மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

மின்சார ரயில்களில் பயணிக்க பெண்களுக்கும் அனுமதி!

மின்சார ரயில்களில் பயணிக்க பெண்களுக்கும் அனுமதி!

வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அத்தியாவசிய பணிகளுக்காகச் செல்பவர்களுக்கு மட்டும் முதலில் அனுமதிக்கப்பட்டது.

தொடக்கத்தில் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன, இதைத்தொடர்ந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர் 244 ஆக அதிகரிக்கப்பட்டு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ஊரடங்கு காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களில் தற்போது 40 சதவிகித ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், அத்தியாவசிய பணிக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பயணம் செய்யும்போது சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம் மற்றும் அலுவலக அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மின்சார ரயில்களில் வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல், அலுவலக நேரமான காலை 7 முதல் 10 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 7.30 வரையிலான நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பெண் பயணிகளுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுவதும் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

-பிரியா

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon