இந்தியாவில் மன நோயாளிகளுக்காக அரசு எவ்வளவு செலவிடுகிறது?

public

இந்தியாவில் போதிய மனநல மருத்துவமனைகள் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் சிறைகளில் மனநலம் பாதித்த கைதிகள் உள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அல்லது திருச்சி மத்தியச் சிறையில் மனநல சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  உலக அளவில் மிகவும் மனச் சோர்வடைந்த நாடாக இந்தியா உள்ள போதிலும், 2018 -19ஆம் ஆண்டில் அவசர மனநிலை பராமரிப்பு தேவைப்படும் 15 கோடி மக்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 20 பைசா மட்டுமே செலவழித்து இருப்பதாக  நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு உத்தரவின் 15ஆவது பக்கத்தில், இந்திய நிதிநிலையில் மனநல ஆரோக்கியத்துக்காக 2018ஆம் ஆண்டு 52.8 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு 40 கோடியாகக் குறைக்கப்பட்டது. 5 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது என்று இந்த அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மனநல பிரச்சினைக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 9,000 மனநல மருத்துவர்கள்தான் உள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர்தான் உள்ளார். 18,000 மனநல மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு ஆண்டுக்கு 2,800 மனநல மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். குழந்தைகள் மனநல மருத்துவர்கள் 49 பேர் மட்டுமே உள்ளனர்.

மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. இளைஞர்கள், மாணவர்கள் மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். குடும்பங்களில் மனரீதியாகப் பிணைப்பு இல்லை. இதனால் உளவியல் சார்ந்த பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தாக்கலாகின்றன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, ஏழு பேரில் ஒருவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுவது உண்மைதானா?

இந்திய மக்கள் தொகையில் மனம் மற்றும் உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஏதேனும் கள ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதா? அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருந்தால் கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது?

இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் பாதிக்கப்படும் உளவியல் பிரச்சினை என்ன?

இந்தியாவில் போதுமான மனநல மருத்துவமனைகள் உள்ளதா? மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அல்லது மண்டல அளவிலும் ஏன் மனநல மருத்துவமனைகளைத் தொடங்கவில்லை?

மனநலம் தொடர்பான மத்திய அரசின் முதன்மை நிறுவனமான நிமான்ஸ் (NIMHANS) பெங்களூருவில் உள்ளது. இதுபோன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து மண்டலங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் மனநல பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு மாவட்ட அளவிலும் தாலுகா அளவிலும் மனநல மருத்துவரை நியமிக்க என்ன நடவடிக்கை உள்ளது? அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனநல பாடங்களைக் கற்பிக்க வெளிநாட்டு உளவியல் நிபுணர்களைப் பயன்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மன நலப் பாதுகாப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்கும் நிதியை ஏன் உயர்த்த கூடாது? மறுவாழ்வு மையங்களை விரிவுபடுத்த எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் , இந்திய மருத்துவக் கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு, நிமான்ஸ் இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், மேற்குறிப்பிட்ட கேள்விகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் டிசம்பர் 9ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *