மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 நவ 2020

கொரோனா: ரமணனுக்கு புரிந்தது உங்களுக்கும் புரிந்திருக்குமே…!

கொரோனா: ரமணனுக்கு புரிந்தது உங்களுக்கும் புரிந்திருக்குமே…!

அக்குஹீலர் இல.சண்முகசுந்தரம்

இதோ, ரமணன் வேலைக்குக் கிளம்பிவிட்டார். கொரோனா பயம் இவருக்கு இருந்தாலும், அனைத்து நிறுவனங்களும், அலுவலகங்களும் இயங்க ஆரம்பித்துவிட்ட பின்பு, இவர் மட்டும் எப்படி வீட்டில் இருக்கமுடியும்? ஏற்கனவே, நான்கு மாதமாக சம்பளம் வேறு இல்லை. வேலைக்குச் செல்வதைத் தவிர வேறென்ன வழி?

எப்போதும் மின்சார ரயிலில் வேலைக்குச் செல்பவர். இப்போதுதான் பொதுமக்களுக்கு ரயிலில் ஏற அனுமதி இல்லையே. பஸ்ஸில் சென்று ஓரிடத்தில் இறங்கி, பின்னர் ஷேர் ஆட்டோவில்தான் போகவேண்டும். ஆரம்பத்தில் பயந்தவர் இதோ இரண்டு மாதத்தில் அதற்கும் பழகிவிட்டார்.

ஏங்க, மாஸ்க் மறந்துறாதீங்க, இருக்குற கொரோனா கஷ்டம் பத்தாதுன்னு, அதுக்கு வேற இருநூறு தண்டம் கட்டணும், ஒரு தடவ கட்டுனது போதாதா? வீட்டின் அடுப்படியிலிருந்து கத்திச் சொன்னாள் கனகம்.

சரி, சரி கத்தாதே, எடுத்துக்கறேன், கொடியில் கிடந்த மாஸ்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ரமணன். நேத்து ஒரு மாஸ்கை வீட்டிற்கு வந்ததும் கழட்டி, பேக்கிலேயே வைத்தோமே, இருக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டார். மடிந்துபோய் கிடந்தது.

கொரோனாவை விட பைனுக்குதான் பயம்

ஆட்டோல, பஸ்ஸூல கூட்டத்துல ஏறி இறங்குறோம், போட்டுருக்குற மாஸ்க் தொலைஞ்சிருச்சுன்னா, அந்த நேரம் பார்த்து அதிகாரிங்க பிடிச்சு பைன் போட்டுறக்கூடாதே, கொரோனாவை விடவும், அதக் காரணமா வைச்சு பைன் போடுற இந்த அதிகாரிங்களுக்குத்தான் அதிகம் பயப்பட வேண்டிருக்கு, பஸ்ஸூல இடிச்சுக்கிட்டு நிற்கிறோம், அப்புறம் மாஸ்க் காப்பத்தும்னு எப்படி நம்புறது? சமூக இடைவெளி இல்லேன்னா ஐநூறு கட்டணுமாம், எந்தக் கடைல, பஸ்ஸூல சமூக இடைவெளி சாத்தியம்? அரசு சொல்லுறத யாரு மதிக்கிறா? முனங்கிக்கொண்டே கிளம்பினார் ரமணன்.

தெருமுனை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். நின்றுகொண்டிருந்த பதினைந்து பேரும் மாஸ்க் போட்டிருந்தனர். ஒருத்தர் கூட மாஸ்க ஒழுங்கா போடுறதுல்லே, புலம்பிக்கொண்டே நின்றுகொண்டிருந்த ஒவ்வொருவரின் மாஸ்கிலும் ஒவ்வொரு குறையைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார் ரமணன்.

ஒருவரின் மாஸ்கில் கடும் கறுப்பில் ஒரு கறை, இன்னொருவர் மாஸ்க்கில் அழுக்கு நன்றாகவே தெரிந்தது. வாரத்துக்கு ஒருமுறை சோப்பு போடுவார் போலிருக்கிறது. இன்னொருவர் அடிக்கடி கையால் தொட்டு இழுத்துவிட்டுக்கொண்டிருந்தார்.

மாஸ்க்கை தொடுவதும், பேன்ட் பாக்கெட்டில் கைவிடுவதுமாக இருந்த ஒருவரும் அங்கே நின்றுகொண்டிருந்தார். வேகமாக ஓடிவந்த ஒருவர் பேன்ட் பையில் கிடந்த மாஸ்கை தேடிப் பிடித்துப் போட்டுக்கொண்டார்.

ரமணனுக்கு இதெல்லாம் பார்த்து ஒரே கோபம்.

மாஸ்க்கை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி

மாஸ்குக்கு வெளிப்பக்கம் அடிக்கடி கையை வைக்கிறதா இருந்தா, மாஸ்க் போடுறதுலேயே அர்த்தமில்லையே? ஒவ்வொரு நாலு மணி நேரத்துக்கும் ஒரு மாஸ்கை மாத்தலைனாலும் பரவாயில்லை, காதுப் பக்கம் ஒரு விரல வைச்சு மெதுவா கழட்டி, அப்படியே சோப்பு தண்ணில போட்டு ஊற வைச்சுல்ல வாஷ் பண்ணனும்?

நான் சுத்தமா இருக்கேன், அதனால அப்படி செய்யணும்னு அவசியமில்லே, ஆனா, அழுக்கு படுற வேலை செய்யுறவங்க, வண்டில போறவங்க, டெய்லி சோப் போடணும்ல? இப்படி அடிக்கடி கழற்றதும், மாட்டுறதுமா இருந்தா மாஸ்க்கின் வெளிப்பக்கம் ஒட்டியிருக்கிற கிருமி கையில படாதா?

இந்த லட்சணத்துல ஆபிஸ்ல தண்ணீர் குடிக்கும்போதும், கடைல சாப்பிடும்போதும், டீ குடிக்கும்போதும் மாஸ்க கழட்டி கையில வைச்சுக்குறாங்க, இல்லேன்னா பேன்ட் பாக்கெட்ல போட்டுக்குறாங்க., மறுபடியும் அதையே எடுத்து மாட்டிக்கிறாங்க, அப்புறம் எதுக்குதான் இந்த மாஸ்க்? பேருந்து வந்து நின்றதால் ரமணனின் கேள்விகள் இத்தோடு முடிந்தது. இல்லையென்றால் இதுபோன்று இன்னும் ஆயிரம் கேள்விகள் அவருக்கு எழும்.

பஸ்ஸில் வாசற்படியருகே சானிடைசர் இருந்தாலும், யாரும் கைகழுவவில்லை. எல்லோரும் சரசரவென ஏறி உள்ளே போய் நின்றுகொண்டனர். ரமணனுக்கு கையைக் கழுவுவதில் விருப்பமெனினும், படியில் நின்று கொண்டு 15 விநாடிக்குக் கையை கழுவமுடியாதே. வேகமாய் ஏறிப்போய் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாய் ஒடுங்கி நின்றுகொண்டார்.

நம்மில் பலருக்கும் இதுபோன்ற கோபம், கேள்விகள், பயம் நிச்சயம் இருக்கும். அநேகமாக எல்லோருக்கும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. கடைக்கும், கம்பெனி வேலைக்கும், அலுவலகத்துக்கும் சர்வ சாதாரணமாகக் கிளம்பத் துவங்கிவிட்டோம்.

பயத்தால் பயன் என்ன?

ஏழரை மாதங்கள் கழிந்துவிட்டன. ஆனால், அந்த கொரோனா பயம்…? அதுதான் இன்னும் கொஞ்சம்கூட ஒழிந்தபாடில்லை. ஊர் இயங்க, இயங்க குறைய வேண்டிய பயம் இப்போதுதான் சிலருக்கு அதிகமாகிறது. இன்னும் சிலருக்கோ மார்ச் மாத அதே மனநிலைதான்.

கொரோனா எனும் கிருமி பரவுவதைத் தடுக்கவும், தற்காத்துக்கொள்ளவும் நிச்சயம் அனைவருக்கும் கவனமும், பொறுப்பும் அவசியம்தான். ஆனால், என்ன வகையான கவனமும், பொறுப்பும் தேவையென்பதில் இருக்கும் குழப்பம் அதிகமாகிக்கொண்டே வருவதுதான் வேதனையானது,

நோயை ஏழு மாதமாக பார்த்துவிட்டோம். எப்படிப் பரவுகிறது? யாருக்கு ஆபத்து ஏற்படுகிறது? சிகிச்சை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கவனத்தை மேம்படுத்தாமல் வெறுமனே பயம்கொள்வதால் யாருக்கு என்ன பலன்?

எல்லா வகையிலும் பாதுகாப்பாய் கவனமாய் இருப்பதில் தவறில்லை. ஆனால், வெறும் பயம் யாருக்கும் எப்போதும் உதவாதே. அந்த உதவாக்கரை பயத்தை வைத்துக்கொண்டு என்ன செய்துவிடமுடியும்?

ஆனால், இதில் நகைமுரண் என்னவென்றால், செயலில் யாருக்கும் பயமில்லை. அதில் வாழ்வுக்கான முனைப்பும், துணிவும் எல்லோருக்கும் இருக்கிறது.

ஆனால், பயன்படவே பயன்படாத, உருப்படாத அந்த உதவாக்கரை பயத்தை விழிப்புணர்வு என்ற பெயரில் தூக்கிக்கொண்டே திரிகிறோம், பாருங்கள், அதை நினைத்தால்தான் பல நேரத்தில் சிரிப்பு வருகிறது.

சமூக இடைவெளியை கடை பிடிக்கிறோமா?

ஆமாம். எங்கெல்லாம் குடும்பமாய், கூட்டமாய் செல்ல வாய்ப்பிருக்கிறதோ, அங்கெல்லாம் குடும்பமாய் செல்ல ஆரம்பித்துவிட்டோம். சின்ன ஊர் முதல் சென்னை பிரம்மாண்ட ஸ்டோர், மால்கள், பானிபூரி கடை வரை எல்லா இடங்களிலும் குழந்தைகளின் கூட்டமே பெருங்கூட்டமாகும்.

எள் போட்டால் கீழே விழாது போலிருக்கிறது, சில கடைகளில், சாலைகளில் குழந்தையும், குடும்பமும், வாகனங்களுமாய் அப்படிக் கூட்டம். ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் நிரம்புகிறது. கொரோனா பரவிய ஏப்ரல் மாதத்திலேயே காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகளில் கூட்டமாய் சேரத் தயங்காதவர்கள், இப்போது சொல்லவா வேண்டும்?

இதோ, தீபாவளிக்கென வழக்கம்போல் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன

காற்றில் வேகமாய்ப் பரவுமெனில் இத்தனைக்கூட்டம் சேர்கிறோமே, மனிதகுலம் இன்றைக்கு உயிரோடு மிஞ்சியிருக்குமா?

கையை நன்றாகக் கழுவுகிறோமா?

கொஞ்சம் நெஞ்சம் தொட்டுச் சொல்லுங்கள். கடை வாசலில் சானிடைசரை கையில் தொட்டுவிட்டுச் செல்கிறோமே, கையை நன்றாகக் கழுவுகிறோமா? 15 விநாடிகள் கையை முன்னும் பின்னும் மேலும் கீழும், சுற்றிச் சுழலக் கழுவிட வரிசையில் நமது பின்னால் இருப்பவர் அனுமதிப்பாரா? செல்லும் எல்லாக் கடைகளிலும் கழுவ முடிகிறதா? கழுவாமல்தானே பல கடைகளில் நுழைகிறோம்?

வீட்டினுள் நுழையும்போது, வீட்டின் கதவை, சட்டையை, செருப்பை, வண்டியை, பர்சினை தொடாமல் கையைக் கழுவிய பின்னரே தொடுவது என்று பின்பற்றுகிறோமா?

சார், அதெல்லாம் சாத்தியமில்லை என்று பதிலுரைப்போம். ஆனால், பயங்கொள்வோமெனில், அது என்ன வகையான புரிதல்?

கையின் ஒரு பகுதியால் சானிடைசரைத் தொடுகிறோம். லேசாக தேய்க்கிறோம். இதுதான் நம்மைப் பாதுகாக்கும் செயலென்று நம்புகிறோம். ஆனால், பயத்தை மட்டும் விடமாட்டேன் என்கிறோம்.

ஒரு பெரிய கடைக்கு சென்றேன். ஆயிரக்கணக்கில் கூட்டம். வாகனம் நிறுத்த இடமில்லை. எந்த மாடிக்குச் சென்றாலும் கூட்டம். பிப்ரவரிக்கு அந்தக் கடைக்கு சென்றபோது எப்படிக் கூட்டம் இருந்ததோ அதே போன்று கூட்டம். வாசலில் சானிடைசர், வெப்ப சோதனை, சமூக இடைவெளி இருந்தது. ஆனால், கடையினுள்….? குறுக்கும் மறுக்குமாய் குழந்தைகள் ஓடி விளையாடும் அழகைச் சொல்லவும் வேண்டுமோ,,,

மொத்தக் காய்கறி மார்க்கெட் முதல் உள்ளூர் மார்க்கெட் வரை ஒவ்வொரு கடைக்காரரும் நம் கையில் உள்ள பணத்தை வாங்கிய அதே கையில்தானே காய்கறியையும் எடுத்துத் தருகிறார். மார்ச் முதல் இன்று வரை நடக்கும் கதைதானே இது.

இவர்களெல்லாம் சானிடைசர் போட்டுக் கழுவிக் கொண்டே ஒவ்வொரு கட்ட வேலையையும் செய்யமுடியுமா? ஆனால், இவர்கள் அத்தனை பேருக்கும் கொரோனா வரவில்லையே. நமக்கும் அத்தனை பேருக்கும் வியாதி பரவவில்லையே.

தற்காலிக ஏற்பாடுகள்

பல கடைகளின் வெளியே கம்பி கட்டி உள்ளே வரக்கூடாது என்கிறார்கள். கேட்டால் கொரோனா பரவிவிடுமாம். கையில் இருந்த பணத்தைக் கொடுக்கிறோம். அதைக் கடைக்காரர் வாங்கிக்கொண்டு பொருள் அளிக்கிறார். மீதமும் அளிக்கிறார். ஒரு சிலர்தான் ஆன்லைன் பே செய்கிறார்கள். ஆனால், பலரின் கைகளில் இருந்த பணத்தைத் தொட்ட அவரின் கையில் கிருமி, பரவியிருக்குமா, பரவாதா?

ஆக, ஒரு விஷயத்தை நாம் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. லாக்டவுன், மாஸ்க், சானிடைசர், சோஷியல் டிஸ்டென்ஸ், வொர்க் ஃபிரம் ஹோம்... இதெல்லாம் தற்காலிக ஏற்பாடே ஆகும். இன்று கூட இவை முழுமையாய் நமக்குப் பயன்படாது. அதையும் தாண்டிய பொறுப்புணர்வு தேவை. நேற்று வந்த பிரச்னையைக் கடக்க இந்த வழிகள் பயன்பட்டன. அவ்வளவுதான்.

ஆனால், நிச்சயமாக எதிர்காலத்தை வரவேற்கவோ அல்லது காலம் தரும் சவால்களை எதிர்கொள்ளவோ இந்த ஏற்பாடுகள் ஒருபோதும் உதவப்போவதில்லை.

அப்படியென்றால், என்னதான் செய்வது? ஆம். அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

தடுப்பூசி கிடைக்கும் வரை வீட்டில் முடங்க வேண்டுமா?

கிருமியின் மீது உருவாக்கிக்கொண்ட பயத்தில் பாதியைக் கூட நோயெதிர்ப்பு சக்தியுடன் வாழ்வது குறித்தான விழிப்புணர்வாய், நம்பிக்கையாய் மாற்றியிருந்தால் இந்நேரம் நாம் யாரும் பயப்பட வேண்டியிருக்காது.

இப்போதுகூட தடுப்பூசி குறித்துதான் பிரச்சாரம் செய்கிறார்களேயொழிய, கிருமிகளை எதிர்த்து மனிதகுலத்தால் நிச்சயம் வாழமுடியுமென அறிவியல் உலகத்தார் சொல்ல விரும்புவதில்லையே, ஏன்? ஆக, ஒவ்வொரு நோய் வரும்போதும், அதற்கான மருந்தும், தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கும்வரை நாம் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்க வேண்டியதுதானா? இதுதான் அறிவியல் உலகின் சாதனையா?

தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறியிருக்கிறோம்தான், ஆனால், இப்போது எல்லாத் தொழில்நுட்பங்களையும் முடக்கிவிட்டுத்தானே வீட்டில் முடங்கிக்கிடக்கிறோம்.

மனிதனிடம் இயற்கையாய் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி எப்படி, ஏன் குறைகிறது என்று எப்போது உணரப்போகிறோம்? மாறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சூழலையும் தனது பரிமாண வளர்ச்சியின் மூலம் எதிர்கொண்டு எல்லாச் சூழல்களிலும் வாழும் தகுதியை மனிதன் இயல்பாய் பெறமுடியவில்லையெனில், மனிதகுலம் தானாக அழிந்துபோகுமென்று அறிவியல் சொல்கிறதே, அது பொய்யா?

உணவே மருந்து

மாத்திரைகள் மட்டும் போதுமா? மனிதகுலத்திற்கு வாழும் தகுதியை அளித்துவிடுமா? மாத்திரையே கண்டுபிடிக்கப்படாத வியாதிகள் இருக்கின்றனவே, மறுக்கமுடியுமா?

உணவே மருந்தென வாழ்ந்த சமூகம். அதாவது, மருந்து எனத் தனியே எங்களுக்கு எதுவும் வேண்டியதில்லை. உணவையே ஒரு மருந்துபோல் கருதி மனிதனால் வாழமுடியும் என்றனர் நம் முன்னோர். எப்போது வேண்டுமோ அப்போது மட்டும் சாப்பிடுவதுதானே மருந்தின் அவசியப் பயன்பாடு. .

அதுபோல் பசியைக் காட்டி எப்போது உடல் உணவெனக் கேட்கிறதோ அப்போது சாப்பிடுவோம். எவ்வளவு வேண்டுமோ அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டுமென்பதுதானே, மருந்தின் அளவுப் பயன்பாடு. அதுபோல், உணவை அளவாய் உண்போம். இப்படி இருந்த சமூகம், இன்று விட்டமின், கார்போஹைட்ரேட், பி.காம்பிளக்ஸ் என்று சத்துக்களையே மாத்திரை போல் எடுத்துக்கொள்கிறது.

சளி, காய்ச்சலைக்கூட இயற்கையாய் எனது உடல் எதிர்க்காது என நினைத்து நோயெதிர்ப்பு சக்தியை மாத்திரை மூலம் பெற நினைக்கிறோமே, ஒரு மாத்திரையால் பெற்றதாக நம்பும் நோயெதிர்ப்பு சக்தி இன்னொரு நோய் வரும்போதோ அல்லது அதே நோய் மீண்டும் வரும்போதோ காணாமல் போய்விடுகிறதே,

எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம் இந்த உண்மையை? நோய் வரட்டும். அதை எதிர்க்க, எதிர்க்கத்தானே எதிர்ப்பு சக்தி வளரும். ஓட ஓடத்தானே ஒட்டம் பழக முடியும். படித்துப் படித்துதானே தேர்வில் முன்னேறுகிறோம். பயிற்சியின்றி ஒரு செயலினைச் செய்யவும் முடியாது. எதிர்த்து நிற்காமல் எதையும் தோற்கடிக்கவும் முடியாது. அப்புறமும் ஏன், உடல்நலக்கோட்பாட்டில் இந்த அனுபவங்களைப் பொருத்திப் பார்க்க மறுக்கிறோம்?

எப்படி அந்த சக்தி உருவாகும்?

ஒரு பன்றியின் அல்லது குரங்கின் உடலில் செலுத்தப்பட்டு பெருக்கப்பட்ட கிருமிகளை, செயற்கை இரசாயனங்களோடு சேர்த்து உடலில் சேர்த்துக்கொள்கிறோம். அந்தக் கிருமியின் மூலம் நோயெதிர்ப்பு சக்தி பெருகிவிடுமென நம்புகிறோம்.

ஆனால், தெருவில் கால் பதிந்தால், நகராட்சி தண்ணீரைக் குடித்தால், தெரு உணவகத்தில் சாப்பிட்டால், தெருவில் விளையாடினால் நோய் வருமென பயங்கொள்கிறோம். அப்படியெனில், எப்படித்தான் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும்?

நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிற உடலில்தானே, நோய் உருவாகும்போதெல்லாம் அதை எதிர்க்கும் சக்தியும் உருவாகி, நோயைத் தடுத்து உடலைப் பலப்படுத்தும். மாறாக, பூட்டப்பட்ட கதவுகளுக்குள் இருந்தால் நோய் மட்டுமல்ல, நோயெதிர்ப்பு சக்தியும் வராதே.

ஆனால், கிருமி உங்களை அப்படியே இருக்க விட்டுவிடாதே…? ஆம். நோயே வராத சூழலில் வளரவிரும்பினோமெனில், இப்படித்தான் ஏதோ ஒரு கிருமி எங்கிருந்தோ வரும்போது பயந்தே முடங்கிக்கிடக்க வேண்டியது வரும், அல்லது பலியாக வேண்டிவரும். நோய்க்குப் பயந்து ஓடிக்கொண்டே இருங்கள். நீங்கள் ஓடும் இடமெங்கும் நோய் வரும்.

ஐ.சி.யூ.வுக்கு சென்று பாதுகாப்பாய் சிகிச்சை எடுப்போரையும் கிருமி தாக்குகிறது எனில், கிருமி வலுவானது என்று அர்த்தமா அல்லது உடல் பலவீனமாய் இருக்கிறது என்று அர்த்தமா?

நோயை எதிர்கொள்ளும் மனநிலையில் இருங்கள். நோய் வராது. விலகிவிடும். ஆம். இப்போதுகூட ஒரு உண்மை நம் கண்முன் இருக்கிறது.

இந்த ஏழரை மாதமும் பல இலட்சக்கணக்கான மக்கள் தினசரி வீட்டைவிட்டு வெளியே வந்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பின் மூலம்தான் நாம் வீட்டில் இருந்தே சாப்பிட முடிகிறது.

ஹைஜீனிக்கும் உழைப்பும்

ஏழைகள், கூலிகள், விழிப்புணர்வு இல்லாதவர்கள், பொறுப்பு இல்லாதவர்கள், சுத்தமற்றவர்கள், மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளி அறிவில்லாதவர்கள், அநாகரீகமானவர்கள், நோயைப் பரப்புபவர்கள் என்று பலரும் பலவாறாக அவர்களை அழைக்கிறோம். இன்னும் எப்படியாகினும் அழைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால், உண்மை என்னவெனில், நாம் அவர்களை நம்பித்தான் வாழ்கிறோம். அதுமட்டுமல்ல, அவர்கள் நோய்க்கு பயப்படவில்லை. ஹைஜீனிக் என்பது உழைப்பில் இருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு பயமும் இல்லை, இழப்பும் இல்லை.

இதோ, ரமணனும் அந்தப் புரிதலுக்கு வந்துவிட்டார். பஸ்ஸில் தினசரி போகும்போதெல்லாம் அவரது பயம் குறைந்துகொண்டே வருகிறது. அவர் மீது அவருக்கு நம்பிக்கை அதிகமாகிக் கொண்டுவருகிறது.

கவனமாய் இருக்கிறார்தான். ஆனால், பயங்கொள்வதில்லை.

கட்டுரையாளர் குறிப்பு

இல. சண்முக சுந்தரம், அக்குபங்சர் சிகிச்சை செய்துவரும் அக்குஹீலர். உடல்நலம், இயற்கை சார்ந்த வாழ்வுமுறை என எழுதியும், செயல்பட்டும் வருபவர்.

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

4 நிமிட வாசிப்பு

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

ஞாயிறு 22 நவ 2020