மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ஆதி காலத்தில் பெண்கள் வேட்டையாடினார்களா?

ஆதி காலத்தில் பெண்கள் வேட்டையாடினார்களா?

உஷா பாரதி

(((நவம்பர் 25 – பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்புநாள் – அதற்கான சிறப்புக் கட்டுரை.. அடுத்த வாரம் முதல் பாடலதிகாரம் தொடரும்)))

இப்படியொரு கேள்வி கேட்பது இன்றைக்கும் அவசியமாக இருக்கிறது. ஆணைக் காட்டிலும் பெண் பலவீனமானவள். கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. எனவே, பெண்ணுக்கு ஆணை விட குறைந்த கூலி என்ற நிலைமை இன்றும் இருக்கிறது. உதாரணமாக, கடினமான உடல் உழைப்புகளைக் கோரும் வேலைகளில் பெண்களை அமர்த்துவதில்லை. ஒரு பெண் ஒரு நாளும் கொத்தனார் ஆக முடியாது. அவள் என்றைக்கும் சித்தாள்தான். ஒரு கனரக உற்பத்தி நடக்கும் ஆலையில் பெண்களைப் பார்க்க முடியாது. ஆயத்த ஆடை உற்பத்தி என்றால் பெண்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

ஆக, பெண் பலவீனமானவள் எனவே, கடினமான வேலை அவள் பார்க்கக் கூடாது. அவளுக்கு ஆணுக்கு இணையான சம்பளம் கொடுக்கக் கூடாது என்பதுதான் இன்றைக்கும் நிலைமையாக இருக்கிறது.

ஆதி காலத்தில், அதாவது தொன்மை மனித சமூகத்தில் பெண்ணின் நிலை என்ன?

ஒன்றும் பெரிய மாறுதல் இல்லை. ஆண்கள் வேட்டைக்குப் போனார்கள். ஆனால், வேட்டையின் மூலம் உணவு கிடைக்கும் என்பது உறுதியில்லை என்பதால்,

பெண்கள் உணவு சேகரிக்கப் போனார்கள் என்று தொன்மை வரலாற்றில் நிபுணத்துவம் உள்ள வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்..

இந்த கூற்றைப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள் கூட மறுத்ததாகத் தெரியவில்லை. பெண்கள் சொல்லும் உலக வரலாறு (The women's History of the World) என்ற நூலை எழுதிய ரோசலிண்ட் ஸ்மைல் என்ற பெண்ணியவாதியும் கூட தன் நூலில் ஆதி பெண்கள் உணவு சேகரிப்பில் ஈடுபட்டு பின்னர் விவசாயத்தைக் கண்டுபிடித்தனர் என்றுதான் கூறுகிறார்.

இல்லை. பெண்கள் வேட்டையில் பங்கெடுத்திருக்கிறார்கள். அதுவும் பெரிய அளவில் பங்கெடுத்திருக்கின்றனர் என்று புதிய தொல்லியல் ஆய்வு ஒன்று சொல்கிறது.

தென்னமெரிக்காவில் உள்ள ஆண்டீஸ் மலையில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெண் வேடரின் சவ அடக்க இடத்தை ஆய்வாளர்கள், கடந்த 4 நவம்பர் 2020ல், கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஆண் வேட்டையாடி உணவு கொண்டுவந்தான், பெண் உணவு சேகரிக்கும் திறன் பெற்றிருந்தாள் என்ற கூற்றை இந்த ஆய்வு முறியடித்திருக்கிறது. இந்த ஆய்வினை டாவீசில் (USA) உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்திருக்கின்றனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை , “Female Hunters of the Early Americas என்ற தலைப்பில் Nov. 4 தேதியிட்ட in Science Advances ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.

பெண் உடல் ஆற்றல் குறைவானவள், எனவே பெண்ணை சில வேலைகளில் அமர்த்த முடியாது, ஆணுக்கு இணையான ஊதியம் கொடுக்க முடியாது என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தொன்மை முதலே பெண் ஆணுக்கு இணையாக, அல்லது கூடுதலாக உழைத்து வந்திருக்கிறாள், பிள்ளைகளை வளர்ப்பது, பசி தீர்ப்பதற்காக, வேட்டை கிடைக்காத காலத்தில் உணவு சேகரிப்பு செய்வது, கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்ற முன்னேற்றங்களை நிகழ்த்துவதாகப் பெண்ணின் உழைப்பு தீவிரமானதாக இருந்திருக்கிறது என்பதைத் தொன்மை மனிதர்கள் பற்றிய சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

வேட்டையாடுதல்: ஆண்களுக்கு இணையாக பெண்கள்

2018ல் பெருவில் உள்ள விலமாயா பட்ஜ்க்ஷா என்ற மலைமுகட்டில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின்போது, பிணக்குழி ஒன்றையும் அதில் வைக்கப்பட்டிருந்த வேட்டைக்கான ஆயுதங்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த உடல்தான் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் தொன்மையான உடலாகும். மரியாதைக்குரிய ஒருவர் இறக்கும்போது அவருடன் அவர் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து அடக்கம் செய்வது தொன்மை மனிதர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.

புதைக்கப்பட்ட மனிதர் ஒரு பெண் என்பதைத் தொன்மை மனிதர் உடல்கூறு ஆய்வாளர் (osteologist) உறுதி செய்தார். ஆனாலும், அது பற்றிய சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது. பின்னர், அந்த உடல் எச்சத்திலிருந்த பல் புரோட்டினை எடுத்து மரபணு ஆய்வு செய்தபோது, அந்த மரியாதைக்குரிய வேட்டைக்காரர் ஒரு பெண்மணி என்பது, சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானது.

'ஆஹா... ஒரே ஒரு பெண் வேட்டைக்காரர் உடலைப் பார்த்துவிட்டு தொன்மையில் பெண்கள் வேட்டையாடினார்கள்' என்று வரலாற்றைத் திரிக்கிறீர்களா என்று ஒருவர் கேள்வி கேட்கலாம்.

தற்போதைய பத்தாயிரம் ஆண்டுகளின் துவக்கக் காலத்திலும் (Holocene யுகம்) 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் 2 மில்லியன் ஆண்டுகள் வரையில் (Pleistocene யுகம்) உள்ள வடக்கு தெற்கு அமெரிக்காவின் தொன்மை சவ அடக்க விவரங்களைத் திரட்டினர்.

107 இடங்களில் புதைக்கப்பட்ட 429 தனி நபர் உடல்களின் விவரங்கள் கிடைத்தன. இவர்களில் 27 பேர்கள் உணவுக்கான பெரிய மிருகங்களை வேட்டையாடுவதைச் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கல்லறையில் கிடைத்த வேட்டை ஆயுதங்கள் காட்டின.

இந்த 26 பேரில் 11 பேர் பெண்கள், 15 பேர் ஆண்கள் என்பதும் கண்டறியப்பட்டது. இவற்றிலிருந்து பெண்கள், ஆதியில் வேட்டையாடுவதில் ஆணுக்கு இணையாகப் பங்கேற்றிருக்கின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.

இதனைத் தொடர்ந்து புள்ளிவிவர ஆய்வு முறையில் ஆய்வைத் தொடர்ந்தபோது வேட்டையில் ஈடுபட்ட தொன்மை மனிதர்களில் 30 முதல் 50 சதம் வரையில் பெண்கள் இருந்தனர் என்பது உறுதியாகியிருக்கிறது.

நமது மரபிலும் கூட கொற்றவை, துர்க்கை போன்ற தாய் கடவுளர்கள் மிருகங்களை அடக்கி ஆளும், கொல்லும் பெண்களாகவே காட்டப்பட்டிருக்கின்றனர்.

எப்படியிருந்தாலும், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று பெண்கள் விடுதலைக் கும்மியடித்து வெற்றிக்கொடி நாட்டும் நாள் தொலைவில் இல்லை.

https://scienceblog.com/519480/early-big-game-hunters-of-the-americas-were-female-researchers-suggest/

கட்டுரையாளர் குறிப்பு

உஷா பாரதி

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon