மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

பணியில் ஒரே மருத்துவர்தானா?: ஆட்சியரின் ஆய்வில் அதிர்ச்சி!

பணியில் ஒரே மருத்துவர்தானா?: ஆட்சியரின் ஆய்வில் அதிர்ச்சி!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், பணியில் 8 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், ஒரு மருத்துவரே பணியிலிருந்தது மாவட்ட ஆட்சியரின் திடீர் சோதனையில் தெரியவந்தது. கொரோனா காலத்தில் மக்கள் சிகிச்சை பெறச் சிரமப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவர்களின் இந்த அலட்சியமான செயல் ராமநாதபுர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மருத்துவர்கள் தங்களது க்ளீனிக்குகளுக்கு தரகர்கள் மூலம் வரச் சொல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதோடு, அறுவை சிகிச்சை அளிப்பதில் தாமதம், உரிய வசதி இல்லை எனக் கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரை செய்தல் என ஒரு அரசு மருத்துவமனை தரகர்களின் பிடியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளர்களை மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் உடந்தை என்றும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொன்னால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுவதாகவும் புகார் எழுந்தது.

இவ்வாறு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர், பொன் ராஜ் ஆலிவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். எலும்பு முறிவு பிரிவில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த வார்டு பொறுப்பாளராக இருந்த பெண் செவிலியர் பவித்ராவிடம் ஆட்சியர், எதற்காகத் தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு அவர், மருத்துவர்கள் கையெழுத்திட்டுப் பரிந்துரை செய்தால்தான் நாங்கள் பரிந்துரை செய்வோம். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

அப்போது மற்ற மருத்துவர்கள் எங்கே என்று கேட்ட போது, பணியில் 8 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததும், மற்றவர்கள் விடுமுறையிலிருந்ததும் தெரியவந்தது. ஒரே ஒரு மருத்துவர் மட்டும் பணியிலிருந்ததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

இதையடுத்து ஒருவர் மட்டும் பணியில் இருப்பது ஏன்? ஒரே நாளில் 7 பேர் விடுமுறை எடுத்துக்கொண்டது எப்படி? என்று ஆட்சியர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டிருக்கிறார். அதோடு சுகாதார பணியாளர்களையும் அழைத்து யாராவது புகாரில் சிக்கினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

மேலும், அரசு வேலை வேண்டாம், க்ளீனிக் மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதற்கும் வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர், இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இந்த புத்தாண்டிலாவது திருந்தி வேலை செய்யுங்கள். நீங்கள் சரியாக வேலை செய்தால் நான் தொந்தரவு செய்யமாட்டேன் என்று எச்சரிக்கையுடன் அறிவுறுத்திச் சென்றுள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 ஜன 2021