கல்வி**

டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் நடத்தும் தொண்டு நிறுவனம்  ஒன்று மட்டும் 700 ஆசிரியர்களைக் கொண்டு 31 000 குழந்தைகளுக்கு மாற்றுக் கல்வி வழியை வழங்கும்  மாபெரும் சாதனை படைத்துள்ளது. அந்தச் செயல்பாட்டை படிக்க படிக்க பிரம்மிப்பூட்டுகிறது‌.   கல்வியில் முன்னேறிய தமிழகம் போன்ற மாநிலங்கள் கூட அதுபற்றி ஏன்  கண்டுகொள்ளாமல் இருந்தது? என்ற கேள்வி மிகுந்த  வேதனையை தருகிறது.  டாட்டா இரும்பு எஃகு நிறுவனத்தின் தொண்டு நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? 

 ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு மிகவும் பின்தங்கிய  மாவட்டங்களில் உள்ள  சில கிராமங்களைத்  தேர்வு செய்து கொண்டார்கள்.  பெரும்பாலான கிராமங்கள்  ஆதிவாசி மக்கள் அல்லது  தலித் மக்கள்  வாழும் கிராமங்கள். 

குழந்தைகளுக்கு முதலில்  கொரோனா பாதுகாப்பு விசயங்களை கற்றுக் கொடுத்தார்கள். பொதுவான விதிமுறைகள் தாண்டி ஒருவர் பொருளைத் தொடக்கூடாது, என்பது வரை பல நிபந்தனைகளை இந்தக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.  ஒவ்வொரு ஊரிலும் உள்ள, குழந்தைகளை தனித்தனியாக,  சிறு சிறு குழுக்களாக பிரித்தார்கள்.‌

கொரானா கால மாற்றுக் கல்வியை வீட்டில் இருக்கும் ஆடு மாடு கோழியில் இருந்து தொடங்கினார்கள்.  கோழியின் உயரத்தையும் நீளத்தையும்  அளந்து பார்க்க தூண்டினார்கள்.  ஒரே கோழி போட்ட முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் ஏன் வெவ்வேறு உயரம் அகலம்  கொண்டதாக இருக்கிறது என்று கேள்வி கேட்க தூண்டினார்கள். பதில்களை தேடும்படிக் கூறினார்கள். மாட்டின் அகலத்தை அளந்து பார்க்க உற்சாகம் ஊட்டினார்கள்.  ஊருக்குள் இருக்கும் செடி கொடி மரங்கள் என எல்லாவற்றையும் நோட்டம் விடச் சொன்னார்கள்.  ஒவ்வொன்றின் இலையையும் மற்றொன்றின்  இலைகளோடு பொருத்திப் பார்த்து, வேற்றுமைகளை உற்று நோக்கும்படி கூறினார்கள்.  அது பற்றி உரையாடும்படி கேட்டுக் கொண்டார்கள். ஊருக்குள் இருக்கும் எல்லா விதைகளையும் சேகரிக்கச் சொன்னார்கள்.  விதைகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பிரித்து வைத்து உரையாடச் சொன்னார்கள். அதுபற்றிய அறிவை விருத்தி செய்ய வழிமுறைகளை கூறினார்கள்.

     

ஊரைப் பல முறை வலம் வந்து, ஒவ்வொரு பொருளாக உற்று நோக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். பின்னர்,  ஊரை ஒரு படமாக வரையச் சொன்னார்கள். அதில் வீடுகள் எங்கிருக்கிறது. கோயில் எங்குள்ளது. கிணறு எங்குள்ளது?  ஆழ்துளை கிணறு எங்குள்ளது?  என்று படம் வரையச் சொன்னார்கள்.  அதையே கொஞ்சம் விஸ்தரித்து, அவர்களது கிராமத்திற்கு வந்து சேரும் சாலைகளை குறிப்பிடச் சொன்னார்கள்.

பின்னர், அப்படியே அதனை பெரிதாக்கி அவர்களது ஊராட்சி ஒன்றியம் எங்குள்ளது? மாவட்டம் எவ்வளவு பெரியது? மாவட்ட தலைநகர் எங்கே இருக்கிறது? எத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது?  இத்தகைய செயல்முறைகள் அவர்களின் கிராமத்தை முற்றிலும்  புரிந்து கொள்ளப் பயன்பட்டது. சொந்த கிராமத்தை பற்றி புரிதல் அவர்களுக்கு பெரும் உற்சாகம் தந்தது.  இந்தக் குழந்தைகள் எல்லாமே பதின் பருவக் குழந்தைகள்.  இந்த செயல் வழிக் கற்றலில், குழந்தைகள்  தங்கள் ஊரில் படிக்க வேண்டிய பாரம்பரிய கல்வி கண்டு பிரமித்து போனார்கள். சில வகை செடிகள் கொடிகள் மரங்கள் ஆகியவற்றை அன்று தான் பார்ப்பது போல்  அவர்கள் பார்த்தார்கள். அதன் பயன்பாட்டை புரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள்.

ஊருக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்கள். வாய்க்கால், ஆறு, குளம், குட்டைகளில் உள்ள உயிரினங்கள்,  அதைச் சுற்றியுள்ள தாவரங்கள் ஆகியவற்றை குறித்து உரையாடினார்கள். ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஒவ்வொன்றையும் பலவிதங்களில் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். புகைப்படக் கலையில் ஆர்வத்தை ஊட்டினார்கள். இந்த செயல்வழிக் கற்றல் எவ்வளவு உற்சாகம் ஊட்டியிருக்கும்? எவ்வளவு விசயங்களை உற்சாகத்துடன் விளையாட்டு வழியே கற்றுக் கொண்டிருப்பார்கள்?  கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இப்போது கொரோனா காலம் தான். பள்ளிகள் திறப்பு இல்லை. பாடப்புத்தகங்கள் இல்லை. கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை. ஆனால், கற்றல் ஆர்வத்தோடு நடக்கிறது. உற்று நோக்கும் திறன் வளர்ந்து கொண்டிருக்கும். ஏன்? எதற்கு? எப்படி என்ற  கேள்விகள் குழந்தைகள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  தேடுதல் வேட்கை  அதிகரிக்கிறது. 

வீட்டுப் பாடம்  என்று ஏதும் இல்லை. ஆனால் எண்ணும் எழுத்தும் அதன் பயிற்சிகளும்  அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த செயல்பாடுகள் வழியாக, எண், எழுத்து என்பதைத் தாண்டி, புவியியல், வேளாண்மை,  வேளாண்மை அறிவியல், இயற்பியல்  உயிரியல் என பல பாடங்களை செயல் வழிக் கற்றல் வழியே தொடர்ந்து கற்று வருகின்றனர். ஆனால் பள்ளிப் பாடத்திட்டத்தின் வடிவில் அல்ல‌‌ . இதன் பரிணாமம் வேறு. 

இந்தப் பாடங்கள்/ செயல்பாடுகள்  முதல் தலைமுறையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் உகந்த  கல்வி முறையாக இருப்பதை ஆசிரியர்கள் மாணவர்கள் என இருதரப்பும் இணைந்து ஆர்வமுடன் கற்றனர்.

இன்னமும் கூட இதேமாதிரி பல்வேறு விசயங்களை இந்தக் குழந்தைகளுக்கு கற்றுத் தர முடியும்.  சாலைகளை  படமாக வரைந்து காட்டச் சொல்லும் போது, நல்ல சாலைகள் மோசமான சாலைகள் என இரண்டுக்கும் வித்தியாசம் காட்டச் சொல்வது. பின்னர் இரண்டையும்  ஒப்பிட்டுக் காட்டும் படி கூறலாம். மோசமான சாலைகளுக்கு யார் காரணம்? எப்படி சரி செய்வது என்று சிந்திக்க தூண்டலாம் என்கிறார்கள். அவரவர் வீட்டில் ஊரின் பொது இடங்களில் விதைகளை ஊன்றும்படிக் கூறலாம். அவை எப்படி முளைக்கின்றன? எப்படி வளர்கின்றன  என்று அவதானிப்பு செய்யும்படி கூறலாம்.  செடிகள் கொடிகள் வேர் பாகங்களை காட்டி சிந்தனையை தூண்டலாம்.  பல்வேறு வகையான வேரின் வடிவங்களை காட்டி, கல்வி புகட்ட முடியும்.  விளைச்சல் முடிந்ததும்  அறுவடை நடைபெற்றால் அதனையும் அழைத்து சென்று காட்டலாம். 

நினைக்க நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மலைப்பாக இருக்கிறது. இத்தகைய செயல்வழிக் கற்றல் முறையை ஏன்  நம்மால்  செயல்படுத்தவில்லை? 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆர்வலர்கள் ‘சிட்டுக்கள் மையம்’ என்ற பெயரில் ஆங்காங்கே சில முயற்சிகளை செய்கிறார்கள். இன்னும் சில தன்னார்வலர்கள் சில முயற்சிகளை செய்து கொண்டு இருக்கலாம்.  ஆனால்,  அரசே அனைவரையும் திரட்டி  ஒரு மாற்றுக் கல்வி செயல்பாடாக ஏன் கொண்டு செல்ல முயற்சி எடுக்கவில்லை?  கொரானாவை வெற்றி கொண்டாலும் ஏழைக் குழந்தைகளின்  கற்றல் பாதிப்புகள் தொடரவே செய்யும். என்ன செய்யப் போகிறோம்? 

**கட்டுரையாளர்**

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *